49. பண்காட்டி படியாய - பாடல் 2

கரி என்ற சொல்லுக்கு யானை என்ற

   
கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார்
ஒள்ளிய கணம் சூழ் உமை பங்கனார்
வெள்ளியன் கரியன் பசு ஏறிய
தெள்ளியன் திரு வெண்காடு அடை நெஞ்சே
 

விளக்கம்

கரி என்ற சொல்லுக்கு யானை என்ற பொருள் கொண்டு, யானையை உடையவன் என்று விளக்கம் அளிப்பதும் உண்டு. இரண்டாயிரம் தந்தங்களை உடைய பெருமை படைத்த அயிராவணம் என்ற யானை கயிலாயத்தில் இருப்பதாக கூறுவார்கள். அப்பர் பெருமான் திருவாரூர் திருத்தாண்டகத்தின் முதல் பாடலில் அயிராவணம் ஏறாதே ஆனேறு ஏறிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். உயிராவணம் = உயிராத வண்ணம். உயிர்த்தல் என்ற சொல், மூச்சுவிடுதல் என்ற பொருளில் இங்கே கையாளப்பட்டுள்ளது. உற்று நோக்கி = தியானத்தில் ஆழ்ந்து மனத்தினில் உருவகப்படுத்திய இறைவனின் உருவத்தினை நினைந்து. கிழி = திரைச்சீலை, துணி. உயிர் ஆவணம் செய்தல் = உயிரினை ஒப்படைத்தல். ஆவணம் = சாசனம். ஆவணம் என்பதற்கு ஓலை என்ற பொருள் கொண்டு அடிமை ஓலை எழுதி, தன்னை அடிமையாக இறைவனுக்கு ஒப்படைத்தல் என்றும் கூறுவார்கள். அயிராவணம் (நான்காவது அடியில் உள்ள சொல்) = ஐ இரா வண்ணம், ஐயம் ஏதும் இல்லாத வண்ணம் உள்ள உண்மையான மெய்ப்பொருள்.

உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உரு
                    எழுதி
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கைத் தந்தால்
        உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி
அயிராவணம் ஏறாதே ஆனேறு ஏறி அமரர் நாடு ஆளாதே
                ஆரூர் ஆண்ட
அயிராவணமே என் அம்மானே நின் அருட்கண்ணால்
            நோக்காதார் அல்லாதரே

நாம் இங்கே விளக்கத்திற்கு எடுத்துக்கொண்டுள்ள பாடலில் இசையுடன் பொருந்திய பாடல்கள் பாடும் அடியார்களை தனது கடைக்கண்ணால் அருள் பாலிக்கும் பெருமானே என்று குறிப்பிடும் அப்பர் பிரான், சிவபெருமானைக் காணாத கண்களை உடையவர்கள் அவரது அருட்பார்வைக்கு தகுதியற்றவர்கள் என்று இந்த திருவாரூர் பதிகத்தின் பாடலில் சாடுகின்றார். இந்த பாடலின் பொழிப்புரை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அயிராவணம் என்று இரண்டாயிரம் தந்தங்களைக் கொண்ட பெருமை வாய்ந்த யானை கயிலையில் இருந்தாலும், அதனை வாகனமாகக் கொள்ளாமல், எளிமையான எருதினை வாகனமாகக் கொண்டு, தேவர்கள் உலகத்தினை ஆளும் திறமையும் வல்லமையும் கொண்டிருந்தாலும், தேவலோகத்தை ஆளாமல், அடியார்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரூர் நகரினை ஆளும் இறைவனே. தங்களது உயிர் மூச்சினை அடக்கி, உன்னை தியானித்து, உனது உருவத்தைத் தங்களது உள்ளத்தில் என்றும் அழியாத வண்ணம் பதித்து, உனக்கு அடிமையாகத் தங்களைக் கருதி, அந்த அடிமை சாசனத்தை உனது கையில் ஒப்படைக்கும் அடியார்களுடன், நீ இணைந்து வாழ்கின்றாய். எவருக்கும் எந்த ஐயமும் ஏற்படாமல் உண்மையான மெய்ப்பொருளாக இருப்பவனே, உன்னால் வழங்கப்பட்ட கண்கள் கொண்டு உன்னைக் காணாதவர்கள், உனது அருளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்லர்.

இந்த பாடலில் கரியன் என்ற சொல் வெள்ளியன் என்ற சொல்லினைத் தொடர்ந்து வருவதை நாம் உணரலாம். வெள்ளியன் என்றால் உடல் முழுதும் திருநீறு பூசி வெண்மை நிறத்துடன் காட்சி அளிப்பவன் என்று பொருள். கரியன் என்ற சொல் இதனைத் தொடர்ந்து வருவதால், கரியன் என்ற சொல்லுக்கு பெருமானின் திருமேனியுடன் இணைத்து பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். சிவபெருமானின் ஐந்து திருமுகங்களும் வெவ்வேறு வண்ணத்துடன் காட்சி அளிப்பதாக கூறுவார்கள்.

ஈசான முகம் ஸ்படிக நிறம் என்றும், வாமதேவ முகம் செம்மை நிறம் என்றும், அகோர முகம் கருமை நிறம் என்றும், சத்யோஜாத முகம் வெண்மை நிறம் என்றும், தத்புருட முகம் பொன்னிறம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எனவே கரியன் என்பதற்கு அகோர முகத்தினை உடையவன் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

கொள்ளி வெந்தழல் = கொள்ளிக் கட்டையில் பற்றிய நெருப்பு. ஒள்ளிய = ஒளி பொருந்திய. பசு என்ற சொல் அவரது வாகனமாகிய எருதினை குறிப்பதாக கொள்ள வேண்டும். தெள்ளியன் = தெளிந்த அறிவினை உடையவன்.

பொழிப்புரை

எரியும் கொள்ளிக்கட்டையின் நெருப்பை ஏந்தியவாறு கைகளை வீசி நடனம் ஆடுபவனும், ஒளி பொருந்திய பூத கணங்களால் எப்போதும் சூழப்பட்டு இருப்பவனும், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பகுதியில் ஏற்றவனும், உடல் முழுவதும் திருநீறு பூசப்பட்டதால் வெண்மை நிறத்துடன் காட்சி அளிப்பவனும், கரிய நிறம் கொண்ட அகோர முகத்தினை உடையவனும், தெளிந்த அறிவினை உடையவனும் ஆகிய பெருமானை, வெண்காடு தலம் சென்று வழிபட்டு, நெஞ்சமே நீ வாழ்வினில் உய்வினை அடைவாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com