53. கொள்ளும் காதன்மை -  பாடல் 1

அப்பர் பிரான் செம்பொன்பள்ளி சென்று

(மயிலாடுதுறை – குறுந்தொகை)

முன்னுரை

காவிரி நதியின் இரு கரைகளிலும் உள்ள பல திருக்கோயில்கள் சென்ற அப்பர் பிரான் செம்பொன்பள்ளி சென்று வணங்கிய பின்னர் மயிலாடுதுறை சென்றதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். விடை உயர்த்தார் = இடப உருவத்தினை தாங்கிய கொடியை உடைய பெருமான்.;

மேவு புனல் பொன்னி இருகரையும் சார்ந்து விடை உயர்த்தார்
                   திருச்செம்பொன்பள்ளி பாடிச்
கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக்கரை துருத்தி
            வேள்விக்குடி எதிர்கொள்பாடி
பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி
            பலவும் பணிந்து போந்தே
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து பணிந்து
        ஆவடு தண்துறையைச் சார்ந்தார்    

அப்பர் பிரான் இந்தத் தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பாடல் ஒன்றுதான் நமக்கு கிடைத்துள்ளது. இந்த பதிகத்தில், அப்பர் பிரான் தலத்தினை அதன் சிறப்பு கருதி பல இடங்களில் மாமயிலாடுதுறை என்று கூறுகின்றார். மயில் உருவில் உமையம்மை தவம் செய்து இறைவனை அடைந்த இடம், உமையம்மை ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் என்று அழைக்கப்படுகின்றது. இறைவனும் ஒரு ஆண் மயிலின் உருவம் கொண்டு உமையம்மையுடன் நடனம் ஆடியதாக தலபுராணம் கூறுகின்றது. காசிக்கு சமமாக சொல்லப்படும் ஆறு தலங்களில் ஒன்று இந்த தலம். திருவிடைமருதூர், சாய்க்காடு, திருவாஞ்சியம், திருவெண்காடு மற்றும் திருவையாறு ஆகியவை மற்ற தலங்களாகும். தலத்தின் சிறப்பு கருதியே ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமோ என்ற முதுமொழி எழுந்தது.

பாடல் 1

கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை
உள்ளம் உள்கி உரைக்கும் திருப்பெயர்
வள்ளல் மா மயிலாடுதுறை உறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே

விளக்கம்

காதன்மை = காதல் நோய். இந்த திருக்கோயில் பெருமானுக்கு வள்ளல் என்ற பெயரும் உள்ளது. அந்த பெயர் இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் உள்ள கோயில்களும் வள்ளலார் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. கிழக்கே துறை காட்டும் வள்ளல் கோயிலும் (விளநகர், பாடல் பெற்ற தலம்), மேற்கில் வழி காட்டும் வள்ளல் கோயிலும் (மூவலூர்), வடக்கே ஞானம் காட்டும் வள்ளல் கோயிலும் (தட்சிணாமூர்த்தி கோயில்) தெற்கே மொழி கட்டும் வள்ளல் கோயிலும் (பெருஞ்சேரி) உள்ளன். அப்பர் பெருமான் பயன்படுத்திய வள்ளல் என்ற சொல் இந்த நான்கு கோயில்களையும் நினைவூட்டுகின்றது. இந்த பாடல். சிவபெருமான் ஆழ்ந்த காதல் கொண்டுள்ள அப்பர் நாயகியின் தாய் கூறுவதாக அமைந்த அகத்துறை பாடல். எப்போதும் பெருமானின் பெயரை உரைத்தவாறு இருக்கும் தனது மகளின் காதல் தன்மையைக் குறித்து தாய் கவலைகொண்டு தனது உணர்வினை வெளிப்படுத்தும் பாடல்.

இவ்வாறு பெருமானின் நாமத்தை மறுபடியும் மறுபடியும் தனது மகள் உரைப்பதாக இந்த பாடலில் அப்பர் நாயகியின் தாயும் கூறுவது, நமக்கு கழிப்பாலை பதிகத்தின் (5.40) முதல் பாடலை நினைவூட்டுகின்றது. தனது பெண், கழிப்பாலைப் பெருமானை இதுவரை நேரில் சென்று கண்டதில்லை: எனவே அவனது உருவம் எப்படி இருக்கும், அவனது மேனியின் நிறம் எப்படி இருக்கும் என்பதை அறியாதவள். ஆயினும் அவனது பெருமையைத் தனது தோழியர்கள் சொல்லக் கேட்டறிந்தவள் போலும். அதனால் அவன் மீது ஆராத காதல் கொண்டு, அவனது திருநாமங்களை உச்சரித்தவாறே காணப்படுகின்றாள். எத்தனை முறை அவனது நாமங்களை பிதற்றினாலும், அதனால் மனநிறைவு அடையாதவளாக, அவனது நாமத்தைச் சொல்வதை நிறுத்தாமல் இருக்கின்றாள். இவ்வாறு இருக்கும் இவளது தன்மையைக் காணும் எனக்கு, இவளின் காதலின் ஆழம் என்னவென்று புரியவில்லை. எங்கும் பொழில்கள் காணப்படும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் சிவபெருமானே, இவளது காதலின் உண்மையான நிலையை அறிவான் என்று தாய் எனது எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் பதிகம். இந்த பதிகம் முழுவதும் தாய் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் பதிகமாக அமைந்துள்ளது.

வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்
கண்ணுலாம் பொழில் சூழ் கழிப்பாலை
அண்ணலே அறிவான் இவள் தன்மையே

பெருமானின் திருநாமங்களைச் சொல்வதிலும் கேட்பதிலும், அவன் பால் தீராத காதல் கொண்ட பெண்களுக்கு எவ்வளவு ஆர்வம் என்பதை சம்பந்தரும் சீர்காழியின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.60.10) ஒன்றினில் வெளிப்படுத்துகின்றார். பெருமான் பால் தனக்குள்ள காதலை வெளிப்படுத்த, பல பறவைகளையும் வண்டினையும் தூது அனுப்பிய பின்னரும் தான் எதிர்பார்த்த பலன் ஏதும் விளையாததைக் கண்டு வருத்தத்துடன் இருக்கும் சம்பந்தர் நாயகி, அவனது திருப்பெயரினை கேட்டால் தனது ஏக்கம் சற்றேனும் குறையாதா என்ற எண்ணத்தில், தான் வளர்க்கும் கிளியிடம் பெருமானது பெயரினைக் கூறுமாறு இறைஞ்சும் பாடல் இது. அழகிய சிறகுகளை உடைய கிளியே, நான் நீ உண்பதற்காக தேனோடு கலந்த பாலினைத் தருவேன். நீ எனக்காக, இளம் பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவரும், கடற்கரையில் அமைந்துள்ள தோணிபுரத்து (தோணிபுரம் என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) ஈசனின் திருப்பெயரினை ஒரு முறை கூறமாட்டாயா என்று கேட்கின்றாள்.

சிறை ஆரும் மடக் கிளியே இங்கே வா தேனொடு பால்
முறையாலே உணத் தருவான் மொய் பவளத்தொடு தரளம்
துறையாரும் கடல் தோணிபுரத்து ஈசன் துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கு ஒரு கால் பேசாயோ

திருமங்கை மன்னனும், திருநெடுந்தாண்டகம் பாடல் ஒன்றினில், ஒரு தலைவி தான் வளர்க்கும் கிளி பெருமாளின் நாமத்தைச் சொல்வதைக் கேட்டு, அந்நாள் வரை தான் அந்த கிளியினை வளர்த்ததன் பயனைப் பெற்றதாக, அந்த கிளியினை கை கூப்பி வணங்கியதாக கூறுகின்றார். குறுங்குடி, திருவரங்கம், திருத்தண்கா, திருவெக்கா என்பன பெருமானின் நூற்றெட்டு திவ்வியத் தலங்களில் அடங்கியவை. குறுங்குடி நெல்லை மாவட்டத்தில், நாகர்கோயில் செல்லும் பாதையில், சற்று உள்ளடங்கி உள்ளது. திருத்தண்கா, திருவெக்கா என்பன காஞ்சியில் உள்ள திருத்தலங்கள்.
    
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும்                             கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு அறிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை                                 அந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண்காவில் வெக்காவில்                         திருமாலை பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக்கிளியை                         கைகூப்பி வணங்கினாளே

மணிவாசகரும் திருத்தசாங்கம் என்ற பதிகத்தில், ஆரூரன், செம்பெருமான், எம்பெருமான், தேவர் பிரான் என்று தனது கிளி, சிவபெருமானின் பெயரை, திருமாலும் பிரமனும் உரைப்பது போன்று உரைக்க வேண்டும் என்று கேட்கின்றார். பெருமானின் திருப்பெயரினைக் கேட்பதில்தான் அருளாளர்களுக்கு எத்தனை விருப்பம், ஆனந்தம். ஏரார் = அழகு நிறைந்த.

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக் கோன்
சீரார் திருநாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பெருமான் என்று

பெய்து = உடல் வருத்தமடைந்து, உடல் இளைத்து. உறும் கோல் வளை = கீழே விழும் வளையல். இந்த பாடல் நமது ஆன்மாவை பெண்ணாக உருவகித்து, எப்போதும் பெருமானின் திருநாமத்தைச் சொல்ல வேண்டும் என்ற ஆன்மாவின் உண்மையான விருப்பத்தை வெளியிடும் பாடலாக கருதப்படுகின்றது.

பொழிப்புரை

தான் பெருமானின் கொண்ட காதல் கூடாத ஏக்கத்தால், தனது உடல் இளைத்து உடல் மெலிந்து கை வளையல்கள் கழன்று காணப்படும் எனது மகள் எப்போதும் தனது உள்ளம் கசிந்துருகி, பெருமானின் திருப்பெயரினை உரைக்கின்றாள். மயிலாடுதுறை தலத்தில் உறையும் வள்ளல், வானத்திலிருந்து இழிந்து வந்த கங்கை நதியைத் தாங்கிய சடையன், தனது காதலினை ஏற்க வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் அவனது நாமங்களை உரைத்தவாறு இருகின்றாள். பெருமானே நீர்தான் இவளது கவலையைத் தீர்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com