52. கானறாத கடிபொழில் - பாடல் 5

கொன்றைப் பூக்கள் சூடிய சடையில்

பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்
ஏ அலால் எயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே

விளக்கம்

பூவுலாம் = பூக்கள் அதிகமாக பொருந்திய. எயில் = கோட்டை. ஏ = அம்பு. அம்பு ஏதும் இல்லாமல் முப்புரங்களையும் எரித்ததாக இந்த பாடலில் கூறப்படுகின்றது. பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடுவது என்று தீர்மானித்து புறப்பட்டபோது, திருமால் பிரமன் உள்ளிட்ட தேவர்கள் பலரும் பெருமானுக்கு உதவியாக போரில் பங்கேற்க விரும்பினார்கள். தேரின் பல பாகங்களாக தேவர்களும், சாரதியாக பிரமனும், மேருமலை வில்லாகவும் வாசுகி பாம்பு நாணாகவும், திருமால், அக்னி, வாயு ஆகியோர் அம்பின் மூன்று பாகங்களாகவும் பங்கேற்றார்கள். அப்போது சிலருக்குத் தங்களது உதவியால் பெருமான் திரிபுரத்து அரக்கர்களை வெல்லப் போகின்றார் என்ற எண்ணம் தோன்றியது போலும். இதனை அறிந்த பெருமான், எவரது உதவியும் இல்லாமலே தன்னால் திரிபுரத்து அரக்கர்களை வெல்லமுடியும் என்பதை அனைவர்க்கும் உணர்த்த திருவுள்ளம் கொண்டார் போலும். அவர் தேர்த்தட்டின் மீது தனது காலை வைத்தவுடன், பெருமானின் உடலைத் தாங்கமுடியாமல் தேரின் அச்சு முறிந்தது. உடனே திருமால் இடபத்தின் வடிவம் கொண்டு பெருமானைத் தாங்கி நிற்க, பெருமான் இடபத்தின் மீதேறி, மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கோட்டில் வந்த தருணத்தில், கோட்டைகளை நோக்கியவாறு புன்முறுவல் பூத்தார். கோட்டைகள் மூன்றும் ஒரே சமயத்தில் எரிந்து அழிந்தன. இந்த நிகழ்ச்சியைத்தான் அம்பு ஏதும் இன்றி மூன்று கோட்டைகளையும் எரித்தான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இதே தகவல் திருவாசகம் திருவுந்தியார் பதிகத்திலும் சொல்லப்படுகின்றது. திரிபுரத்து கோட்டைகளை அழிப்பதற்கு ஒரு அம்பே போதும் என்று சென்ற பெருமான், அந்த ஒரு அம்பினையும் பயன்படுத்தாமல் கோட்டைகளை எரித்தார் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார்.

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீ பற            

இந்த பாடலில் தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இலக்குமி தேவி இங்கே பெருமானை வழிபட்டு திருமலை கணவனாகப் பெற்றமையால், இந்த தலத்திற்கு லக்ஷ்மிபுரி என்று பெயர். கந்தப் பெருமான் மற்றும் இந்திரன் வழிபட்டதால், கந்தபுரி என்றும் இந்திரபுரி என்றும் பெயர்கள் வந்தன என்று தலபுராணம் கூறுகின்றது. இந்திரன் இங்கே இறைவனை வழிபாட்டு வஜ்ராயுதம் பெற்றதாக கூறுவார்கள். இரதிதேவி, பிரமன், குபேரன், எட்டுத் திசைக் காவலர்கள் மற்றும் தாட்சாயணி வழிபட்ட தலம். இதனை உணர்த்தும் வண்ணம், தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளி என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.     

பொழிப்புரை

கொன்றைப் பூக்கள் சூடிய சடையில் கங்கை நதியை ஏந்திய செம்பொன்பள்ளி பெருமான், தேவர்கள் பலராலும் வணங்கித் தொழப்படுகின்றார். அவர் எடுத்துச் சென்ற அம்பினை பயன்படுத்தாமல் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் சிரித்தே எரித்தவர் ஆவார். அவர் பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளாக விளங்குவதுடன் அவர்களுக்கு முதவராகவும் விளங்குகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com