81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 9

காதலின் காரணமாக

பாடல் 9:

புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான்
                                                              மணி நாகப்
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்ப
                                                             உலகெல்லாம்
கள்ளியேன் இவர்க்கு என் கனவளையும் கடவேனோ

விளக்கம்:

புள்ளுயர்த்தான்=அன்னப்பறவையை தனது கொடியில் வைத்துக் கொண்டு உயர்ந்த இடத்தை அதற்கு அளித்த பிரமன். நாகப் பள்ளியான்=நாகத்தை படுக்கையாகக் கொண்ட திருமால். 

பலவகையான பறவைகளை தூதாக அனுப்பிய அப்பர் நாயகி, தான் எதிர்பார்த்த விளைவு ஏதும் விளையாத காரணத்தால், சிவபெருமானின் அருகில் இருக்கும் புள்ளிமான் மற்றும் பாம்பினை தூதாகச் செல்லுமாறு அழைக்கின்றாள். சிவபிரானுக்கு வேண்டியவர்களாக எப்போதும் அவரது அருகில் இருப்போர் தூது சென்றால், தனது எண்ணம் கைகூடும் என்ற நம்பிக்கையில் செய்யும் இந்த செயல், அப்பர் நாயகி சிவபிரான் பால் கொண்டுள்ள காதலின் தீவிரத்தை உணர்த்துகின்றது. கனவளை என்று இங்கே நாயகி கூறுகின்றாள். காதலின் ஏக்கத்தில் உடல் இளைத்த காரணத்தால், வளையும் தாங்க முடியாத சுமையாக மாறியது போலும். கனவளையும் கடவேனோ என்று, தனது உடல் மெலிந்து வளையல்கள் கழலும் அளவுக்குத் தான் சிவபிரான் பால் கொண்டுள்ள காதல் தீவிரமாக இருக்க வேண்டும் என்று தனது விருப்பத்தையும் அப்பர் நாயகி இங்கே உணர்த்துகின்றாள். மேலும் அவ்வாறு நேர்வதற்கு முன்னர், சிவபிரான் தன்னுடன் கூடி, தனது ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில், தூது பயன் உள்ளதாக இருக்கவேண்டும் என்ற ஆசையும் சொல்லாமல் சொல்லப்படுகின்றது.     

உள்ளத்தில் கள்ளத்தன்மை கொண்டு, சிவபெருமானை முழுமனதோடு தியானிக்காத தன்னை கள்ளியேன் என்று அப்பர் நாயகி கூறிக்கொள்வதை நாம் உணரலாம். நமது வினைகள் கழிந்தால், நாம் பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, இறைவனுடன் சென்று சேர்கின்றோம்; பின்னர் அவரிடமிருந்து பிரியாமல் பேரானந்தத்தில் திகழ்கின்றோம். எனவே அந்த நிலையினை அடையவேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். தன்னை தியானம் செய்பவர்களின் வினைகளைக் களையும் சிவபிரான், தனது வினைகளைக் களையாததன் காரணம் தன்னுடைய தவறு தான், இறைவனது அல்ல என்று உணர்த்தும்  சொற்கள் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கின்றன. நமது விருப்பங்கள் ஈடேறாவிட்டால், நாம் உடனே இறைவனைத் தான் குற்றம் சொல்கின்றோம். நமது பக்தியில் உள்ள குறை நமக்குத் தெரிவதில்லை. உலகத்தவர் அனவைரும், தன்னைத் தியானிப்பவர்களின் வினைகளைக் களைபவர் சிவபிரான் என்று கூறும் நாயகியின் சொற்கள், நாம் இறைவனை முழு மனதோடு நினைத்து நினைந்து உருகினால், நமது இடர்கள் தீர்க்கப்படுவது மட்டும் அல்லாமல், வினைகளும் களையப்படும் என்று இங்கே உணர்த்தப்படுகின்றது.   

புள்ளிமான் பொறி அரவம் என்ற சொற்களை, பழனத்தான் என்ற சொல்லுடன் இணைத்து, புள்ளி மானையும், பாம்பினையும் தன்னுடன் கொண்டுள்ள சிவபெருமான் என்றும் பொருள் கொள்ளலாம். இதே பதிகத்தின் முந்தைய பாடல்களில் பல பறவைகளை அழைத்து, தனது ஏக்கத்தினை வெளிப்படுத்தி, சிவபிரானிடம் தூது செல்லுமாறு வேண்டியமையால், தூதுக்கு மானையும் நாகத்தையும், அப்பர் நாயகி அழைக்கின்றாள் என்று கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.          

பொழிப்புரை:

புள்ளிகளை உடைய மானே, புள்ளிகளை படத்தில் கொண்டுள்ள நாகமே, அன்னப் பறவையின் உருவம் எழுதப்பட்டுள்ள கொடியினை உடைய பிரமனும், ஒளி வீசும் மணிகளை உடைய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டுள்ள திருமாலும், தொழுது துதிக்கும் சிவபெருமான், தன்னைத் தியானித்து உள்ளம் உருகுபவர்களின் வினைகளைத் தீர்க்க வல்லவன் என்று உலகத்தவர் உரைக்கின்றார்கள். உள்ளத்தில் வஞ்சனை கொண்டு, இறைவனை முழுமனதுடன் நினைக்காத எனது வினைகள் தீரவில்லை; சிவபிரான் பால் நான் கொண்டுள்ள காதலின் காரணமாக எனது உடல் மிகவும் இளைத்து, நான் அணிந்திருக்கும் வளையல்கள் எனக்குச் சுமையாகத் தோன்றுகின்றன. அவர் என்னைக் கூடாததால், எனது ஏக்கம் மேலும் அதிகமாகி, எனது உடல் மேலும் இளைத்து, எனது வளையல்கள் இழக்கும் நிலையை அடைவேனோ?. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com