52. கானறாத கடிபொழில் - பாடல் 9

நன்மை உடைய நாராயணன்

நன்றி நாரணன் நான்முகன் என்றிவர்
நின்ற நீள்முடி ஓட்டி காண்புற்றுச்
சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான்
நின்ற சூழலில் நீளெரி ஆகியே

விளக்கம்

நன்றி = நன்மை. இங்கே நான்முகன் பிரமன் இருவரையும் குறிப்பிடும் பிரமனுக்கு அடைமொழி ஏதும் கொடுக்காமல் நாரணனுக்கு நன்றி நாரணன் என்று கூறுகின்றார். பெருமானது அடியையும் முடியையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது, நான்முகன் தான் முடியைக் கண்டதாக பொய் சொன்னான், ஆனால் திருமாலோ, தன்னால் அடியை காண முடியவில்லை, என்று உண்மையான நிலையினை, தாழ்வு என்று கருதாமல் ஒப்புக்கொள்கின்றார். அதனால் நாராயணனின் வாய்மைச் செயல் கருதி நன்றி நாரணன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை

நன்மை உடைய நாராயணன் மற்றும் பிரமன் ஆகிய இருவரும், நெடிய அழல் தூணாக நின்ற உருவத்தின் அடியையும் முடியையும் காண்பதற்காக முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் காண முடியாதபடி நீண்ட தழலாய் நின்றவன் சிவபெருமான். அவ்வாறு நீண்ட தழல் பிழம்பாக நின்ற இறைவன் செம்பொன் பள்ளியில் உறைகின்றான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com