49. பண்காட்டி படியாய - பாடல் 7

எந்தெந்த மந்திரங்களை, எவ்வாறு, எப்போது

தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடையான் கயவர் புரம்
எரித்தவன் மறை நான்கினோடு ஆறங்கம்
விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே
 

விளக்கம்

புன்சடை = முறுக்குண்ட சடை. வேதங்களை கற்பவர்கள் அதன் ஆறு அங்கங்களையும் கற்றால்தான், வேதங்களை முறையாகவும் தவறின்றியும் சொல்லமுடியும். சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவையே அந்த ஆறு அங்கங்கள். சிக்ஷை என்றால் எழுத்துகளை உச்சரிக்கும் முறை. அந்தந்த எழுத்துக்களுக்கு உரிய மாத்திரையில், உரிய சப்த பேதங்களுடன் உச்சரித்தால்தான், அதன் பொருளை ஒழுங்காக அறியமுடியும். எனவே எழுத்துகளை உரிய முறையில் உச்சரிப்பது மிகவும் அவசியம். எழுத்துகளின் கூட்டாகிய சொற்களின் இலக்கணத்தை விரித்து கூறுவது வியாகரணம் என்ற அங்கம். பல சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்கள் உள்ளன. மேலும் பயன்படுத்தப்படும் இடத்திற்கு ஏற்ப சொற்களும் மாறுதல் அடைகின்றன. சொற்களின் இலக்கணத்தை அறிந்தால்தான், தவறேதும் இல்லாமல் அந்த சொற்களை நாம் பயன்படுத்த முடியும்.

மேலும் பண்டைய நாட்களில் வழக்கில் இருந்த சொற்கள் பல சிதைந்து இன்று வேறு முறையில் பயன்படுத்தப்படுவதை, நாம் தமிழ், வடமொழி உட்பட பல மொழிகளிலும் காண்கின்றோம். இலக்கணத்தை ஒழுங்காக கற்றவர்கள், சிதைந்துபோன இன்றைய வழக்கினை பயன்படுத்தாமல், இலக்கண விதியின்படி சரியாக அமைந்துள்ள பழைய சொல் வழக்கினை ஒழுங்காக புரிந்துகொள்ளமுடியும். மூன்றாவது அங்கமாக சந்தஸ் விளங்குகின்றது. வேதங்களில் காணப்படும் அனைத்து மந்திரங்களுக்கும் உரிய தேவதையுடன், அந்த மந்திரங்களை முதலாக உச்சரித்து பயனடைந்த முனிவரின் பெயர், அந்த மந்திரத்தில் உள்ள எழுத்துகள் உணர்த்தப்படுகின்றன. இவ்வாறு உணர்த்தப்படும் எழுத்துகளின் எண்ணிக்கை தான் சந்தஸ் என்று அழைக்கப்படுகின்றது. பரவலாக அனைவருக்கும் தெரிந்த காயத்ரி மந்திரத்தில் இருபத்துநான்கு எழுத்துக்கள் உள்ளன.

இவ்வாறு அந்தந்த மந்திரங்களின் எழுத்து எண்ணிக்கையை வரையறுத்து, அதனையும் வேதத்தின் ஒரு பாகமாக சேர்த்ததால் தான், காலப் போக்கில் இந்த மந்திரங்களில் ஒரு எழுத்து கூடாமலும் குறையாமலும் இந்நாள் வரை பாதுகாக்கப்பட்டுள்ளன எனவே மந்திரங்களை, பல்லாயிரம் வருடங்களாக கட்டுகோப்பில் வைத்துள்ள சந்தஸ், வேதத்தின் முக்கியமான அங்கமாகும். நிருக்தம் என்றால் விளக்கி சொல்லுதல் என்று பொருள். வேதங்களில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கு விளக்கமான பொருளைத் தெரிந்துகொண்டால், நாம் தவறான உச்சரிப்பால் ஏற்படும் பிழைகளின் விளைவுகளை நன்றாக தெரிந்துகொண்டு அந்த பிழைகளைத் தவிர்க்கமுடியும். ஜ்யோதிஷம் எனப்படும் அங்கம், கணித ஸ்கந்தம் மற்றும் ஹோரா ஸ்கந்தம் ஆகிய இரண்டு பிரிவுகளைக் கொண்டது. முதல் பாகமாகிய கணித ஸ்கந்தத்தில், கால தத்துவம் விளக்கப்படுகின்றது.

நாழிகை, நாள், திதி, கிழமை, மாதம், அயனம், பருவம், வருடம், நக்ஷத்திரங்கள் ஆகியவற்றை விளக்கும் இந்த பகுதி, அந்தந்த நக்ஷத்திரங்கள், திதிகள், காலங்கள் ஆகியவற்றின் தன்மையையும் நமக்கு உணர்த்துகின்றன, இதன் மூலம் நாம் செய்யவிருக்கும் சுபகாரியங்கள், மற்ற செயல்கள் செய்வதற்கு உரிய காலம் மற்றும் நேரம் எது என்பதை கணித்து செய்ய முடிகின்றது. இரண்டாவது பகுதி, பிறந்த தேதியினைக் கொண்டு மனிதனின் கடந்த காலம். நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை அறிய உதவுகின்றது. கல்பம் என்றால் பிரயோகம், பயன்படுத்தும் முறை என்று பொருள்.

எந்தெந்த மந்திரங்களை, எவ்வாறு, எப்போது, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்ற முறையினை அறிந்தால் தான் அந்த மந்திரத்தின் முழுப் பலனையும் நாம் அடைய முடியும். இவ்வாறு வேதங்களை நாம் முறையாக அறிந்து கொள்வதற்கும், வேதங்களின் கட்டுக்கோப்பு கெடாமல் இத்தனை ஆண்டுகள் இருந்ததற்கும், இந்த ஆறு அங்கங்களே காரணம். வேதங்களை விரித்து விளக்கிய பெருமானே இந்த ஆறு அங்கங்களையும் விரித்துக்கூறியதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். திருமுறைப் பாடல்களில் பல இடங்களில், ஆறு அங்கங்கள் குறிப்பிடப்படுகின்றன.

இந்த பதிகத்தின் ஐந்தாவது மற்றும் ஏழாவது பாடலில், பெருமான் ஞானத்தையும் அவன் திரிபுரம் எரித்த செயலையும் இணைத்து சொல்வதை நாம் உணரலாம். பொதுவாக கல்வியும் வீரமும் இணைந்து இருப்பதை நாம் மிகவும் அரிதாக காண்கின்றோம். ஆனால் உலக நியதிகளுக்கு அப்பாற்பட்ட பெருமான், இரண்டையும் ஒருங்கே உடைத்தவனாக இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. இவ்வாறு பெருமான் இருக்கும் ஒப்பற்ற நிலை, திருவாசகம் திருச்சாழல் பதிகத்தின் ஒரு பாடலிலும் உணர்த்தப்படுகின்றது. ஆலமரத்தின் கீழே அமர்ந்து, சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவன் சிவபெருமான் என்று ஒரு தோழியின் கூற்றுக்கு பதிலாக அடுத்தவள், அவ்வாறு அறம் உரைத்த பெருமான் தான், திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகள் மூன்றையும் ஒரே அம்பினால் எரித்தான் என்று கூறி, கல்வியிலும் வீரத்திலும் ஒருங்கே சிறந்து விளங்கியவன் சிவபெருமான் என்று உணர்த்தும் விதமாக அமைந்த பாடல்.

நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும்
கொன்றான் காண் புரமூன்றும் கூட்டோடே சாழலோ

பொழிப்புரை

முறுக்குண்ட தனது சடையில், கங்கை நதி, பாம்பு மற்றும் சந்திரன் ஆகிய மூன்றையும் தரித்தவன் சிவபெருமான். கீழ்மக்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்த சிவபெருமான், நான்கு வேதங்கள் மற்றும் அதன் ஆறு அங்கங்களை விவரித்து உணர்த்தியவன் ஆவான். இவ்வாறு வீரமும் கல்வியும் ஒருங்கே உடையவனாக விளங்கிய பெருமான் உறைகின்ற வெண்காடு தலம் சென்று அடைந்து அவனை வழிபட்டு, நெஞ்சமே நீ பயன் பெறுவாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com