53. கொள்ளும் காதன்மை -  பாடல் 4

இறப்பதற்கு அப்பர் பிரான் அஞ்சுகின்றார்

வெஞ்சினக் கடும் காலன் விரைகிலான்
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மா மயிலாடுதுறை உறை
அஞ்சொலாள் உமை பங்கன் அருளிலே
 

விளக்கம்

அஞ்சு இறப்பு = அஞ்சத்தக்க இறப்பு. விரைகிலான் = விரைந்து வரமாட்டான். மஞ்சன் = மிகுந்த வல்லமை உடையவன். அஞ்சொலாள் = அழகிய சொல்லினை உடைய உமையம்மை. தலத்து இறைவியின் ஒரு திருநாமம் அஞ்சொலாள் என்பதாகும். அஞ்சும் இறப்பு என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். ஏன் இறப்பினுக்கு அஞ்ச வேண்டும் என்பதை நாம் இங்கே சற்று ஆராயலாம். நாம் இறந்த பின்னர் நடப்பதென்ன என்பதை ஒரு கணம் யோசித்தால் ஏன் இறப்பதற்கு அப்பர் பிரான் அஞ்சுகின்றார் என்பது நமக்கு புரியும். நாம் இந்த பிறவியில் சேர்த்த வினைகள், மற்றும் முந்தைய பிறவிகளில் ஈட்டிய வினைத் தொகைகளின் ஒரு பகுதியை நரகத்திலோ அல்லது சொர்கத்திலோ அனுபவித்த பின்னர், எஞ்சியுள்ள வினைத் தொகைகளை கழிப்பதற்காக, மறுபடியும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. இவ்வாறு இறப்பிற்கு பின்னர் பிறப்பு ஏற்பட்டு மறுபடியும் உலக வாழ்க்கையின் மாயைகளில் சிக்குண்டு உழல்வதை அஞ்சு இறப்பும் பிறப்பும் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.
சிவபெருமானின் அருளினைப் பெற்ற அடியார்களை அணுக காலன் விரைந்து செல்லமாட்டான் என்று கூறி, இயமன் அச்சப்படும் நிலையினை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். சிறுவன் மார்க்கண்டேயனுக்கு, பெருமான் அருளிய வரலாறு அனைவரும் அறிந்ததே. இவ்வாறு சுவேதகேது என்ற சிறுவனுக்கு (வெண்காடு தலத்தில்) சுசரிதன் என்ற சிறுவனுக்கும் (திருவையாறு தலத்திலும்) பெருமான் அருளிய வரலாறு அந்தந்த தலங்களின் தலவரலாற்றில் காணப்படுகின்றது.
திருவெண்காட்டில் வாழ்ந்து வந்த சுவேதகேது என்ற சிறுவனின் ஆயுள் எட்டு வருடங்கள் தான் என்று விதிக்கப்பட்டிருந்தது. இறைவனிடம் அளவிலா பக்தி கொண்டு இருந்த அந்த சிறுவனின் உயிரைப் பறிப்பதற்காக வந்த யமனை, தனது பக்தனை அவமரியாதை செய்ததற்காக சிவபிரான் தண்டித்து, சிறுவனுக்கு நீண்ட ஆயுள் கொடுத்தார். சுவேதகேதுவின் பக்தியை மெச்சி அவனுக்கு தனது ஏழு நடனக் கோலங்களின் காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து ஆல மிடற்றான் அடியாரை அணுக நமன் தூதர் அஞ்சுவர் என்று, கண் காட்டும் நுதலானும்’ எனத் தொடங்கும் பதிகத்தில் (2.48) சம்பந்தர் அருளியுள்ளார். இலிங்க புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. வெண்காட்டான் என்று தலத்து இறைவனின் திருவடிகளை வழிபட்ட சிறுவன் என்று கூறப்படுவதால், இந்த தலத்தில் நடந்த நிகழ்ச்சியை சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று நாம் கொள்ளலாம்.

வேலை மலி தண் கானல் வெண்காட்டான் திருவடிக் கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்
மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர்
ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே

சுசரிதன் எனும் சிறுவன் சிறு வயதிலேயே தனது தாய் தந்தையரை இழந்துவிட்டான். அவனது தாய் தான் இறக்கும் தருவாயில் மகனது தொடையில் தலை வைத்து படுத்துக்கொண்டு இருந்தபோது, மகனை நோக்கி இனிமேல் சிவபிரான்தான் அவனுக்கு தாயும் தந்தையும் என்று கூறி, சிவத்தலங்கள் சென்று தரிசித்து வருமாறு கூறி இறந்துவிட்டார். தாயின் சொற்படி சிவத் தலங்களை தரிசித்து வந்த மைந்தன், ஒருநாள் பழனம் வந்தடைந்தான். இறைவனை கண்டு வணங்கிய பின்னர் இந்த தலத்திலே இரவு தங்கிவிட்டான். நடு இரவில் யாரோ கதவு தட்டும் ஓசை கேட்கவே சிறுவன் எழுந்து கதவைத் திறந்து பார்த்தான். அவன் எதிரே கன்னங்கரிய உடலுடனும், மடித்த உதடுகளுடனும், அனல் கக்கும் விழிகளுடனும் தோன்றிய காலதேவன், அவனது ஆயுட்காலம் இன்னும் ஐந்து நாட்களில் முடிவடையப்போவதாகவும், அதற்குத் தயாராக இருக்குமாறும் சொல்லிவிட்டு மறைந்துவிட்டான். மரணத்தைப் பற்றி கவலைப்படாத சிறுவன், தன்னால் தாய் கூறியவாறு சிவத் தலங்கள் செல்லமுடியாமல் போய்விடுமே என்று வருந்தினான்.
மறுநாள் காலை பழனத்து இறைவனைக் கண்டு தொழுது அடி பணிந்து தனது மன வருத்தத்தை இறைவனிடம் சொல்லி அழுதபோது, இறைவன் சிறுவனை திருவையாறு செல்லுமாறும் தாம் அங்கே தோன்றி, தக்க சமயத்தில் அவனை காப்பதாகவும் சொல்லி அனுப்பினார். அவனுக்கு பல தலங்கள் பிரயாணம் செய்யும் பேற்றை வழங்கியதால் இறைவனுக்கு பிரயாண நாதேஸ்வரர் என்ற பெயரும், ஆபத்து காலத்தில் உதவுவதாக வாக்கு அளித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரும் பழனத்து இறைவனுக்கு ஏற்பட்டது. சிவபிரான் தனது அருளையே சிறுவனுக்கு கவசமாக்கி சிறுவனை ஐயாறு அனுப்பிவைத்தார். இந்த தலத்தில் அருளியபோதும், பின்னர் ஐயாறு தலத்தில் அருளியபோதும் இறைவன் சிறுவனுக்கு சோதி வடிவில் காட்சி கொடுத்ததால் சோதி வானவர் என்ற பெயரும் அவருக்கு ஏற்பட்டது. இறைவன் கூறியபடி திருவையாறு சென்ற சிறுவன் தெற்கு கோபுர வாயிலில் அமர்ந்து சிவநாமத்தையே சொல்லிக்கொண்டு இருந்தான். முன்னமே கூறியபடி, ஐந்தாவது நாள் இரவு யமன் சிறுவனின் அருகில் வரவே, சிவபிரான் தோன்றி மார்க்கண்டேயனை காப்பாற்றியதுபோல யமனை காலினால் உதைத்து சுசரிதன் பல்லாண்டு காலம் வாழும் வரத்தினையும் அருளினார். ஐயாற்றின் தெற்கு வாயிலில் அமர்ந்துள்ள மூர்த்திக்கு ஆட்கொண்டார் என்ற பெயர் இதனால் ஏற்பட்டது. பழனத்தில் வாக்கு அளித்த பெருமான் தான் ஐயாற்றில் ஆட்கொண்டாராக எழுந்து அருளியிருக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. சிறுவனின் ஆயுட்காலத்தை நீட்டும் அமுதம் போல் அருள் வழங்கியதால் அமுத லிங்கேஸ்வரர் என்ற பெயரும் சுதாலிங்கமூர்த்தி என்ற பெயரும் பழனத்து இறைவனுக்கு ஏற்பட்டது.
யமன் நம்மை வந்து அணுகும்போது, நமது உற்றார்கள் நமக்கு உதவ முடியாத நிலையில் இருப்பார்கள். மார்க்கண்டேயன், சுவேதகேது மற்றும் சுசரிதன் ஆகிய சிறுவர்களுக்கு அவர்களது உற்றார்கள உதவி செய்ய முடியாத நிலையில், அவர்களுக்கு உறுதுணையாக இறுதி உதவி செய்தவன் சிவபெருமான் என்ற கருத்தினை திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (4.92.13) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நன்னூல் = சிவாகமங்கள், சிவனைப் பற்றிய புகழினை எடுத்துரைக்கும் நூல்கள். காதல் செய்ய கிற்பார் = காதல் செய்ய வல்லவர்கள். அற்றார் = பற்று அற்றார்கள். ஐயாரப்பனின் திருவடிகள், நமக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று இதனால் உணர்த்தப்படுகின்றது. யமன் தனது பாசக்கயிற்றுடன் மார்க்கண்டேயர், சிறுவன் சுவேதகேது ஆகியோரை அணுகியபோது, இருவரையும் காப்பாற்றியவர் சிவபெருமான்.

உற்றார் இல்லாதார்க்கு உறுதுணை ஆவன ஓதி நன்னூல்
கற்றார் பரவப் பெருமை உடையன காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளர் ஒளி வானகம் தான் கொடுக்கும்
அற்றார்க்கு அரும் பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே.

பொழிப்புரை

மிகுந்த வல்லமை படைத்தவனும், மயிலாடுதுறை தலத்தில் உறைபவனும், அழகிய சொல்லினை உடைய உமையம்மையைத் தனது உடலில் பங்காக ஏற்றுக்கொண்டவனும் ஆகிய சிவபெருமானின் அருள் இருந்தால், அத்தகைய அடியார்களை, கொடிய கோபம் கொண்டு உயிர்களை உடலிலிருந்து பிரிக்க விரையும் காலன் விரைந்து அணுகமாட்டான். பெருமானின் அருளின் உதவியால், நாம் அனைவரும் அஞ்சக்கூடிய இறப்பையும், அதன் பின்னர் இயல்பாகத் தொடர்ந்து வரும் பிறப்புகளையும் தவிர்த்து, நாம் பிறப்பிறப்புச் சுழற்சியை ஏற்படுத்தும் சங்கிலியை அறுத்து எறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com