83. பெருந்திரு இமவான் - பாடல் 5

கோயிலில் வாழ்கின்ற
83. பெருந்திரு இமவான் - பாடல் 5


பாடல் 5:

    நிறைந்த மா மணலைக் கூப்பி நேசமோடு
                                                             ஆவின் பாலைக்
    கறந்து கொண்டு ஆட்டக் கண்டு கறுத்த தன்
                                                            தாதை தாளை
    எறிந்த மாணிக்கு அப்போதே எழில்கொள்
                                                            சண்டீசன் என்னச்
    சிறந்த பேறு அளித்தார் சேறைச் செந்நெறிச்
                                                           செல்வனாரே


விளக்கம்:


தீவிரமான தவங்கள் புரிந்து சிவபெருமானின் அருள் பெற்ற, உமையம்மை, அர்ஜுனன் மற்றும் பகீரதன் முதலியவர்களின் வரலாற்றை முந்தைய பாடல்களில் உணர்த்திய அப்பர் பிரான், இந்த பாடலில் சண்டீசரின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். கறுத்த தன் தாதை என்று சண்டீசரின் செயலால் கோபம் அடைந்த அவரது தந்தை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இடையன் ஒருவன் ஒரு நாள், ஒரு பசுவினை அடித்ததைக் கண்டு மனம் பொறாத சண்டீசர், அந்த இடையனுக்கு பதிலாக மாடுகளை மேய்க்கும் பொறுப்பினை தானே மனமுவந்து ஏற்றுக்கொண்டார். மாடுகளை மிகவும் அன்புடன் அவர் பராமரித்து வர, பசு மாடுகளும் மிகவும் மகிழ்ச்சியாக அதிகமாக பால் சுரந்து வந்தன. மேலும் அந்த பசுக்கள், தங்களை அன்புடன் மேய்த்து வந்த, விசாரசருமர் (சண்டீசரின் இயற்பெயர்) அருகில் சென்று, அவர் கறக்காமலே, தாமே பால் பொழியத் தொடங்கின. பசுக்கள் இவ்வாறு பால் பொழிவதைக் கண்ணுற்ற, சண்டீசர், மணலால் இலிங்கம் போன்று அமைத்து, பசுக்கள் பொழிந்த பாலினை, அந்த மணல் இலிங்கத்திற்கு நீராட்டினார். இவ்வாறு பால் பொழிந்த பின்னரும், அனைத்து பசுக்களும் தாங்கள் வழக்கமாக தங்களது உரிமையாளருக்கு அளிக்கும் பாலினை குறையாமல் அளித்து வந்தன. பசுக்கள் தாமே பால் பொழிவதைக் கண்ணுற்ற, ஒருவன் விசாரசருமர் பாலை வீணாக்குவதாக ஊராரிடம் சென்று முறையிட்டான். ஊரார் சண்டீசரின் தந்தை எச்சதத்தனிடம் முறையிட, எச்சதத்தன் ஒரு நாள் சண்டீசர் அறியாமல் அவரை பின்தொடர்ந்து, பசுக்கள் தாமே பால் பொழிவதைக் கண்டான். அவனுக்குத் தன் மகன் பேரில் மிகுந்த கோபம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியைத் தான் கறுத்த தாதை என்று அப்பர் பிரான் இங்கே நினைவூட்டுகின்றார். அருகில் இருந்த ஒரு குச்சியை எடுத்து. தனது மகனை கோபத்தால் முதுகில் புடைத்தான்; கொடிய வார்த்தைகளையும் கூறினான்.. ஆனால் சிவபூஜையில் ஆழ்ந்திருந்த சண்டீசர், இதனை அறியாது இருந்தார்.

தனது கோபத்தை பொருட்படுத்தாது இருந்த தனது மகன் பேரில், மேலும் கோபம் கொண்ட எச்சதத்தன், இறைவனை நீராட்டுவதற்காக வைத்திருந்த பால் குடத்தினை தனது காலால் இடறினான். தந்தை செய்த தவற்றினை கண்டிக்கும் பொருட்டு, கண்டீசர் தனக்கு அருகில் இருந்த ஒரு கொம்பினை தந்தையின் காலை நோக்கி வீசினார். ஆனால் அந்த கொம்பு, சிவனது வழிபாட்டிற்கு வரும் இடையூற்றினை நீக்கும் படையாக மாறியது; ஒரு மழுவாக மாறி, அவரது தந்தையின் காலை வெட்டியது, சண்டீசர் தனது தந்தையின் காலை நோக்கி கோல் தான் எறிந்தார் என்பதை உணர்த்தும் வண்ணம், அப்பர் பிரான் இங்கே எறிந்த மாணி என்று குறிப்பிடுகின்றார். தந்தை என்றும் பாராமல் சிவபூஜைக்கு இடையூறு செய்தவரை தண்டித்த செய்கைக்கு இறைவன் பாராட்டு தெரிவித்து, சண்டீசர் என்ற அழகிய நாமத்தையும், தனது கணங்களுக்குத் தலைவன் என்ற உயர்ந்த பதவியையும், தனது தலையில் சூட்டிய கொன்றை மாலையையும் சிவபெருமான் சண்டீசருக்கு அளித்தார். இவ்வாறு சிவபெருமான் அளித்த பேற்றினை சிறந்த பேறு என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எப்பேர்பட்ட சிறந்த பேறு என்பதை நாம் சேக்கிழார் வாய்மொழியில் இங்கே காண்போம். நம் பொருட்டு தந்தையை இழந்த உனக்கு, இனிமேல் நான் தந்தையாக இருப்பேன் என்று கூறிய சிவபெருமான், சண்டீசரை அணைத்து, வாஞ்சையுடன் தடவி உச்சி மோந்தார்; மேலும் தான் உண்ட மிகுதியும், உடுப்பனவும், சூடுவனவும் உனக்கே என்றும் அருளி, தனது தலையில் இருந்த கொன்றை மாலையை சண்டீசருக்கு சூட்டினார். 

    தொடுத்த இதழி சூழ் சடையார் துணைத் தாள் நிழல் கீழ் விழுந்தவரை
    எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்
    அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள் செய்து அணைத்தருளி
    மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள  

    அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம்
    உண்ட கலனும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்
    சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தடமுடிக்குத்
    துண்ட மதி சேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்.

பொழிப்புரை:

மண்ணியாற்றின் கரையில் இருத்த சிறந்த மணலை எடுத்து, இலிங்க வடிவாக குவித்து, விசாரசருமன் என்ற சிறுவன், அந்த இலிங்கத்திற்கு பசுவின் பால் கொண்டு அபிடேகம் செய்ய, அதனைக் கண்டு கோபம் கொண்ட அவனது தந்தை அந்த சிவபூஜைக்கு இடையூறு செய்யும் வகையில், பால் குடத்தை தட்டிவிட்டார். தனது தந்தை என்றும் கருதாமல், பால் குடத்தை தட்டிவிட்ட கால்களை நோக்கி கொம்பினை எறிந்த போது அந்த கொம்பு, மழுப்படையாக மாறி, அவரது தந்தையின் கால்களை துண்டித்தது. இந்த நிகழ்ச்சி நடந்த உடனே, விசாரசருமனுக்கு காட்சி தந்த சிவபெருமான், சண்டீசர் என்ற அழகான பெயரினை அளித்து, மேலும் மற்று எவரும் பெறமுடியாத சிறந்த பேற்றினையும் அளித்தார். இவ்வாறு சண்டீசருக்கு அருள் செய்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com