83. பெருந்திரு இமவான் - பாடல் 4

புலன்களையும் அடக்கி
83. பெருந்திரு இமவான் - பாடல் 4


பாடல் 4:

    அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய்
                                                                     அநேக காலம்
    வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய
                                                                     பகீரதற்கு
    வெஞ்சின முகங்களாகி விசையொடு  பாயும்
                                                                     கங்கை
    செஞ்சடை ஏற்றார் சேறைச் செந்நெறிச்
                                                                     செல்வனாரே

 

விளக்கம்:

அனேக காலம் தவம் செய்தான் என்று பகீரதன் செய்த தவத்தை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முதலில் தேவலோகத்தில் இருந்த கங்கை நதியை பூமிக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரமனை நோக்கித் தவம் செய்த பகீரதன், பின்னர் பிரமனின் ஆலோசனைப் படி, கீழே இறங்கும் கங்கையைத் தாங்கவேண்டும் என்று சிவபிரானை நோக்கித் தவம் செய்தான், பின்னர் சிவபிரானின் தலையில் சிக்குண்ட கங்கை நீரை மெல்ல விடுவிக்கவேண்டும் என்று மறுபடியும் சிவபிரானை நோக்கித் தவம் செய்தான். சிவபிரானின் சடையில் இருந்த இறங்கிய கங்கை, தான் செல்லும் வழியில், ஜஹ்னு என்ற முனிவரின் ஆசிரமத்தை அழித்துவிட, கோபம் கொண்ட முனிவர் கங்கை நதியை, ஒரு சிறு துளியாக மாற்றி குடித்து விட்டார். பின்னர் அவரையும் வேண்டி கங்கை நதியை பகீரதன் வெளிக்கொணர்ந்து, பாதாள லோகம் வரை அழைத்துச் சென்று, தனது மூதாதையர்கள் சாம்பலை கங்கை நீரில் கரைத்து அவர்களுக்கு விமோசனம் அளித்தான். இந்த வரலாறு, வால்மீகி இராமயணத்தில் மிகவும் விவரமாக, விஸ்வாமித்திரர் இராமருக்கு கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு பலமுறை, தவம் செய்த பகீரதனை அநேக காலம் வஞ்சனை இல்லாத தவங்கள் செய்தான் என்று அப்பர் பிரான்  குறிப்பிடுகின்றார்.       

பொழிப்புரை:

தனது ஐந்து புலன்களையும் அடக்கி, ஐந்து தீக்களை வளர்த்து அதனிடையே நின்று பல ஆண்டுகள், வஞ்சனை ஏதும் இல்லாமல், தனது மூதாதையர்கள் கடைத்தேற வேண்டும் என்ற ஓரே நோக்கத்துடன் தவம் செய்த பகீரதனின் தவத்தினால் தேவலோகத்திலிருந்து கீழே கங்கை நதி பாய்ந்தது. ஆனால் தேவலோகத்தை விட்டுத் தன்னை பிரித்ததால் ஏற்பட்ட கோபத்துடன், பல கிளைகளாகப் பிரிந்த கங்கை மிகுந்த வேகத்துடன், பூமியையே கரைத்து, பாதாள லோகத்திற்கு அடித்துச் செல்வது போல் கீழே இறங்கியது. இவ்வாறு மிகுந்த வேகத்துடன் இறங்கிய கங்கை நதியை தனது சடையில் ஏற்ற சிவபெருமான், கங்கை நதி சீராக மண்ணுலகில் பாயுமாறு செய்தார். இவ்வாறு எவர்க்கும் துன்பம் ஏற்படாத வண்ணம் கங்கை நதியை வழி நடத்தியவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com