52. கானறாத கடிபொழில் - பாடல் 10

பதிகத்தின் முதல் மூன்று

திரியும் மும்மதில் செங்கணை ஒன்றினால்
எரிய எய்து அனல் ஓட்டி இலங்கைக் கோன்
நெரிய ஊன்றி இட்டார் செம்பொன்பள்ளியார்
அரிய வானம் அவர் அருள் செய்வரே
 

விளக்கம்

செங்கணை = கூர்மையான அம்பு.

பொழிப்புரை

வானில் தங்களது விருப்பம் போன்று திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும், கூர்மையான அம்பு ஒன்றினை விடுத்து, மூன்று கோட்டைகளும் அக்னிக்கு இரையாக மாறுமாறு செய்தவர் சிவபெருமான். இலங்கைத் தீவுக்கு அரசனாகிய அரக்கன் ராவணன், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, மலையின் கீழே அரக்கன் நசுங்குமாறு, தனது கால் விரலை மயிலை மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான். இத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் செம்பொன்பள்ளி தலத்தில் உறைகின்றார். அவர் தனது அடியார்களுக்கு, எளிதில் கிடைக்காத வீடுபேற்று இன்பத்தை வழங்குகின்றார்.

முடிவுரை

பதிகத்தின் முதல் மூன்று பாடல்களில் பெருமானின் கோலத்தை விவரிக்கும் அப்பர் பிரான், பதிகத்தின் நான்காவது பாடலில் தெருவெலாம் சென்று பலி தேர்வதை நமக்கு உணர்த்துவதன் மூலம் பெருமானிடம் நாம் சமர்ப்பிக்க வேண்டியதை நினைவூட்டுகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானின் வல்லமையை உணர்த்தும் அப்பர் பிரான், ஆறாவது பாடலில், பாம்பினையும் சந்திரனையும் ஒரே இடத்தில் வைத்தது ஏன் என்ற கேள்வியை பெருமானிடம் வினவுகின்றார். ஏழாவது பாடலில் சூரியனாகவும் சந்திரனாகவும் திகழ்ந்து ஒளி தரும் சிறப்பினை உணர்த்தி, எட்டாவது பாடலில் திருமாலும் இறைவனுக்கு பணி செய்ததை நமக்கு உணர்த்தி, ஒன்பதாவது பாடலில் நீண்ட எரியாகி நின்று திருமாலும் பிரமனும் காண்பரியாத நிலையினை குறிப்பிடுகின்றார். பத்தாவது பாடலில், மேற்கண்டவாறு அறியவராகவும் வலியவராகவும் விளங்கும் பெருமான், அடியார்களுக்கு மிகவும் எளியவராக, அவர்கள் விரும்பும் முக்திப் பேற்றினை அளிக்கும் செல்வராக விளங்குகின்றார் என்று கூறி, நம்மை இறைவனை வழிபடுமாறு அப்பர் பிரான் தூண்டுகின்றார். அப்பர் பிரான் காட்டிய வழியில் சென்று, நாமும் சிவபெருமானை வழிபாட்டு, என்றும் நிலையாக உள்ள இன்பமாகிய வீடுபேற்றினை அடைவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com