81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 2

தூது சென்று
81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 2

பாடல் 2:
கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள்
                                                                         நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டோவாப் பழனத்தான்
வண்டுலாம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர்
                                                                        வண்ணம்
கொண்ட நாள் தான் அறிவான் குறிக் கொள்ளாது
                                                                        ஒழிவானோ

 

விளக்கம்:

சிவபிரான் பால் காதல் கொண்ட பெண்களின் வரிசையில் புதியவளாகச் சேர்ந்துள்ள தனது காதலை, சிவபிரான் இகழாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கவலையில் இருந்த அப்பர் நாயகியின் கற்பனை விரிகின்றது. தான் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, குளத்தில் மூழ்க இருந்த தன்னை சிவபிரான் காப்பாற்றி கரை சேர்த்ததாக கற்பனை செய்கின்றாள். அவ்வாறு கரை சேர்த்தபோது சிவபிரான் தன்னைத் தழுவிக் கொண்டதாக கற்பனை செய்யும் அப்பர் நாயகி, அதனை இனிய அனுபவமாக நினைத்து மகிழ்கின்றாள். அந்த கற்பனைக் காட்சியின் தொடர்ச்சியாக இந்த பாடல் அமைந்துள்ளது. அந்த கற்பனைக் காட்சியில் அவளுக்கு, தான் குளித்த இடமும், அந்த இடத்தில் வளர்ந்திருந்த மலர்களும் தெரிகின்றன. எனவே, தான் சிவபிரானுடன் இணைந்திருந்த காட்சியினைக் கண்ட, நீர் நிலைகளில் வளரும் மலர்களும், அதனருகே காணப்படும் மலர்களும் தூது செல்வதற்காக  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.   

கண்டகம்=நீர் முள்ளி; முண்டகம்=தாமரை; கைதை=தாழை; நெய்தல்=வெள்ளாம்பல் மலர்; 

பொழிப்புரை:
நீர் முள்ளிகளே, தாமரை மலர்களே, தாழம்பூக்களே, வெள்ளாம்பல் மலர்களே, அடியார்கள் சிவபிரானைப் புகழ்ந்து பாடும் பாடல்கள் இடைவிடாது ஒலிக்கும் பழனம் நகரில் உறையும் சிவபெருமான், முன்னர் திரிபுரத்தை எரித்த பின்னர் பண்டரங்கம் என்று அழைக்கப்படும் கூத்தினை மகிழ்ந்து ஆடியவன்; முன்னொரு நாள் வண்டுகள் உலாவும் குளிர்ந்த குளத்தில் நான் மூழ்கிய போது, எனது உடலைத் தழுவிக் கொண்டு என்னை காப்பாற்றி கரை சேர்த்த சமயத்தில் எனது மேனியின் வண்ணத்தினை அறிந்து கொண்ட சிவபெருமான், அந்த நாளை மறந்து விட்டு, என்னை பொருட்படுத்தாது இருப்பானோ? கருணை உள்ளம் கொண்டு அன்று காப்பாற்றிய சிவபெருமான், அந்த நாளை மறக்கமாட்டான்; என்னையும் நினைவில் வைத்திருப்பான். எனவே நீங்கள் எல்லோரும் தூது சென்று அவனுக்கு, நான் அவனை நினைத்து ஏங்கும் நிலையினை எடுத்து உரைக்கவேண்டும்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com