71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 5

மூன்று விதமான வினைகள்

பாடல் 5:
    
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்தப்
    பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை
    பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை
    ஏதங்கள் தீர நின்றான் இடைமருது இடம் கொண்டாரே

விளக்கம்:
ஏதங்கள்=துன்பங்கள்; புனிதன்=தூய்மை வடிவினன். தூய்மை வடிவினன் என்பது பெருமானின் எட்டு குணங்களில் ஒன்று. மற்ற குணங்களாவன, தன் வயத்தன், இயற்கை உணர்வினன், முற்றும் உணர்ந்தவன், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன், பேரருள் படைத்தவன், முடிவில்லாத ஆற்றல் உடையவன், வரம்பிலா இன்பம் உடையவன். தங்கள் மேலை ஏதங்கள் என்ற தொடருக்கு அடியார்களின் மேல் படர்ந்துள்ள மூன்று விதமான வினைகள், பிராரத்தம், ஆகாமியம் மற்றும் சஞ்சிதம் என்றும் விளக்கம் அளிப்பதுண்டு. ஆகாமியம் என்பது, முந்தைய வினைகளின் விளைவாகிய நன்மைகளையும் தீமைகளும் அனுபவிக்கும் சமயத்தில் நாம் செய்யும் செயல்கள் ஏற்படுத்தும் வினைகள் ஆகாமியம் என்றும் மேல்வினைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. முந்தைய பிறவிகளில் ஈட்டிய வினைகளின் தொகுதி தொல்வினை என்றும், அந்த தொல்வினைகளின் ஒரு பகுதியாக இந்த பிறப்பினில் நாம் அனுபவித்து கழிக்கப்படுவதற்காக ஒதுக்கப்படும் வினைகள் பிரார்த்த வினைகள் அல்லது ஊழ்வினைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பிறவியில் நாம் ஈட்டும் வினைகள், தொல்வினைகளுடன் எஞ்சிய தொகுதியுடன் சேர்ந்து இனி நாம் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு தொல்வினைகளாக மாறுகின்றது.   
    
பொழிப்புரை:
தேவர்கள் நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள பாடல்களை பாடி இறைவன் சிவபெருமனை புகழ்ந்து  பாடுகின்றார்கள்; இவ்வாறு தேவர்களால் புகழப்படும் பெருமான், தன்னைச் சுற்றி சிவகணங்கள் சூழ்ந்து நிற்க நடனம் ஆடுபவனாக உள்ளான். தூய்மை வடிவினனாகவும் எமது தந்தையாகவும் இருக்கும் பெருமான், தனது திருப்பாதங்களை துதித்துத் தொழும் அடியார்களின் மேலை வினைகளையும், அவற்றால் வரக்கூடிய துன்பங்களையும் தீர்ப்பவனாக விளங்குகின்றான். அத்தைகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com