81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 1

சொற்களை மறவாது
81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 1

முன்னுரை:

திங்களூரில் அப்பூதி அடிகளாரின் பாம்பு கடித்து இறந்த மகனை, ஒன்று கொலாம் என்ற பதிகம் பாடி, இறைவன் அருளால், பிழைப்பித்த திருநாவுக்கரசர், அதன் பின்னர் அருகில் உள்ள பழனம் என்று அழைக்கப்படும் தலம் வந்தடைந்தார். பழனத்து இறைவனைப் புகழ்ந்து பாடும், சொன்மாலை பயில்கின்ற என்று தொடங்கும் இந்த பதிகத்தைப் பாடினார். இந்த பதிகத்தின் கடைப் பாடலில், அப்பூதி அடிகளை சிறப்பித்து குறிப்பிடுவதை சேக்கிழார் பெரிய புராணத்தில் நமக்கு உணர்த்துகின்றார்.

புடை மாலை மதிக் கண்ணிப் புரிசடையார்
                                                                                  பொற்கழல் கீழ்
அடை மாலைச் சீலமுடை அப்பூதி அடிகள் தமை
நடை மாணச் சிறப்பித்து நன்மைபுரி தீந்தமிழின்
தொடை மாலைத் திருப்பதிக சொல்மாலை பாடினார். 

சிவபிரானின் திருவடிக்கீழ் சென்று அடைதற்கு உரிய தன்மை படைத்த அப்பூதி அடிகள் என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுகின்றார். அந்தணராகிய அப்பூதி அடிகள் தினமும் வேள்வி செய்த ஒழுக்கம் இந்த பதிகத்தில் குறிப்பிடப்படுகின்றது என்பதையும் நமக்கு சேக்கிழார் உணர்த்துகின்றார். நடை=நாள்தோறும் மேற்கொண்டு வந்த ஒழுக்கம். மாண்பு=மாண்பினை வெளிப்படுத்தும் விதமாக: தொடை மாலை=அழகிய சொற்களால் தொடுக்கப் பட்ட மாலை.    

சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான்
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கு முடிச் சென்னிப்
பொன்மாலை மார்பன் என் புதுநலம் உண்டு இகழ்வானோ

விளக்கம்:
பன்மாலை வரி வண்டு=வரிசை வரிசையாக கோடுகள் கொண்ட வண்டுகள்; 

இனிமையான சொற்களைக் கொண்ட குயிலினை தூது அனுப்ப அப்பர் நாயகி முடிவு செய்கின்றாள். ஒரு தூதனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்கள், இனிமையான சொற்கள் மற்றும் சொன்ன சொற்களை மறவாது இருக்கும் தன்மை. குயிலின் இனிமையான குரல் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அழகாக இனிமையாக கூவுவது குயிலுக்கே உரித்தான குணம். பயிலுதல் என்றால் இடைவிடாது செய்யும் செயலைக் குறிக்கும். சொல்மாலை பயிலுதல் என்று சொன்ன சொற்களை மறுபடியும் மறுபடியும் சொல்லிச் சொல்லி, செய்தியை மனதினில் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை உடைய குயிலினம் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். எவரிடம் தூது செல்லவேண்டும், அவர் எங்கிருக்கின்றார் என்பதை குயிலுக்கு உணர்த்தும் முகமாக, வண்டுகள் பண்பாடும் இடம் என்றும் பழனத்தான், என்றும் இடமும் தூது எவருக்காக என்றும் இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.  

குயிலினை தூதுக்கு அனுப்புவது தமிழ் இலக்கிய மரபு. தனது தலைவனிடம் தூது சென்று அவன் வருமாறு குயில் கூவ வேண்டும் என்று பொருள் பொதிந்த பாடல்கள் மணிவாசகர் இயற்றிய திருவாசகத்திலும் ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி பாசுரங்களிலும் காணப்படுகின்றன. இந்த இரண்டு தொகுப்பின் முதல் பாடல்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. சங்கு என்ற சொல் இங்கே வெண்முத்து போன்று வெண்மை நிறத்தில் ஒளிரும் வளையல்களை குறிக்கும். பன்னி=திரும்பத் திரும்ப; இருவரும் குயிலினை நோக்கி, மேற்கொண்டுள்ள தூதினைத் திறமையாக முடித்து, அந்த தூதின் விளைவாக  தலைவன் வருமாறு செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

    கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
    பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கு அப்பால்
    சோதி மணிமுடி சொல்லில் சொல் இறந்து நின்ற தொன்மை
    ஆதி குணம் ஒன்று இல்லான் அந்தம் இலான் வரக்கூவாய்

    மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன்
                                         மணிமுடி மைந்தன் தன்னை
    உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
    புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில்
                                         வாழும் குயிலே
    பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன்
                                         வரக்கூவாய் 

   
பொழிப்புரை:

சொல் வரிசையை தவறாமல் கூவும் குயில் இனங்களே, வரிசை வரிசையாக கோடுகள் பொருந்திய வண்டுகள் பண் பாடும் பழன நகரில் உறையும் சிவபெருமான், மாலைப் பகுதியின் முற்பகுதியில் ஒளி வீசும் பிறைச் சந்திரனைத் தனது சடை முடியில் தாங்கியவனும், பொன் போன்ற கொன்றை மாலையை மார்பில் சூடியவனும் ஆகிய சிவபெருமான், இப்போது நான் அவனிடம் காதல் கொண்டுள்ள எனது அன்பினை உணர்ந்தாலும் அதனை பொருட்படுத்தாது அலட்சியம் செய்வானோ?  குயிலே நீ தான் எனது அன்பின் ஆழத்தை அவனுக்கு உணர்த்தி அவன் என்னை புறக்கணிக்காதவாறு, எனது நிலையை அவனுக்கு எடுத்துரைக்க வேண்டும்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com