84. குலம் பலம் பாவரு - பாடல் 1

காத்து நிற்கும் காட்சி
84. குலம் பலம் பாவரு - பாடல் 1


முன்னுரை:

குடந்தையிலிருந்து (தற்போது கும்பகோணம் என்று அழைக்கப்படும் தலம்) திருவாஞ்சியம் பெருவேளூர் முதலான பல தலங்களில் உள்ள பெருமானை வணங்கி பல பதிகங்கள் பாடிய பின்னர் அப்பர் பிரான் திருவாரூர் வந்தடைந்தார். திருநாவுக்கரசரின் வருகையை முன்னமே அறிந்திருந்த நகர மக்கள், தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் வண்ணம் வீதிகளையும் மாடங்களையும் மாளிகைகளையும் அலங்கரித்து அழகு செய்தனர். திருவாரூரில் தண்டியடிகள் மற்றும் நமிநந்தி அடிகள் வாழ்ந்த காலத்தில் சமணர்கள் அவர்களுக்கு இடர்கள் செய்ததை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். எனவே சமணர்களின் தன்மையினை திருவாரூர் நகர மக்கள்
நன்றாக அறிந்திருக்க வேண்டும். அத்தகைய சமணர்களின் சூழ்ச்சியைக் கடந்து பெருமானின் அருளால், கல்லே தெப்பமாக மிதந்து வர அதன் மீது அமர்ந்து கரை சேர்ந்த அப்பர் பிரானின் வருகை அவர்களது மகிழ்ச்சியை பன்மடங்கு பெருக்கியது. அப்பர் பிரானை வரவேற்பதற்கு திருவாரூர் மக்கள் திருவாரூர் எல்லை சென்று வரவேற்றனர் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். வல்லமண்=கல் போன்று வன்மையான நெஞ்சம் கொண்ட சமணர்கள்' மறிகடல்=அலைகள் புரளும் கடல்;

வல்லமண் குண்டர் தம் மாயை கடந்து
                                           மறிகடலில் 
கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார்
                                          எனும் களிப்பால்
எல்லையில் தொண்டர் எயில் புறம் சென்று
                                          எதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரை
                                          செய்து அணைவார்  

சமணர்களுடன் பல வருடங்கள் பழகியதால் சிறுமை நிலையினை அடைந்த தான், பெருமானின் அருளினால் தனது பிணி (சமணர்களுடன் கொண்டிருந்த தொடர்பு) நீங்கியது என்றும் தான் இனிமேல் பெற வேண்டிய புண்ணியம், திருவாரூர் அடியார்களுக்கு அடியானாக இருப்பது தான் என்று பதிலளித்தார். மேலும் தான் அளித்த அந்த விடையைப் பொருளாக கொண்ட பதிகம் பாடியவாறு திருவாரூர் வீதிகளில் நுழைந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். பற்றத் தகாத பாவியர்கள் என்று சமணர்களை அப்பர் பிரான் குறிப்பிட்டதாக சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார். 

    பற்று ஒன்றிலா வரும் பாதகர் ஆகும்
                                      அமணர் தம் பால்
    உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன்
                                      பெறலாவது ஒன்றே
    புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத்
                                      தொண்டராம் புண்ணியம் என்று 
    உற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி
                                      உள்ளணைந்தார்   

திருவாரூர்த் தொண்டர்கள் அப்பர் பிரானை சிறப்பாக கொண்டாடி வரவேற்றபோது அடக்கத்துடன், தனது சிறுமையை, சமணர்களுடன் கழித்த நாட்களை அப்பர் பிரான்
குறிப்பிட்டது, நமக்கு அப்பூதி அடிகளார் புராண நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. திங்களூர் சென்ற அப்பர் பிரான், தனது பெயரில் தண்ணீர்ப்பந்தர் அமைந்திருப்பதை
காண்கின்றார். அந்த தண்ணீர்ப் பந்தரை அமைத்தவர் அப்பூதி அடிகளார் என்று அறிந்த அப்பர் பிரான், அவரது இல்லம் சென்று, அப்பூதி அடிகளைக் கண்டார். பின்னர்
அவரிடம் நீங்கள் அமைத்த தண்ணீர்ப் பந்தருக்கு உமது பெயரினை எழுதாமல், வேறு எவரோ ஒருவரது பெயரினை எழுதிய காரணம் என்ன என்று வினவுகின்றார். 

    ஆறணியும் சடை முடியார் அடியார்க்கு
                                                    நீர் வைத்த
    ஈறில் பெரும் தண்ணீர்ப் பந்தரில் நும்
                                                   பேர் எழுதாதே
    வேறொரு பேர் முன்னெழுத வேண்டிய
                                                   காரணம் என் கொல்
    கூறும் என எதிர் மொழிந்தார் கோதில்
                                                   மொழிக் கொற்றவனார்

இதனைக் கேட்ட அப்பூதி அடிகள் மிகுந்த கோபம் கொண்டவராக, சமணர்களுடன் ஒன்று கலந்து பல்லவ மன்னன் செய்த சூழ்ச்சிகளிலிருந்து, தான் பெருமானுக்கு செய்து வந்த திருத்தொண்டின் தன்மையால், தப்பியவரின் திருப்பெயரோ வேறொரு பேர் என்று கேட்டார். மேலும் அலைகள் பொங்கி எழுந்த கடலில், கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறிய பிரானது பெருமையை அறியாமல் இருக்கும் நீவிர் யார் என்றும் வினவினார். அதற்கு மிகவும் அடக்கமாக பதிலளித்த அப்பர் பிரான், புறச் சமயத்திலிருந்து மீண்டும்  சைவ சமயம் திரும்பும் வண்ணம் சூலை நோய் அளிக்கப்பட்டு ஆட்கொள்ளப்பட்ட சிறுமையேன் அடியேன் தான் என்று கூறவே, வந்தவர் அப்பர் பிரான் என்று அறிந்து அப்பூதி அடிகள் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றார். 

தான் திருவாரூர் அடியார்களுக்கு அடியானாக இருக்கும் பேற்றினை பெறுவதை, திருவாரூரில் வாழ்ந்த சமணர்கள் காண வேண்டும் என்று அப்பர் பிரான் ஆசைப்படுவதை நாம் இந்த பதிகத்தின் பாடல்களில் காணலாம். தருமசேனர் என்ற பெயரினில் சமணர்களின் குருவாக இருந்த தான், சைவ சமயம் சார்ந்ததைக் கண்டு மனம் பொறாதவர்களாக பல விதங்களிலும் அப்பர் பிரானுக்கு தீங்கு இழைத்தவர்கள் சமணர்கள். அவ்வாறு இருப்பினும், சமணர்கள் முன்னிலையில் திருவாரூர் அடியார்களுடன் தான் பழக வேண்டும் என்று அப்பர் பிரான் விரும்புகின்றார். என்ன காரணம் என்பது பதிகத்தில் கூறப்படவில்லை. சமணர்கள் தனக்கு இழைத்த தீங்குகள் அனைத்தையும், பெருமானின் அருளால் வெற்றியாக மாறிய நிலையில் தான் மேலும் தீவிரமாக சைவத் தொண்டு செய்வதை அவர்கள் காண வேண்டும் என்ற விருப்பம் அப்பர் பிரானுக்கு இருந்தது போலும். அல்லது தனக்கு எந்த விதமான துயர் வரினும் சிவபெருமான் ஒருவரிடம் தவிர வேறு எவரிடம் இறைஞ்ச மாட்டேன் என்று தான் பாடியதை தான் செயல்படுத்தியதை உணர்த்தும் எண்ணத்தால் எழுந்த சொற்களோ, நமக்கு தெரியவில்லை. 

    இடுக்கண் பட்டு இருக்கினும்
                              இரந்து யாரையும் 
    விடுக்கில் பிரான் என்று வினவுவோம்
                              அல்லோம்
    அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின்
                              நான் உற்ற 
    நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே

சமணர்கள் பெருமானைத் தொழாமல் இருக்கின்றார்களே, அதனால் வாழ்வில் உய்வினை அடையும் வாய்ப்பை இழந்து விட்டார்களே என்ற தனது பரிதாபத்தை பல தேவாரப் பாடல்களிலும் வெளிப்படுத்தியவர் அப்பர் பிரான். எனவே தான் தொண்டு செய்வதை நேரில் கண்டால், ஒரு சில சமணர்களேனும் சைவ சமயத்தைப் பற்றி வாழ்வினில் உய்வினை அடையலாம் என்ற ஆசையின் அடிப்படையில், தான் செய்யும் சைவத் தொண்டினை சமணர்கள் காணவேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்ததாகவும் நாம் கொள்ளலாம். இந்த பதிகத்தின் பல பாடல்களில் மூர்க்கராக திகழ்ந்த சமணர்கள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மூர்க்கர்களின் வலிமையை விடவும் பன்மடங்கு பலம் வாய்ந்தது இறைவனின் அருள் திறம் என்பதை உணர்த்தும் வண்ணம், அதற்கு தானே சான்றாக இருப்பதையும் உணர்த்தும் வண்ணம் சமணர்களின் வலிமையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், திருவாரூர் தொண்டர்களின் அடியானாக விளங்கும் நற்பேறு தனக்கு கிடைக்குமா என்று வினவுவது போன்று, உண்டு கொலோ என்று கூறினாலும், இறைவனை வழிபடும் அடியார்களுக்கு அத்தகைய நற்பேறுகள் உறுதியாக வாய்க்கப்பெறும் என்பதை உடன்பாட்டு முறையில் உணர்த்தும் மொழியாகவே இந்த பதிகத்தின் சொற்களை நாம் பொருள் கொள்ளவேண்டும்.
          

பாடல் 1: 

    குலம் பலம் பாவரு குண்டர் முன்னே
                                நமக்கு உண்டு கொலோ
    அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர்
                               அவிர்சடையான்
    சிலம்பு அலம்பா வரு சேவடியான் திரு
                               மூலட்டானம்
    புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்குத்
                               தொண்டராம் புண்ணியமே


விளக்கம்:


குலம்=கூட்டம்; பாவரு=பெருகிய, குண்டர்=மூர்க்கர்; அலம்புதல்=ஆர்ப்பரித்தல், ஆரவாரம் செய்தல், பெருத்த ஓசையுடன் ஒலித்தல்; அம்பு=நீர், புலம்பு அலம்பு=பெருமானை நினைத்து உருகுவதால் கண்களில் பெருகும் கண்ணீர். பெருமானிடம் வைத்துள்ள அன்பு ஒரு நிலையினைக் கடக்கும் போதும் அழுகையாக மாறுகின்றது என்று பல திருமுறை பாடல்களில் கூறும் அருளாளர்கள் அத்தகைய அழுகையால் ஏற்படும் பயனையும் நமக்கு உணர்த்துகின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். மிகுந்த அன்புடன் பெருமானை நினைத்து மனம் உருகி அழும் அன்பர்களுக்கு பெருமானின் திருவடிகள் அமுதமாக விளங்குவன என்று அப்பர் பிரான் கூறும் ஐயாற்றுப் பதிகத்தின் பாடல் (4.92.5) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தோற்றமும் முடிவும் இல்லாத பெருமானது திருவடிகள் தங்களது வினையின் ஒரு பகுதியை கழிப்பதற்காக நரகக் குழியில் விழும் உயிர்களை (வினைப் பயனை நுகர்ந்த பின்னர்) கருணையால் கரையேற்றி மீண்டும் பிறக்கச் செய்து மெய்ப்பொருளை அறிந்து உய்வதற்கு வாய்ப்பினை அளிக்கின்றன என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். 

    எழுவாய் இறுவாய் இலாதன வெங்கட்
                                                    பிணி தவிர்த்து
    வழுவா மருந்தும் ஆவன மாநகரக் குழிவாய்
    விழுவார் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன
                                                  மிக்க அன்போடு
    அழுவார்க்கு அமுதங்கள் காண்க ஐயாறன்
                                                  அடித்தலமே

சிவபெருமானின் புகழினைக் கேட்கும் போதும், சொல்லும் போதும் வாய் விட்டு அழுதல் என்பது சிறந்த அடியார்களின் குணங்களில் ஒன்றாகும். நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி சிவபெருமானின் திருநாமத்தை ஓதும் அடியார்கள் நன்னெறியை அடைவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

இறைவனை நாம் அதிகமாக தொழத்தொழ, நமக்கு இறைவனிடத்தில் அன்பு அதிகமாகின்றது. அந்த இறையன்பு வலுப்பெறும்போது அது அழுகையாக வெளிப் படுகின்றது.  

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பாடலில் (4.56.4) அப்பர் பிரான், சிவபெருமான், தன்னை கீழே விழுந்து தொழுது எழுந்து ஆடியும் பாடியும் அழுதும் தோத்திரம் சொல்லியும் வணங்கும் அடியார்களுக்கு அன்பராக இருக்கின்றார் என்று கூறுகின்றார்.  

    மழுவமர் கையர் போலும் மாது அவள்
                                                பாகர் போலும்
    எழுநுனை வேலர் போலும் என்பு கொண்டு
                                               அணிவர் போலும்
    தொழுது எழுந்தாடிப் பாடி தோத்திரம்
                                               பலவும் சொல்லி
    அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடு
                                              துறையனாரே  
 

குரங்காடுதுறை பதிகத்தின் (5,63) பாடலில், அப்பர் பிரான், சிவபிரானின் அடியார்களை தனது சுற்றம் என்று அழைக்கின்றார். தொண்டர்களே, நீங்கள் அனைவரும், சிவபெருமான் இருக்கும் இடமாகிய குரங்காடுதுறையினை அடைந்து, ஆங்கே அனைவரும் ஒன்று சேர்ந்து சிவபெருமானின் புகழைப் பாடிக்கொண்டே ஆடுமின், அழுமின், அவனது திருப்பாதங்களைத் தொழுமின் என்று கூறுகின்றார். எதற்காக, அழுதால் அவனைப் பெறலாம் என்பதற்காக.

    நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்
    ஆடுமின் அழுமின் தொழுமின் அடி   
    பாடுமின் பரமன் பயிலும் இடம்
    கூடுமின் குரங்காடு துறையையே

இறை உணர்வு வலுப்பெற்று அழுகையாக மாறும்போது, அடியார்களின் புலன்களும் பொறிகளும் அந்தக்கரணங்களும் செயலிழந்து விடுகின்றன. இந்த நிலையையும் தாண்டும் அடியார்கள் நான், எனது என்ற எண்ணங்களை மறந்து தற்போதம் நீங்கியவர்களாய் துவண்டு விடும் நிலையை அடைகின்றார்கள். இதைத் தான், தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் என்று அப்பர் பிரான், முன்னம் அவனுடைய என்று தொடங்கும் பாடலில் கூறுகின்றார். இந்த மூன்று நிலைகளிலும் உள்ள அடியார்கள் (தொழுகையர், அழுகையர், துவள்கையர்), சிவபிரானின் அருள் வேண்டி வெளியே நிற்பதாக திருப்பள்ளியெழுச்சி பதிகத்தில் மணிவாசகர் கூறுகின்றார். இந்த மூன்று நிலைகளில் உள்ள அடியார்கள் தவிர, யாழ் வீணை ஆகிய இசைக்கருவிகள் வாசிக்கும் அடியார்கள், வேதங்கள் மற்றும் தோத்திரங்கள் சொல்லி இறைவனை வேண்டும் அடியார்கள், மலர் மாலைகளை கையில் ஏந்திய அடியார்கள், தலையின் மேல் கைகளை வைத்து கூப்பித் தொழும் அடியார்கள் என பலரும், விடியற்காலை நேரத்தில் இறைவனை தரிசிக்க காத்து நிற்கும் காட்சி இங்கே விவரிக்கப்படுகின்றது.    

    இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
                இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
    துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்
               தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
    சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
               திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
    என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
              எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

திருமாற்பேறு பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.59.7)  அப்பர் பிரான் பெருமானின் திருநாமத்தை மகிழ்ச்சியுடன் உரைத்து அழும் தன்மையை உடைய அடியார்களுக்கு, குற்றமிலாத அருள்கள் புரிபவன் சிவபெருமான் என்று கூறுகின்றார்.

    மழு வலான் திருநாமம் மகிழ்ந்து உரைத்து
    அழ வலார்களுக்கு அன்பு செய்து இன்பொடும்
    வழுவிலா அன்பு செய்தவன் மாற்பேறு  
    தொழ வலார் தமக்கு இல்லை துயரமே

ஆனைக்கா தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் ஒரு பாடலில் (5.31.7)  கைகளால் மலர்களை தூவி, தொழுது மனம் உருகி அழுது வழிபடும் அடியார்களுக்கு அன்பனாக இருப்பவன் ஆனைக்கா அண்ணல் என்று கூறுகின்றார். வாழ்க்கை நிலையாமையை உணர்ந்து நாம் இப்போதே இறைவனைத் தொழவேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் ஒருநாள் இறந்து கழகு அரிக்கும் நிலைக்கு உட்படும் நமது உடலில் உயிர் உள்ளபோதே இறைவனைத்  தொழுமாறு நமக்கு அறிவுரை கூறும் பாடல். 

    ஒழுகு மாடத்து ஒன்பது வாய்தலும்
    கழகு அரிப்பதன் முன்னம் கழலடி
    தொழுது கைகளால் தூமலர் தூவி நின்று
    அழும் அவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே

கழுமலம் சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (7.58.10) சுந்தரர்,  இறைவன் மீது நாம் வைத்துள்ள அன்பின் மிகுதியால் கண்ணீர் வடிக்கும் கண் மலர்களைக் கொண்டு இறைவனை வணங்கும் அடியார்கள் அன்றி ஏனையோர் அறிவதற்கு மிகவும் அரியவனாக விளங்குபவன் பெருமான் என்று கூறுகின்றார்.

    செழுமலர்க் கொன்றையும் கூவிள மலரும் விரவிய
                  சடைமுடி அடிகளை நினைத்திட்டு 
    அழுமலர்க் கண் இணை அடியவர்க்கு அல்லால்
                 அறிவு அரிதவன் திருவடி இணை இரண்டும் 
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டு ஊரன் சடையன்
                தன் காதலன் பாடிய பத்தும்
    தொழு மலர் எடுத்த கை அடியவர் தம்மைத்
               துன்பமும் இடும்பையும் சூழ கிலாவே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (4.40.6) இறைவனைத்  தொழுது ஆடியும் பாடியும் மனம் உருகி கண்களில் கண்ணீர் வடிய வணங்கும் அடியார்களின் அன்பினைத் தவிர வேறு எந்த பொருளையும் இறைவன் பொருளாக கருதுவதில்லை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். 

    என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வதில்லை
    புன்புலால் நாறு காட்டில் பொடி அலால் சாந்தும் இல்லை
    துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுது அழுது ஆடிப் பாடும்
    அன்பலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே


பொழிப்புரை:


மிகுந்த ஆரவாரத்துடன் பேரொலியுடன் ஓடி வரும், குளிர்ந்த ஆற்றினை உடைய ஆரூர் நகரத்தில் உறைபவனும், விரிந்து பரந்து விளங்கும் சடையைக் கொண்டவனும், அணிந்துள்ள சிலம்பின் ஒலிகளை நமக்கு உணர்த்தும் வண்ணம் திருநடனம் ஆடுபவனும் ஆகிய பெருமானின் சன்னதியாகிய திருமூலட்டானைத்தில் அவனது பேரருளினை தங்களது கண்களில் கண்ணீர் வழிய எண்ணி உருகி வழிபடும் அடியார்களுக்கு அடியேனாக இருக்கும் நல்வினைப் பேற்றினை அடியேன், உடல் வலிமை உள்ளவர்களாகவும் கூட்டமாக திரிபவர்களாகவும் உள்ள சமணர்கள் காணும் வகையில் பெறுவேனோ. பெருமானே, அவ்வாறு பெறுவதற்கு நீரே அருள் புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com