49. பண்காட்டி படியாய - பாடல் 3

வீடுபேற்றினை அடையும் வழியைத் தேடிச் சென்று

ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே
வான் நோக்கும் வழியாவது நின்மினோ
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே
 

விளக்கம்

ஊன் நோக்கும் இன்பங்கள் = உடலில் உள்ள ஐம்பொறிகள் பெரும் இன்பங்கள். வான் நோக்கும் வழி = பேரின்பம் தரும் முக்தி வீட்டினை அருளும் வழி. உழலுதல் = வருத்துதல். நின்மின் = நில்லுங்கள். தேன் = அடியார்க்கு தேனாக இனிக்கும் பெருமான். பதிகத்தின் முதல் பாடலில், பண்ணுடன் இசைந்த பாடல்கள் பாடி வழிபடும் அடியார்களுக்கு கண்ணின் மணியாக இருப்பவன் பெருமான் என்று கூறும் அப்பர் பிரான், எப்போதும் தன்னை நோக்கும் அடியார்களுக்கு இந்த பாடலில் நாவிற்கு இனிய தேன் போன்று இருப்பான் என்று கூறுகின்றார். திருவைந்தெழுத்தை ஓதுதலும், இறைவனை தியானம் செய்து நிட்டையில் இருத்தலும், பரமனையே நோக்கி இருக்கும் செயல்களாக கருதப்படுகின்றன.

பொழிப்புரை

அறியாமையில் மூழ்கி இருக்கும் நெஞ்சமே, உடலின் ஐம்பொறிகள் விரும்பும் நிலையற்ற சிற்றின்பங்களைத் தேடி அலையாது, நிலையான இன்பத்தினைத் தரும் வீடுபேற்றினை அடையும் வழியைத் தேடிச் சென்று அந்த வழியில் நிற்பாயாக. தன்னை நோக்கி வழிபடும் அடியார்களின் நாவிலும் உள்ளத்திலும் தேன் போன்று இனிக்கும் தன்மையான், சிவபெருமான் உறையும் திருவெண்காடு அடைந்து அவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com