80. ஒன்று கொலாம் - பாடல் 10

இறந்த மணமகனை

பாடல் 10:

பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின்பல்
பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன
பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை 
பத்து கொலாம் அடியார் செய்கை தானே

விளக்கம்:

சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர்.. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்

பொழிப்புரை:

சிவபிரான் தனது உடலில் அணிந்திருக்கும் ஐந்தலைப் பாம்பின் கண்கள் மொத்தம் பத்து, பற்கள் பத்து. ஐந்தலைப் பாம்பின் விஷம் கக்கும் எயிறுகள் பத்து. அவரால் கயிலாய மலையின் கீழ் நசுக்குண்டு வருந்தியவன் தலை பத்து. அவரது அடியார்களின் செய்கைகள் பத்து.

முடிவுரை:

இந்த பதிகம் பாடி முடித்த பின்னர், உடலில் இருந்த விடம் நீங்கவே அப்பூதி அடிகளாரின் மூத்த மகன் உறக்கம் கலைந்து எழுபவன் போல் எழவே, அப்பர் பிரான் அவனுக்கும் திருநீறு அணிவித்து பின்னர் அமுது அருந்தினார். பாம்பு கடித்து இறந்த தனது மகன் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததற்கு மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக அப்பூதி அடிகள், வருத்தம் அடைகின்றார். அவரது வருத்தத்திற்கு காரணம், மூத்த மகனின் இறப்பினால் அப்பர் பிரான் அமுது அருந்துவது தாமதப்பட்டது என்பதே ஆகும்

அப்பர் பிரான் இந்த பதிகம் பாடி, அப்பூதி அடிகளாரின் மகனை உயிர்ப்பித்த பின்னர், திங்களூரில் எவரும் பாம்பு தீண்டி இறந்ததில்லை என்று கூறுகின்றார்கள். மேலும் அருகில் உள்ள ஊர்களில் எவரேனும் பாம்பு தீண்டினால் அவர்களது உடலினை திங்களூர் கோயில் முன்னர் வைத்து, இந்த பதிகத்தினை படிக்க, விடம் இறங்குவதும் இன்றும் நடைபெறும் அதிசயமாக சொல்லப்படுகின்றது. திருமருகல் தலத்தில் பாம்பினால் தீண்டப்பட்டு இறந்த மணமகனை உயிர்ப்பிக்க சம்பந்தப் பெருமான் அருளிய சடையாய் எனுமால் என்று தொடங்கும் பதிகமும், இந்த பதிகத்தைப் போலவே இந்தளம் பண்ணில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com