81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 10

என்னை வஞ்சித்து
81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 10

பாடல் 10:

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே
                                                               ஆயிடினும்
பஞ்சிக் கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும்
                                                               பழனத்தான்
அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடு இயையே

 
விளக்கம்:

இராவணனின் கயிலை நிகழ்ச்சியையும், சிவபிரான் அவனுக்கு அருள் புரிந்ததையும், பதிகத்தின் கடைப்பாடலில் குறிப்படும் பழக்கத்திலிருந்து அப்பர் பிரான் இங்கே வழுவுகின்றார். அப்பூதி அடிகளுக்கு சிவபிரான் கருணை புரிந்ததை நோக்கில், இராவணன் பெற்ற பேறு சிறப்புடையது அல்ல என்ற எண்ணத்தில், அப்பூதி அடிகளை குறிப்பிடும் அப்பர் பிரான், இராவணனை இங்கே குறிப்பிடவில்லை போலும்.

வேள்விகள் செய்வதன் மூலம் கலி புருடனின் தாக்கத்தை குறைக்கலாம் என்ற நம்பிக்கை அப்பர் காலத்திலும் இருந்து வந்தது இந்த பாடலின் மூலம் தெரிகின்றது. ஞான சம்பந்தப் பெருமானும், தனது தில்லைத் திருப்பதிகத்தின் (பதிக எண்:1.80) முதல் பாடலில், வேள்விகள் வளர்த்து கலியின் செய்கையை வென்ற மறையவர்கள் என்று தில்லையில் வாழ்ந்த அந்தணர்களை குறிப்பிடுகின்றார். வேதங்களைக் கற்று, கற்ற கல்விக்குத் தக்கவாறு வேள்விகள் வளர்த்த அந்தணர்கள் செய்கையால் கலியை வரவிடாமல் வென்றார்கள் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.

    கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாரமே 
    செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
    முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
    பற்றா நின்றாரைப் பற்றா பாவமே 

கலி கடிந்த கையார் என்றும்(3.43.5), கலியை வென்ற வேதியர்கள் என்றும்(3.119.7), கலி கடி அந்தணர் என்றும்(7.16.4), சிந்தையினார் கலி காக்கும் என்றும்(7.88.2), அந்தணர்கள் தாங்கள் வளர்த்த வேள்விகள் மூலம் கலியின் கொடுமையை அடக்கிய விதம் பல தேவாரப் பதிகங்களில் கூறப்பட்டுள்ளது.   

கோடு இயைதல் என்பது, தலைவனை விட்டு பிரிந்திருக்கும் தலைவி, தலைவனுடன் கூடுவது எந்நாளோ என்ற கவலையில், செய்யும் ஒரு செயல். தனது கண்களை மூடிக்கொண்டு, கால் கட்டை விரலால் தரையில் கோடுகள் இடுவது, அல்லது சிறு சிறு வட்டங்கள் போடுவது வழக்கம். இவ்வாறு போடப்படும் கோடுகள் இணைந்தால், தலைவன் தன்னுடன் கூடுவான் என்றும், வரைந்த சிறு வட்டங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் வந்தால் தலைவன் தன்னுடன் கூடுவான் என்றும் நம்புவதுண்டு. எனவே இவ்வாறு கோடுகள் இடும்போதும், வட்டங்கள் வரையும் போதும், அந்த கோடுகள் இயைய வேண்டும், அதாவது இணைய வேண்டும் என்றும் வட்டங்கள் இரட்டைப்படையாக கூட வேண்டும் என்று விரும்புவதும், அந்த விருப்பம் ஈடேற வேண்டும் என்று வேண்டுவதும் இயற்கை. எனவே தான், அப்பர் நாயகி தான் வரையும் கோடுகள் இணைய வேண்டும் என்று தனது விருப்பத்தை வேண்டுகோளாக, கோடு இயையே என்று இங்கே இறைவனை வேண்டுகின்றாள். 

நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களிலும் ஆழ்வார்கள், கூடல் கூட வேண்டும் என்று தங்களது விருப்பத்தை வேண்டுகோளாக விடுப்பதை நாம் காணலாம். திருமழிசை ஆழ்வார் அருளிய ;நான்முகன் திருவந்தாதியின் 39ஆவது பாடலில் இத்தகைய வேண்டுகோள் இருப்பதை நாம் உணரலாம்.

    அழைப்பான் திருவேங்கடத்தானைக் காண
    இழைப்பன் திருக்கூடல் கூட மழைப்பேர்
    அருவி மணி வரன்றி வந்திழிய யானை
    வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு  .   

நாச்சியார் திருமொழியின் நான்காவது திருமொழியின், (தெள்ளியார் பலர் என்று தொடங்கும் பிரபந்தம்) அனைத்துப் பாடல்களும், ஆண்டாள் நாச்சியாரின், கூடல் கூட வேண்டும் என்ற விருப்பம் தெரிவிக்கப்படுகின்றது. இந்த திருமொழியின் அனைத்துப் பாடல்களிலும் ஆண்டாள், கூடிடுகூடலே என்று தனது விருப்பத்தை தெரிவிக்கின்றார். இந்தத் திருமொழியின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார்
    வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
    பள்ளி கொள்ளுமிடத்து அடி கொட்டிட
    கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே

இதே கருத்து கம்பராமாயணத்தில் இரண்டு பாடல்களிலும், பல சங்க இலக்கியப் பாடல்களிலும் காணப்படுகின்றது.  
முந்தைய பாடலில் எனது வளையல்களை நான் இழக்க நேரிடுமோ என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தும் அப்பர் நாயகி, இங்கே தனது வளையல்கள் கவரப்பட்டு விட்டன என்று கூறி, தான் ஏங்கித் தவிக்கும் நிலையினை இறைவனுக்கு உணர்த்தி, கோடு இயைய வேண்டும் என்று வேண்டுவதை நாம் காணலாம். சேவடியாய் என்று கூறுவதை சேவடியாக இருந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம், செவ்விய திருப்பாதங்களை உடையவன் என்றும் எடுத்துக் கொள்ளலாம். குஞ்சி=குடுமி, தலயில் உள்ள முடிக் கற்றை.          

பொழிப்புரை:

எனது வளையல்களைக் கவர்ந்து என்னை வஞ்சித்து, என்னை பிரிந்துவிட்ட எனது தலைவன் சிவபிரான்,  செம்பஞ்சு போன்ற சிவந்த கால்களையும் வெண்பஞ்சு போன்ற சிறகுகளையும் உடைய அன்னங்கள் கூட்டமாக ஆரவாரம் செய்யும் பழனத்துப் பெருமான்,   வாராமால் போனாலும் போகலாம். எனவே, பயத்தினால் கலி வருந்தி மெலியுமாறு வேள்விகள் செய்யும் அப்பூதி அடிகளின் தலைமுடியில் பூவாகத் தனது சேவடிகளை வைத்த சிவபெருமானே, நான் வரையும் கோடுகள் இணையுமாறு அருளவேண்டும். அவ்வாறு கோடுகள் இணைந்தால், எனது தலைவன் சிவபிரான் என்னுடன் வந்து கூடுவான் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படும்.

முடிவுரை:

வடமொழியில் உள்ள காளிதாசனின் கவிதைகள் தலைவனின் பிரிவால் ஏங்கித் தவிக்கும் தலைவியின் உணர்வுகளை அழகாக பிரதிபலிப்பது போன்று, நமது தீந்தமிழ் மொழியில்  நால்வர் பெருமானர்கள் அருளியுள்ள பாடல்களும், இறைவன் பால் அவர்கள் கொண்டிருந்த காதலின் தீவிரத்தை உணர்த்தும் அழகினை நாம் காணலாம். இத்தகைய பாடல்கள், நாமும் எவ்வாறு, உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பதியாக உள்ள, பசுபதியை நினைத்து உருகி, அவனைச் சென்று அடைவதே நமது நோக்கமாக இருக்கவேண்டும் என்பதையும் உணர்த்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com