53. கொள்ளும் காதன்மை -  பாடல் 2

அவளை வருத்தும் பசலை நோயும்

சித்தம் தேறும் செறிவளை சிக்கெனும்
பச்சை தீரும் என் பைங்கொடி பால்மதி
வைத்த மா மயிலாடுதுறை அரன்
கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே
 

விளக்கம்

இந்த பாடல் முந்தைய பாடல் போன்று, ஆன்மாவின் விருப்பத்தை, பெருமானுடன் எப்போதும் ஒன்றி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிபடுத்தும் பாடலாக கருதப்படுகின்றது. சிவபெருமான் பால் ஆழ்ந்த காதல் கொண்ட தனது மகள், பெருமான் அவளருகே இல்லாததால், பிரிவாற்றாமையை தாங்க முடியாமல் வருந்துகின்றாள். அந்த வருத்தத்தின் விளைவாக அவளது உடல் பசலை பூத்து காணப்படுகின்றது. பெருமானும் மனம் இரங்கி தனது மகளின் காதலினை ஏற்றுக்கொள்ளும் அறிகுறி ஏதும் தாய்க்குத் தென்படவில்லை. நாளுக்கு நாள் மகளின் காதல் ஏக்கம் பெருகுவதால், மகள் சித்தம் கலங்கும் நிலையில் உள்ளதாக தாய் நினைக்கின்றாள். தனது மகளின் வேண்டுகோளோ அல்லது தனது வேண்டுகோளோ ஏற்கப்படாத நிலையில் அவனுடன் தொடர்பு கொண்ட பொருள் ஏதேனும் தனது மகளின் அருகில் இருந்தால் அவளது வருத்தம் குறையலாம் என்ற நம்பிக்கையில் அப்பர் நாயகியின் தாய் எண்ணுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். பெருமான் தனது தலையில் சூடிக் கொண்டிருக்கும் கொன்றை மாலையில் ஒரு மலரினை கொடுத்தால் எனது மகளின் வருத்தம் தீருமே என்று இங்கே கூறுகின்றாள். பச்சை = பசலை நோய். பெருமான் கருணை உள்ளம் கொண்டவன் என்பதை நினைவூட்டும் வகையில் சந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்த நிகழ்ச்சியை, பால்மதி வைத்த பிரான் என்று பெருமானை அழைப்பது நயமாக உள்ளது.

சீர்காழி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் (5.45) ஏழாவது பாடலில். பெருமான் தனது தலையில் சூடியுள்ள கொன்றை மலரினை அணிவது தான் தனது மகளின் விருப்பம் என்று அப்பர் நாயகியின் தாய் கூறுவதாக அமைந்த பாடல் இது. சிவபெருமான் மீது கொண்ட காதல் நிறைவேறாத காரணத்தால், தனது மகளின் உடல் நாளுக்கு நாள் இளைப்பதைக் கண்ட ஊரார், தாயாகிய நான் எனது மகளின் உடல் நலத்தை சரியாக பேணுவதில்லை என்று குறை கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள், நான் எனது மகளின் போக்கைத் திருத்துவதற்காக உணர்த்திய அறிவுரைகள் எதனையும் எனது மகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், தனது வேண்டுகோளுக்கு இரங்கி பெருமானும் எனது மகளின் துயரத்தினை தீர்ப்பதற்கு செயல்படவில்லை என்பதையும், இவர்கள் யாரும் அறியவில்லை. பெருமான் தனது தலையில் சூடியுள்ள கொன்றை மலர் கிடைப்பது கடினம் என்பதை சொல்லி எனது மகளையும் நல்வழிபடுத்தவும் ஊரார் எவரும் தயாராக இல்லை என்று அவர்களை தாய் சாடும் பாடல்.

ஒன்று தான் அறியார் உலகத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
துன்றுவார் பொழில் தோணிபுரவர்
கொன்றை சூடும் குறிப்பது ஆகுமே

இதே கருத்து அப்பர் நாயகியின் விருப்பமாக வெளிப்படும் பாடல் ஒன்றினை நாம் இங்கே காண்போம். நாரையைப் பார்த்து தனது வருத்தத்தை அப்பர் நாயகி தெரிவிப்பதாக அமைந்த பாடல் இது. நாரை இறைவனிடம் தனக்காக தூது சென்று, அவன் அணிந்திருக்கும் கொன்றை மாலை தனக்கு கிடைக்குமாறு உதவ வேண்டும் என்று இறைஞ்சும் பாடல். காதல் ஏக்கத்தில் தனது உடல் இளைத்து வளையல் கழன்ற நிலையில் தான் இருப்பதற்கு காரணமாக இறைவனை, வளைகவர்ந்தான் என்று குறிப்பிட்டு, எனது வருத்தம் சற்று குறையும் வகையில் கொன்றை மலரை தாராது இறைவன் போய்விடுவானோ என்று தனது அச்சம் வெளிப்படுத்துவதை நாம் இந்த பாடலில் காணலாம். இந்த பாடல் பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.12) ஆறாவது பாடல்.

பொங்கோத மால் கடலில் புறம்புறம் போய் இரை தேரும்
செங்கால் வெண் மடநாராய் செயல் படுவது அறியேன் நான்
அங்கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான்
தங்கோல நறும் கொன்றைத் தார் அருளாது ஒழிவானோ

பெருமான் சூடியுள்ள கொன்றை மலரினை விரும்பும் அப்பர் நாயகியின் தன்மை, பெருமான் எப்படி கொன்றை மலரினை, தன்னுடன் எப்போதும் இருக்கும் உமையம்மை மற்றும் கங்கை நங்கை அறியாத வண்ணம் எப்படி கொடுத்தார் என்று, அவளது தோழிகள் பரிகாசம் செய்யும் பாடலை (5.15.6) நமக்கு நினைவூட்டுகின்றது. இதழி = கொன்றை மாலை. பெருமானைக் கூடாததால் ஏற்பட்ட வருத்தத்தில், அப்பர் நாயகியின் உடலில் பசலை தட்டுகின்றது. உடல் ஏக்கத்தினால் பொன்னிறமாக, இள மஞ்சள் நிறமாக மாறுகின்றது. அந்த பொன்னிறம், பெருமானின் அணிந்திருக்கும் கொன்றை மலரின் சேர்க்கையால் ஏற்பட்டது என்று அவளது தோழிகள் அவளை பரிகாசம் செய்கின்றார்கள். கொன்றை மலரினை பெருமான் தனது மார்பினிலும், சடையிலும் அணிந்திருக்கின்றார். மார்பினில் அணிந்துள்ள கொன்றை மலரை, பெருமான் எந்த பெண்ணுக்கும் கொடுப்பதை அவரது மனைவியாகிய பார்வதி தேவி, அவரது உடலின் இடது பாகத்தில் இருந்தவாறு, தடுத்துவிடுவாள். சடையில் உள்ள கங்கை நங்கையோ, அவ்வாறே சடையில் உள்ள கொன்றை மலரை எவருக்கும் பெருமான் கொடுக்காதவாறு பாதுகாப்பாள். இவ்வாறு இரண்டு இடங்களிலும் உள்ள கொன்றை மலர்கள் பாதுகாக்கப் படுகையில், எவ்வாறு இந்த பெண்ணுக்கு, பெருமான் அணிந்த கொன்றை மலர் கிடைத்தது என்ற வியப்பும் அவர்களது பரிகாசத்தில் மறைந்துள்ளதை நாம் உணரலாம்.

மங்கை காணக் கொடார் மணமாலையை
கங்கை காணக் கொடார் முடிக் கண்ணியை
நங்கைமீர் இடைமருதர் இந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே

பொழிப்புரை

கருணையுடன் பால் மதியத்தைத் தனது சடையில் வைத்த பெருமான், சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை தலத்தில் உறையும் பெருமான், தனது சடையில் சூடியுள்ள கொன்றை மலர் கொத்தினில் ஒன்றினை கொடுத்தால், பெருமானுடன் தொடர்புகொண்ட பேறு ஒன்று கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் எனது மகளின் சிந்தனை தெளிவடையும்; மகிழ்ச்சியால் அவள் உடல் பூரிக்க, முன்னம் அவளது கைகளிலிருந்து நழுவி கீழே விழுந்த வளையல்கள் அவளது கையினில் இப்போது செறிந்து காணப்படும், அவளை வருத்தும் பசலை நோயும் தீரும். இவ்வாறு எனது அன்பு மகள், பசுமையான கொடி போன்ற எனது மகள், தன்னை பீடித்துள்ள காதல் நோய் குறையும் வகையில் பெருமானே நீர் தான் அருள் புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com