83. பெருந்திரு இமவான் - பாடல் 2

உண்மை நெறியாகிய
83. பெருந்திரு இமவான் - பாடல் 2


பாடல் 2:

    ஓர்த்து உளவாறு நோக்கி உண்மையை
                                                  உணராக் குண்டர்
    வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில்
                                                  வீழ்ந்து அழுந்துவேனைப்
    பேர்த்து எனை ஆளாக் கொண்டு பிறவி வான்
                                                  பிணிகள் எல்லாம்
    தீர்த்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச்
                                                  செல்வனாரே


விளக்கம்:


ஓர்த்து=ஆராய்ந்து: உளவாறு=உள்ளவாறு; குண்டர்=சமணர்கள்; வான் பிணிகள்=பெரிய பிணிப்புகள்; முதல் பாடலில் உமாதேவிக்கு அருள் செய்ததைக் குறிப்பிட்ட அப்பர் பிரான்,, அடுத்து அடியார்கள் பலருக்கு அருள் செய்தவற்றைக் குறிப்பிடும் முன்னர், தனக்கு அருள் செய்த தன்மையை இரண்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார். 

பொழிப்புரை:

ஆராய்ந்து, உண்மை நெறியாகிய சைவ சமயக் கொள்கைகளை உள்ளவாறு உணர்ந்து, உண்மை அல்லாதவற்றை ஒதுக்கி, உண்மைகளை உணரவேண்டும். அவ்வாறு செய்யாத சமணர்களின் வார்த்தையை உண்மை என்று நம்பி அவர்களது மொழிகள் தந்த  மயக்கத்தில் இத்தனை காலம் ஆழ்ந்து இருந்தேன்; இவ்வாறு பொய்யான நெறியில் ஆழ்ந்து கிடந்த என்னை, சூலை நோய் தந்து, அந்த இடத்திலிருந்து பெயரவைத்து, என்னை ஆட்கொண்டவர் சிவபெருமான். சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான், எனது பிறவிப் பிணியையும், பிறப்பினால் ஏற்படும் பாசப் பிணைப்புகளையும் நீக்கி எனக்கு அருள் புரிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com