49. பண்காட்டி படியாய - பாடல் 1

சீர்காழியிலிருந்து கோலக்கா சென்ற அப்பர் பிரான்

(வெண்காடு – குறுந்தொகை)

முன்னுரை

சீர்காழியிலிருந்து கோலக்கா சென்ற அப்பர் பிரான், பல சோழ நாட்டுத் திருத்தலங்கள் சென்று பெருமானை தரிசனம் செய்ய ஆவல் கொண்டார். அப்பர் பிரான் வெண்காடு

சென்றதாக, தனியாக பெரியபுராண குறிப்பு ஏதும் காணப்படவில்லை. என்றாலும், நனிபள்ளி முதலா பல தலங்கள் என்ற குறிப்பில் இந்த தலமும் அடங்கும் என்று

பெரியபுராண உரை ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய இரண்டு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. அவற்றில் ஒன்றான

குறுந்தொகைப் பதிகத்தை நாம் இங்கே காண்போம். பாடல் தோறும் விகிர்தனார் என்று அழைத்து, வெண்காட்டு விகிர்தன் பால் தீராத காதல் கொண்டுள்ள நாயகியின்

உணர்ச்சிகளை திருத்தாண்டகப் பதிகத்தில் வெளிப்படுத்திய அப்பர் பிரான், இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் நெஞ்சே, வெண்காட்டு இறைவனை சென்றடைந்து

உய்வாயாக என்று கூறுகின்றார். தனது நெஞ்சத்திற்கு சொல்வது போன்று, நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பதிகம்.


ஆண்ட அரசு எழுந்தருளக் கோலக்காவை அவரோடும் சென்று
            இறைஞ்சி அன்பு கொண்டு,
மீண்டு அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால்
        வேதநாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடூர் நீடு திருக்குறுக்கை
                திருநின்றியூரும்
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல்
            தொழுது வணங்கிச் செல்வார்

பாடல் 1

பண் காட்டிப் படியாய தன் பத்தர்க்குக்
கண் காட்டிக் கண்ணில் நின்ற மணி ஒக்கும்
பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு
வெண்காட்டை அடைந்து உய்ம் மட நெஞ்சமே
 


விளக்கம்

சிவபெருமான் நமக்கு என்னென்ன காட்டுகின்றார் என்ற செய்தியுடன் இந்த பதிகம் தொடங்குகின்றது. பண்ணோடு இசைத்து பாடல் பாடும் விதத்தை நமக்கு, காட்டிக் கொடுத்த பெருமான், தனது உருவத்தில் பெண்ணைக் காட்டியும், பிறைச் சந்திரனைக் காட்டி தனது சென்னியையும் காட்டுகின்றார் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு இந்த தலத்தின் மீது சம்பந்தர் பாடிய பதிகத்தினை (2.48) நினைவூட்டுகின்றது. பெருமானது நெற்றி, நெற்றிக் கண்ணினைக் காட்டுகின்றது, அவரது கை நெருப்புப் பிழம்பினை காட்டுகின்றது, உருவம் பெண்ணினை காட்டுகின்றது, சடை பிறையை காட்டுகின்றது, அவர் பாடும் இசை பண்ணினை உணர்த்துகின்றது, மழை மேகமாக நிற்கும் அவனது உருவம் அதனால் வளரும் பயிரைக் காட்டுகின்றது என்று கூறும் சம்பந்தர், அவனது கொடி எருது வாகனத்தை காட்டுகின்றது என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே

பெரிய புராணத்தில் இருவரது வரலாற்றில் கூறப்படும் நிகழ்ச்சிகளை ஒப்பு நோக்குகையில், இருவரில் முதல் வெண்காடு சென்றவர் சம்பந்தர் என்பது நமக்குப் புலனாகும்.

மூன்று வயதுக் குழந்தை தேவாரம் பாடிய அற்புதத்தினை அறிந்த நனிபள்ளி மக்கள் (ஞான சம்பந்தரின் தாயின் ஊர் நனிபள்ளி) அந்த குழந்தையை தங்கள் ஊருக்கு

வருமாறு அழைக்கின்றார்கள். ஞானசம்பந்தரும் நனிபள்ளி சென்று திரும்பும் வழியில் வெண்காடு முதலான தலங்கள் வந்ததாக பெரியபுராணம் நமக்கு உணர்த்துகின்றது.

இவையெல்லாம் சம்பந்தருக்கு உபநயனச் சடங்கு நடப்பதற்கு முன்னம் நடந்தவை. அப்பர் பிரான் சம்பந்தரை சீர்காழியில் சந்தித்தது, அவரது உபநயனத்திற்கு பின்னரே.

காழியில் சம்பந்தரை சந்தித்த பின்னரே அப்பர் பிரான் வெண்காடு செல்கின்றார். எனவே சம்பந்தர் பாடிய வெண்காட்டுப் பதிகம் காலத்தால் முந்தையது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே அப்பர் பெருமான் சம்பந்தர் அருளிய கண்காட்டும் நுதலானும் என்று தொடங்கும் பதிகத்தை மிகவும் விரும்பி கேட்டதன் தாக்கம், இந்த பதிகத்தின் முதல் பாடலில் வெளிப்படுகின்றதோ என்று நமக்கு தோன்றுகின்றது.

படியாய = நிலவுலகத்தில் உள்ள. பண் காட்டி = உரிய பண்களில் பொருந்துமாறு பாடி. தேவாரப் பாடல்களை இசையுடன் பாட வேண்டிய அவசியம், சம்பந்தரின் பெரும்பாலான பதிகங்களின் கடைப் பாடலில் உணர்த்தப்படுகின்றது. பண்ணுடன் இசைத்துப் பாடும் போது தான், நமக்கு உதவி செய்யும் ஒலியலைகளை நம்மால் எழுப்பமுடியும் என்பதால் தான் சம்பந்தர் பண்ணுடன் இசைத்துப் பாட வேண்டும் என்று வற்புறுத்துகின்றார். இறைவனும் நாம் பண்ணுடன் ஒன்றிய பாடல்களை பாட வேண்டும் என்று விரும்புகின்றான்போலும். அதனால் தான் அப்பர் பிரானின் வாய் மொழியாக பண் காட்டிப் படியாய பத்தர் என்ற தொடர் வந்துள்ளது. உலகப் பொருட்கள் மற்றும் அந்த பொருட்களால் நாம் அடையும் இன்பங்கள் நிலையானது என்று கருதி, இறை வழிபாட்டில் ஈடுபடாத நெஞ்சங்களை, அறியாமையில் ஆழ்ந்து இருக்கும் நெஞ்சம் என்ற பொருள் பட, மட நெஞ்சமே என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறும் முகமாக நமக்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி.     
    
பொழிப்புரை

பண்ணுடன் இசைத்து பாடல்கள் பாடும் நிலவுலக அடியார்களின் மேல் தனது கடைக்கண் பார்வையினை இறைவன் பதித்து, அவர்களுக்கு ஞானத்தையும் தெளிவையும் அளிப்பதால், அந்த அடியார்கள் அவனைத் தங்களது கண்ணில் உள்ள கருமணி போன்று கருதுகின்றார்கள். அந்த இறைவன், தனது உருவத்தில் உமையம்மை இருப்பதையும் காட்டி, தான் வேறு அம்மை வேறு அல்ல என்பதையும் நமக்கு உணர்த்துகின்றான். தனது சடையில் பிறைச்சந்திரனை வைத்து, அவனுக்கு அடைக்கலம் அளித்த பெருமான் உறையும் வெண்காடு தலத்தினை அடைந்து, அவனை வழிபட்டு, அறியாமையில் ஆழ்ந்திருக்கும் நெஞ்சமே நீ உய்வினை அடைவாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com