83. பெருந்திரு இமவான் - பாடல் 6

அழிப்பதற்காக தாருகவனத்து
83. பெருந்திரு இமவான் - பாடல் 6


பாடல் 6:

    விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு
                                                                      தமருகம் கை
    தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம்
    உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய்
                                                                     விள்ளச்
    சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச்
                                                                     செல்வனாரே


விளக்கம்:


இந்த பாடலில் கால பயிரவரின் திருக்கோலம் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஓதும் அடியார்கள், தங்கள் அச்சம், இடர், வறுமை, பிணி முதலியன நீங்கப்பெற்று, செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது. 

உமையம்மை அச்சபட்டதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சிவபெருமான், இழிவான புலால் நாற்றம் வீசும் யானையின் பசுந்தோலைப் போர்த்து உகந்தார் என்று ஞானசம்பந்தர் தனது ஆமாத்தூர் பதிகத்தின் (2.44) பத்தாவது பாடலில் கூறுகின்றார். யானையின் பசுமையான தோல் மற்றவர் உடலில் பட்டால், அவர்களைக் கொன்றுவிடும் தன்மை வாய்ந்தது என்று நச்சினார்க்கினியர் தனது சீவக சிந்தாமணி உரையில் கூறுகின்றார். இதுதான் உமையம்மை பயந்ததற்கு காரணம். கொச்சை=இழிந்த, கோ சார=தலைமைப் பதவி தன்னைச் சாருமாறு; தாருகாவனத்தில் தான் பலி ஏற்ற போது, தன் பின்னே முனிவர்களின் மனைவியர் தன்னை பின்தொடர்ந்து வருமாறுச் செய்தவரும், அனைவரும் அஞ்சும் யானையின் தோலை உரித்து, அந்த பசுந்தோலைத் தனது உடலின் மீது போர்த்து, அனைவரும் போற்றும் ஒப்பற்ற தலைவன் தான், என்பதை உணர்த்திய சிவபெருமானின், யானை உரித்த செயல் உமையம்மைக்கு அச்சத்தத்தை ஈந்தது என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்.

    பிச்சை பிறர் பெய்யப் பின் சாரக் கோ சாரக்
    கொச்சை புலால் நாற ஈர் உரிவை போர்த்து உகந்தான்
    அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்
    நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே   

உமை அம்மையை ஞானத்தின் வடிவமாக சொல்லுவதுண்டு. கருநிற யானையை அறியாமைக்கு உவமையாக சொல்லுவதுண்டு. கி.வா.ஜ. அவர்கள் தனது திருமுறை மலர்கள் என்ற புத்தகத்தில், ஞானம், அஞ்ஞானத்தை கண்டு பயம் கொள்ளுதல் இயல்பு என்பதால், ஞானமாகிய உமையம்மை, அஞ்ஞானமாகிய யானையைக் கண்டு பயந்தாள் என்று கூறுகின்றார்.  . 

உமையம்மையின் பயத்திற்கு காரணத்தை அறிந்தவர் சிவபெருமான். எனவே சிறிது நேரம் யானையின் பசுந்தோலைப் போர்த்திருந்த அவர், பின்னர் அந்த தோலைத் தனது உடலில் தரிக்க முடியாதவர் போல் எடுத்துவிட்டு, சிரித்ததாக அப்பர் பிரான் பயற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.32) முதல் பாடலில் கூறுகின்றார். அலக்கல்=நடுக்கம்: உமா தேவி, அச்சத்தில் தனது விரல்களை உதறினார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். 

    உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட
    விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்க நோக்கித் 
    தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலராகித் தாமும்
    சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே   

கதிர்=ஒளி; விரித்த பல்=பலவாறு விரிந்த; வெடிபடு=ஓசையை உண்டாக்கும்; வேழம்= யானை: விள்ளுதல்=மலர்தல்;   

பொழிப்புரை:

பலவாறு விரிந்த ஒளியினை உடைய சூலத்தையும், ஓசையை உள்ளடக்கிய தமருகம் எனப்படும் உடுக்கையையும் கையில் ஏந்தி அழகிய வடிவம் கொண்ட கால பயிரவ மூர்த்தியாக கோலம் கொண்ட சிவபெருமான், தன்னை அழிப்பதற்காக தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையினை அழித்தார்; யானை சிவபெருமானை நெருங்கியதையும், அதன் தோலினை சிவபெருமான் உரித்த பின்னர் அந்த தோலினைப் போர்வையாக உடலின் மீது போர்த்துக் கொண்டததையும் கண்ட பார்வதி தேவி மிகவும் அச்சம் எய்தினாள். தேவியின் பயத்தைக் கண்ட சிவபெருமான் தனது பவளம் போன்று ஒளி திகழும் வாய் மலர்ந்து சிரித்தார். இவ்வாறு சிறிதும் அஞ்சாமல் வீரச்செயல் புரிந்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com