81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 7

திரிபுரங்கள் எரிந்தன
81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 7

பாடல் 7:

துணை ஆர முயங்கிப் போய்த் துறை சேரும்
                                                                         மட நாராய்
பணை ஆரவாரத்தான் பாட்டு ஓவாப் பழனத்தான்
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடி
                                                                        செய்த
இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு
                                                                       இகழ்வானோ

 
விளக்கம்:

கணை ஆர=அம்பு பொருந்தி தங்க; அம்பினை பயன்படுத்தாமல் சிரித்தே திரிபுரங்களை எரித்த செய்கை இங்கே குறிப்பிடப்படுகின்றது. இறைவன் திரிபுரத்தவர்களுடன் போருக்குச் சென்ற போது, வில்லில் பூட்டப்படிருந்த அம்பினைப் பயன்படுத்தாமல் தனது சிரிப்பினால் மூன்று நகரங்களையும் சாம்பல் பொடியாக மாற்றிய நிகழ்ச்சி இங்கே, அம்பு வில்லில் தங்கி இருக்கும்போதே. திரிபுரங்கள் எரிந்தன என்ற செய்தியின் மூலம் குறிக்கப்படுகின்றது. இந்த செய்தி பல தேவாரப் பதிகங்களிலும் திருவாசகத்திலும் இடம் பெறுகின்றது. ஞான சம்பந்தப் பெருமான் அருளிய வீழிமிழலைப் பதிகத்தின் ஒரு பாடல் (1.124.6) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அன்றினர்=பகைவர்; அரி=சிங்கம்; அரிய தவம் செய்து வரமாகப் பெற்ற மூன்று கோட்டைகளும் ஒரு நொடியினில் எரிந்து சாம்பலாக மாறுமாறு புன்னகை புரிந்தவன் (சிறுமுறுவல்) என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். 

    அன்றினர் அரி என வருபவர் அரிதினில்
    ஒன்றிய திரிபுரம் ஒரு நொடியினில் எரி
    சென்று கொள் வகை சிறுமுறுவல் கொடு ஒளிபெற
    நின்றவன் மிழலையை நினைய வலவரே  

நாரையை தூது செல்ல அழைக்கும் அப்பர் நாயகி, துணையுடன் கூடி, துணையினை மகிழச் செய்த நாரையே என்று அழைக்கின்றார். தனது கடமையை உணர்ந்து, தனது துணையினை மகிழச் செய்த ஆண் நாரை, தனது பிரிவாற்றலின் கொடுமையை நன்கு உணர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கை இந்த பாடலில் தொனிப்பதை நாம் காணலாம். முந்தைய பாடல்களில் குறிப்பிட்டபட்ட தூது ஏதும் பயன் அளிக்காத நிலையில், அப்பர் நாயகி, துணையின் வருத்தத்தை போக்கக்கூடிய கடமையை உணர்ந்த ஒரு ஆண் தூதுவனாகச் செல்வது பயன் அளிக்கும் என்ற நம்பிக்கையில் ஆண் நாரையின் உதவியை நாடுவது இயற்கையான செயலாக காணப்படுகின்றது. துணை ஆர முயங்குதல்=துணை மகிழ்ந்து இருக்கும்: ஓவா=ஓயாது ஒலிக்கும்;    
 
பொழிப்புரை:

உனது துணையான பெண் நாரையின் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைவுற்று இருக்கும் வண்ணம் துணையுடன் கூடி மகிழ்ந்து பின்னர் நீர்த்துறையை அடையும் இள நாரையே, முரசங்களின் ஆரவார ஒலியும், பாடல்களின் ஒலியும் இடைவிடாது ஒலிக்கும் பழனத்தின் தலைவனும், பரந்த ஆகாயத்தில் திரிந்த மூன்று கோட்டைகளையும், தான் கையில் ஏந்தியிருந்த வில்லில் பொருந்திய அம்பு, பொருத்தப்பட்ட நிலையிலே இருந்தபோதும், தனது சிரிப்பினால் மூன்று கோட்டைகளையும் பொடி செய்தவனும் மார்பின் இரண்டு பக்கங்களிலும் தொங்கும் மாலைகளையும் அணிந்தவனான சிவபெருமான், எனது அழகினையும் இனிமையான தன்மையையும் பொருட்படுத்தாது அலட்சியம் செய்வானோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com