81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 8

செல்வ வளமும் கொண்ட
81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 8

பாடல் 8:

கூவை வாய் மணி வரன்றிக் கொழித்தோடும்
                                                                     காவிரிப்பூம்
பாவை வாய் முத்து இலங்கப் பாய்ந்தாடும்
                                                                    பழனத்தான்
கோவை வாய் மலைமகள் கோன் கொல்லேற்றின்
                                                                   கொடி ஆடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது
                                                                  உளதே

விளக்கம்:

தலைவனின் பிரிவால் வருந்தும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் அப்பர் நாயகி, அந்த பிரிவு எவ்வளவு கொடியதாக உள்ளது என்பதை இங்கே உணர்த்துகின்றாள். தனது காதலன் சிவபிரானின் பிரிவால் வருந்தும், தனக்கு ஒவ்வொரு கணமும் மிகவும் நீண்டு, எளிதில் கழியாமல், தன்னைத் துன்புறுத்துவதாக அப்பர் நாயகி இங்கே கூறுகின்றாள். முன்னம் தான் முயன்ற தூதுகள் பலன் ஏதும் அளிக்காமையால், நாகணவாய்ப் பறவையை தூதுக்கு தேர்ந்தெடுக்கின்றாள். சிவபெருமான் வைத்துள்ள இடபக் கொடியின் மேல் சார்த்தப்பட்டுள்ள பூவினைப் போன்று இனிமையாக இருக்கும் பூவை (நாகணவாய்ப் பறவை) என்று பூவை என்ற சொல்லினை வேறு வேறு பொருள் அளிக்குமாறு நயமாக அப்பர் பிரான் இங்கே கையாண்டுள்ளார். பூக்கள் காண்பவரின் கண்களுக்கு இன்பம் அளிக்கும். நாகணவாய்ப் பறவைகள், தங்கள் குரலினைக் கேட்பவர்க்கு இன்பம் அளிக்கும். பூவைகாள்=நாகணவாய்ப் பறவைகள்; மழலைகாள்=மழலை போன்று இனிமையாக பேசும்   

கூவை என்ற சொல் குவை என்றார் சொல்லின் திரிபு, குவியல், திரள் என்று பொருள். வரன்றி=வாரிக் கொண்டு வருதல். தான் வரும் வழியில் பல இடங்களிலும் கிடந்த முத்தினையும், மணியையும் வாரிக் கொண்டு காவிரி நதி வருவதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இந்த நிலை, நமக்கு சுந்தரரின் பரவும் பரிசு என்று தொடங்கும் பதிகத்தினை நினைவூட்டும் (பதிக எண்: 7.77). இந்தப் பதிகத்தின் பல பாடல்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காவிரி நதியின் தோற்றத்தை சுந்தரர் விவரிக்கின்றார், பதிகத்தின் ஆறாவது பாடல், காவிரி நதி மாணிக்கங்களையும், முத்துக்களையும், பொன்னையும் வாரிக் கொண்டு வருவதாக கூறுகின்றார்.

    மலைக் கண் மடவாள் ஒரு பாலாய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்
    சிலைக்கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய் தீர்த்தன் நீ
    மலைக் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு
    அலைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ .

 
பொழிப்புரை:

பல இடங்களிலிருந்தும் மணிகளை வாரிக் கொண்டு வந்து இரு கரைகளில் சேர்க்கும் காவரி நதியில், தங்களது முத்து போன்ற பற்கள் விளங்கித் தோன்றுமாறு பெண்கள் பாய்ந்து நீராடுகின்றார்கள். இவ்வாறு நீர்வளமும் செல்வ வளமும் கொண்ட திருப்பழனத்துப் பதியில் உறைபவனும் கொவ்வைக் கனி போன்று சிவந்த வாயினை உடைய மலைமகளின் கணவனும் ஆகிய சிவபிரான் வைத்திருக்கும் இடபக் கொடியில் காணப்படும் பூவினைப் போன்று, இனிமையாக மழலைமொழி பேசும் நாகணவாய்ப் பறவைகளே, எனது தலைவனாகிய சிவபிரானின் பிரிவாற்றலால் ஒவ்வொரு கணமும் மிகவும் நீண்டு, விரைவில் கழியாமல் என்னைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com