82. காலை எழுந்து கடிமலர் - பாடல்  3

அளக்கும் நெறியினன்
82. காலை எழுந்து கடிமலர் - பாடல்  3


பாடல் 3:


அளக்கும் நெறியினன் அன்பர்கள் தம்
                          மனத்து ஆய்ந்து கொள்வான்
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும்
                         விண்ணவர்கோன்
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை
                         உறைவார் சடை மேல்  
திளைக்கும் மதியம் அன்றோ எம் பிரானுக்கு
                         அழகியதே


விளக்கம்:


அளக்கும் நெறியினன் என்று அனைவரின் உள்ளத்து தன்மையையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். மேலும் தனது அடியாரது மனத்தின் அன்பின் திறத்தை ஆராய்ந்து கொள்ளும் தன்மை படைத்தவன் என்றும் இங்கே கூறப்படுகின்றது. இதே கருத்து அப்பர் பிரான் இன்னம்பர் தலத்து குறுந்தொகை பாடலிலும் (5.21.6) காணப்படுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், அடியவர் அல்லாதார் மனத்தினில் பெருமான், தன்னை வேறுபடுத்தித் தோன்றுவார் என்றும் அடியார்கள் மனத்தினில், அவர்களது அன்புக்குத் தகுந்தபடி அவர்களுடன் கலப்பார் என்றும் கூறுகின்றார். மேலும் சிவபிரான், தனது மனத்தினை உருகச் செய்து தன்னை குறிக்கொண்டுள்ளார் என்றும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். குளக்கும்=தன்னோடு தொடர்பு கொள்ளும்: இளக்கும்=இளகச் செய்யும்  

    விளக்கும் வேறுபடப் பிறர் உள்ளத்தில்
    அளக்கும் தன்னடியார் மனத்து அன்பினைக்
    குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
    இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே

தனக்கு அன்பராய் இருப்பவரை அறிந்து கொள்வார் சிவபெருமான் என்று பராய்த்துறை பதிகத்தில் கூறும் (5.30.4) அப்பர் பிரான், அன்பராய் அல்லாதாரையும் அறிந்து கொள்ளும் வல்லமை படைத்தவர் சிவபெருமான் என்று நமக்கு உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் சிவபெருமான் பிச்சைப் பெருமானாய் தாருகவனம் சென்றதை குறிப்பிடும் பாடல்கள் ஆகும். மோழைமை=அறியாமையால் சொல்லப்படும் சொற்கள். தன்னைப் பின்தொடர்ந்து வந்த தாருகவனத்து முனிவர்களின் மனைவியர் முன்னே, அறியாமையால் மற்றவர்கள் பேசும் சில வார்த்தைகளை சிவபெருமான் பேசியதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். பிச்சைப் பெருமான் வேடமும், அவர் பேசிய பேச்சுக்களும், தாருகவனத்து முனிவர்கள் தங்களது மனைவியரின் கற்புத் திறன் பற்றி கொண்டிருந்த கர்வத்தை அடக்குவதற்காக செய்த காரியங்கள் என்று புராணம் கூறுகின்றது.

    முன்பெலாம் சில மோழைமை பேசுவர்
    என்பெலாம் பல பூண்டு அங்கு உழி தர்வர்  
    தென் பராய்த்துறை மேவிய செல்வனார்
    அன்பராய் இருப்பாரை அறிவரே

இந்த பாடலில் அப்பர் பிரான், அன்பர்கள் தம் மனத்து ஆய்ந்து கொள்வான் விளக்கும் என்று சிவபெருமான், அடியார்களின் பெருமையை உலகறியச் செய்யும் தன்மையினை போற்றிப் பாடுகின்றார். அடியார்களின் உள்ளத்து பக்குவத்தை இறைவன் நன்றாக அறிந்திருந்தாலும், உலகவர் அறியும் பொருட்டு அடியார்களின் பெருமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நிகழ்விப்பதை நாம் பல இடங்களில் பெரிய புராணத்தில் காண்கின்றோம். மேல்வினை=எதிர்காலத்தில் உயிரினை பற்ற இருக்கும் வினைகள். அடியார்களின் மேல் வினைகளைத் தீர்க்கும் சிவபெருமான் என்று இங்கே கூறுகின்றார். சிவபெருமானால்  அவரது அடிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அடியார்கள், தற்போதம் நீங்கிய நிலையில் உள்ளவர்கள் என்பதால் (தான், தனது என்ற நிலையைத் தாண்டி, அனைத்துச் செயல்களும் சிவத்தின் செயல்களாக கருதும் தன்மையில் இருத்தல்), பழவினைகளால் அவர்கள் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை ஒன்றாக கருதுவார்கள் என்பதால், அவர்களுக்கு மேலும் வினைகள் சேராது. இந்த நிலை தான் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

அளக்கும் நெறியினன் என்று சிவபெருமான் அனைவருக்கும் படியளிக்கும் கருணைச் செயல் குறிப்பிடப்படுகின்றது என்றும் பொருள் கொள்ளலாம்.

பொழிப்புரை:

எல்லோருடைய உள்ளக் கருத்தினையும் பண்பினையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த சிவபெருமான், அடியார்களின் மனத்தினை ஆராய்ந்து, தக்கவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தனது அடிமையாக ஏற்றுக்கொண்டு, அவர்களின் பெருமையை உலகம் அறியுமாறு செய்பவர். அத்தகைய அடியார்களுக்கு மேலும் வினைகள் பெருகா வண்ணம் அவர்களது உள்ளத்தை பதப்படுத்தும் சிவபெருமான், தேவர்களின் தலைவராய் விளங்குகின்றார். ஒளி வீசும் காதணிகளை அணிந்து காட்சி அளிக்கும் சோற்றுத்துறைப் பெருமானின் நீண்ட சடையின் மேல், மகிழ்ச்சியுடன் இருக்கும் பிறைச் சந்திரன் மேலும் அழகுடன் காணப்படுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com