52. கானறாத கடிபொழில் - பாடல் 8

கொடிய கண்களை உடைய பாம்பு

வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்
செங்கண் மால் விடையார் செம்பொன்பள்ளியார்
அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே
 

விளக்கம்

வெங்கண் = கொடிய கண்கள். வெருவுற = அஞ்சுமாறு. ஆர்த்தல் = கட்டுதல். ஈருரி = பச்சைத் தோல். பைங்கண் = பசுமையான கண்கள். செங்கண் மால் விடை = திருமாலை தமக்கு இடப வாகனமாக ஏற்றவர். கண் = பற்றுக்கோடு. அங்கண் = அழகிய பற்றுக்கோடு.

பொழிப்புரை

கொடிய கண்களை உடைய பாம்பு அஞ்சுமாறு அதனைத் தனது இடுப்பில் இறுக்கமாக கச்சையாக கட்டியவர் சிவபெருமான்; பசுமையான கண்களை உடைய மதயானையை உரித்து, சொட்டும் குருதியால் ஈர நிலையில் இருந்த தோலினைத் தனது உடல் மீது போர்வையாக போர்த்தவர் சிவபெருமான். திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற போது, சிவந்த கண்களை உடைய திருமால், அவருக்கு இடப வாகனமாக, இருந்தார். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் செம்பொன்பள்ளி தலத்தில் உறைகின்றார். இந்த அழகரை பற்றுக்கோடாக நினைத்து வழிபடும் அடியார்களின் வினைகளை அவர் முற்றிலும் தீர்க்கின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com