71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 6

உடலில் புள்ளிகளை

பாடல் 6:
    பொறியரவு அரையில் ஆர்த்துப் பூதங்கள் பலவும் சூழ
    முறிதரு வன்னி கொன்றை முதிர்சடை மூழ்க வைத்து
    மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும்
    எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம் கொண்டாரே

 

விளக்கம்:
பொறி அரவு=தனது உடலில் புள்ளிகளைக் கொண்ட பாம்பு; முறி=தளிர்; மறி தரு=கீழ் மேலாக புரட்டும் தன்மை கொண்ட; எறி தரு புனல்=அலைகள் வீசும் காவிரி ஆறு 

பொழிப்புரை:
புள்ளிகள் உடைய பாம்பினைத் தனது இடையில் இறுக்கமாக கட்டிய பெருமானைச் சுற்றி ஆரவாரம் இடும் சிவகணங்கள் சூழ்ந்து இருக்கின்றன. இளம் தளிர்களாக விளங்கும் வன்னி மற்றும் கொன்றை மலர்களைத் தனது சடையில் சூடியுள்ள பெருமான், தனது வழியில் எதிர்ப்படும் எந்த பொருளையும் கீழ்மேலாக புரட்டிப் போடும் வேகத்துடன் வந்த கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றவர் ஆவார். தனது நீரின் மிகுதியால் அனைத்து திசைகளை நோக்கியும் அலைகள் வீசும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் சிவபெருமான் ஆவார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com