82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 1

மகனை உயிர்ப்பித்த
82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 1

முன்னுரை:

திங்களூர் சென்று அப்பூதி அடிகளாரை சந்தித்து, பின்னர் விடம் தீண்டிய அவரது மகனை உயிர்ப்பித்த பின்னர், அப்பர் பிரான் திருப்பழனம் வந்தடைந்தார். பழன நகரில் உறையும் சிவபெருமானை, சொன்மாலை பயில்கின்ற என்று தொடங்கும் பதிகம் பாடி பணிந்த பின்னர், சோற்றுத்துறை அடைகின்றார். சோற்றுத்துறையில் தங்கியவாறே, திருப்பணிகள் செய்து பல பதிகங்கள் பாடினார். பொய்விரா மேனி தன்னை (4.41) என்று தொடங்கும் நேரிசைப்பதிகம், காலை எழுந்து என்று தொடங்கும் விருத்தப் பதிகம் (4.85), கொல்லை ஏற்றினர் என்று தொடங்கும் குறுந்தொகைப் பதிகம் (5.33), மற்றும் வானவர் தானவர் என்று தொடங்கும் திருத் தாண்டகப் பதிகம் (6.44) ஆகியவை நமக்கு கிடைத்துள்ள பதிகங்கள் ஆகும். இதனைக் குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்தானங்கள் என்ற வடமொழிச் சொல் தானங்கள் என்று இங்கே மாற்றப்பட்டுள்ளது. தானங்கள் என்றால் இறைவன் உறையும் இடங்கள் என்று பொருள். தழும்பு என்றால் மாறாத வடு என்று பொருள். இறைவன் பால் மாறாமல் நிலையாக இருக்கும் அன்பினோடு, அவனது திருத்தலங்கள் பலவும் அப்பர் பிரான் சென்றதாக சேக்கிழார் கூறுகின்றார். 

    எழும் பணியும் இளம் பிறையும்
                 அணிந்தவரை எம்மருங்கும்
    தொழும் பணி மேற்கொண்டு அருளித்
                திருச் சோற்றுத் துறை முதலாத்
    தழும்புறு கேண்மையில் நண்ணித்
                தானங்கள் பல பாடிச் 
    செழும் பழனத்து இறை கோயில்
                திருத்தொண்டு செய்திருந்தார்


பாடல் 1:


    காலை எழுந்து கடிமலர் தூயன
                              தாம் கொணர்ந்து
    மேலை அமரர் விரும்பும் இடம்
                             விரையால் மலிந்த
    சோலை மணம் கமழும் சோற்றுத்துறை
                             உறைவார் சடை மேல்
    மாலை மதியம் அன்றோ எம் பிரானுக்கு
                             அழகியதே


விளக்கம்:


தூயன=முறைப்படி தூய்மையாக உள்ள மலர்கள். இந்த பாடலில் அப்பர் பிரான் மலர்களைத் தேர்ந்தெடுத்து இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கூறுகின்றார். அதிகாலையில் எழுந்தால் தானே, வண்டுகள் சுவைக்கும் முன்னர் நாம் மலர்களைப் பறிக்க முடியும். எனவே தான் காலை எழுந்து தூய்மையானதும் நறுமணங்கள் வீசுவதுமாகிய மலர்களை பறிக்க வேண்டும் என்று கூறும் அப்பர் பிரான் மலர்களின் தூய்மையினை தில்லைப் பதிகத்தின் ஒரு பாடலில் (5.1.2) விளக்குகின்றார். முழுவதும் மலராத மொட்டுக்களை நீக்க வேண்டும் என்றும், வாடிய மலர்களை ஆராய்ந்து கண்டுகொண்டு நீக்கவேண்டும் என்று இங்கே கூறுகின்றார். சுரும்பு என்றால் வண்டு என்று பொருள். வண்டுகள் சுவைக்கும் முன்னர் மலர்களை பறிக்க வேண்டும் என்றும் இங்கே கூறப்படுகின்றது.

    அரும்பு அற்றப்பட ஆய்மலர் கொண்டு நீர்
    சுரும்பு அற்றப்பட தூவித் தொழுமினோ
    கரும்பு அற்றச் சிலை காமனைக் காய்ந்தவன்
    பெரும்பற்றப் புலியூர் எம் பிரானையே

மலர்களைப் பறித்து வழிபடுவதில், மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர், தில்லையில் வாழுந்து வந்த  முனிவர் வியாக்ரபாதர். வண்டுகள் பூக்களில் உள்ள தேனைச் சுவைப்பதால், மலர்களின் தூய்மை குறைகின்றது என்று எண்ணிய முனிவர் அத்தகைய பூக்கள் இறைவனின் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்தார். அதனால் வண்டு சுவைக்கும் முன்னரே பூக்களைப் பறிக்க ஆசைப்பட்டார். அதற்கு வசதியாக விடியற்காலை இருட்டினில் தனக்கு கண்கள் நன்றாக தெரிய வேண்டும் என்றும், தான் மரத்தினில் ஏறும்போது பனியினால் நனைந்து இருக்கும் மரங்களின் தண்டுகளும் கிளைகளும், வழுக்காமல் இருக்க வேண்டும் என்றும் விரும்பிய முனிவர், தனக்கு புலிக்கு உள்ளது போன்ற கண்களும் கால்களும் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். இறைவன் அருளால் அவரது ஆசை நிறைவேறியது. அன்று முதல் அவர் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். வியாக்ரம் என்றால் வடமொழியில் புலி என்று பொருள். பெரும்பற்று கொண்டு புலிக்கால் முனிவர் இறைவனை வழிபட்டமையால், இந்த தலத்திற்கு பெரும்பற்றப் புலியூர் என்ற பெயர் வந்தது. இறைவனை வழிபட உதவும் மலர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று கூறும் அப்பர் பிரானுக்கு, வியாக்ரபாதர் நினவு வந்தது இயற்கையே. அன்னம் பாலிக்கும் என்று தொடங்கும் இந்த பதிகத்தின் மற்ற பாடல்களில் தில்லை என்றும், அம்பலம் என்றும், தில்லைச் சிற்றம்பலம் என்றும் சிற்றம்பலம் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த பாடலில் மட்டும் வியாக்ரபாதர் செய்த வழிபாட்டினை நினைவூட்டும் வகையில் பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரினை பயன்படுத்துகின்றார்.  

மேலும் நாண்மலர் என்று, அன்று பூத்த மலர்களை அப்பர் பிரான் குறிப்பிடுவதை கீழ்க்கண்ட பாடலில் நாம் காணலாம். நாண்மலர் என்றால் அன்று பூத்த மலர்கள் என்று பொருள். நமது கை நகங்கள் தேயும் அளவுக்கு நாம் அன்று பூத்த மலர்களை பறித்து கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக மல்கிப் பெருக, இறைவனைத் தொழுதால், இறைவன் நமது உள்ளத்தில் இருப்பார் என்று கூறும் திருவையாறு பதிகத்தின் (4.40) ஒரு பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது  

    சகம் அலாது அடிமை இல்லை தான்
                  அலாது துணையும் இல்லை
    நகம் எலாம் தேயக் கையால் நாண்மலர்
                 தொழுது தூவி
    முகம் எல்லாம் கண்ணீர் மல்க முன் பணிந்து
                 ஏத்தும் தொண்டர்
    அகம் அலால் கோயில் இல்லை அய்யன்
                 ஐயாறனார்க்கே

 
பொழிப்புரை:

காலையில் எழுந்து, நறுமணம் வீசும் மலர்களை ஆராய்ந்து கொணர்ந்து, சிவபெருமானை வானத்தில் உள்ள தேவர்கள் வணங்கும் தலம் சோற்றுத்துறை ஆகும். இந்த தலத்தில் நறுமணம் உடைய மலர்கள் நிறைந்த சோலைகள் உள்ளன. இங்கே விருப்பமுடன் உறையும் சிவபிரான் நீண்ட சடையின் மீது காணப்படும், மாலை நேரத்தில் ஒளி மிகுந்து உலவும் பிறைச் சந்திரன் மிகவும் அழகான அணிகலனாக அமைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com