49. பண்காட்டி படியாய - பாடல் 11

அப்பர் பிரானின் ஆழ்ந்த புலமையை

இராவணம் செய மாமதி பற்றவை
இராவணம் உடையான் தனை உள்குமின்
இராவணன் தனை ஊன்றி அருள் செய்த
இராவணன் திரு வெண்காடு அடைமினே
 

விளக்கம்

இராவணன் அல்லது இராவணம் என்ற சொற்களையே முதல் சொல்லாகக்கொண்டு நான்கு அடிகளும் வேறு வேறு பொருள் அறியும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ள நேர்த்தி அப்பர் பிரானின் ஆழ்ந்த புலமையை காட்டுகின்றது. பற்று இல்லாத வண்ணம் என்று இராவணம் என்ற சொல்லினை முதல் அடியில் குறிப்பிடும் அப்பர் பிரான்,

இரண்டாவது அடியில் இராவணம் (அயிராவணம் என்ற சொல் எதுகை கருதி இராவணம் என்று மாற்றப்பட்டுள்ளது) என்று அயிராவத யானையை குறிப்பிடுகிறார்.

மூன்றாவது அடியில் அரக்கன் இராவணன் பற்றிய நிகழ்ச்சி கூறப்படுகின்றது. நான்காவது அடியில், சிவந்த மேனி படைத்த பிரான் கண்டத்தில் சிவப்பு நிறம் இராமல் வேறு ஒரு நிறம் (கருமை) கொண்ட பான்மையை விளக்குகின்றது. பற்றவை என்ற சொல்லினை இராவணம் உடையான் என்று சேர்த்து, பெருமான் இயல்பிலேயே பாசங்களிலிருந்து விடுபட்டுள்ளவன் என்றும் பொருள் கொள்ளலாம். மதி என்ற சொல்லுக்கு சந்திரன் என்று பொருள் கொண்டாலும் அறிவு என்று பொருள் கொண்டாலும் இங்கே பொருத்தமாக உள்ளது. இராவணம் செய மாமதி பற்று அவை என்பதற்கு இரவில் இருள் இல்லாத வண்ணம் ஒளிவீசும் சந்திரனை சடையில் பற்றிய தன்மை என்பது ஒரு பொருள். நமது அறிவினைப் (மனதினை) பற்றி இருக்கும் பந்த பாசங்கள் இல்லாதவாறு செய்வதற்கு என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வாறு பொருள் கொள்வதற்கு, நாம் மாமதி பற்றவை இராவணம் செய என்று சொற்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அறியாமையில் மூழ்கி இருக்கும் நெஞ்சமே என்று பதிகத்தின் முந்தைய பாடல்களில் கூறுவதாலும், இராவணம் உடையான் தனை உள்குமின் என்று இரண்டாவது அடியில் சொல்வதாலும், இரண்டாவாதாக கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளது.

பொழிப்புரை

தக்கனது சாபத்தினால் அழிந்து விடாதபடி, தன்னிடம் சரண் அடைந்த சந்திரன் இரவில் ஒளி வீசுமாறு அருள் புரிந்தவன் சிவபெருமான். உமது அறிவு, பந்த பாசங்கள் மீது வைத்துள்ள பற்று அறவே இல்லாத வண்ணம் மாற வேண்டும் என்றால் நீங்கள் அயிராவணம் என்று அழைக்கப்படும் பெருமை மிக்க யானையை உடையவனாகிய சிவபெருமானை, உங்களது மனதினில் நினைவுகொள்வீர்களாக. அரக்கன் இராவணன், தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி, கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, தனது கால் பெருவிரலை கயிலை மலை மீது ஊன்றி, அரக்கனை மலையின் கீழ் அடர்த்து அவனது செருக்கினை அழித்ட பின்னர், சாமவேதம் பாடிய அவனுக்கு அருள்கள் பல புரிந்தவனும், அகோர முகத்தினை உடையவனுமாகிய இறைவன் உறையும் வெண்காடு தலத்தினைச் சென்று அடைந்து, அவனை வணங்கி, உங்களது வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.

முடிவுரை

பொதுவாக, பத்து பாடல்கள் கொண்ட பதிகங்களாகப் படைக்கும் அப்பர் பிரான், இந்த பதிகத்தின் பதினோரு பாடல்கள் அளித்துள்ளார். மட நெஞ்சமே வெண்காட்டானை சென்று அடைவாயாக என்று பாடல் தோறும் நமக்கு அறிவுரை கூறும் அப்பர் பிரான், இந்த கருத்தினை மேலும் வலியுறுத்தும் வண்ணம் பதினோராவது பாடலை அளித்துள்ளாரோ என்று தோன்றுகின்றது.

உங்களது வாழ்வினில் உய்வினை அடைவதற்கு நீங்கள் திருவெண்காடு செல்வீர்களாக என்று பாடல் தோறும் அப்பர் பிரான் நமக்கு கூறும் அறிவுரை, வெண்காடு தலத்து இறைவனை வணங்கினால், நமது வினைகள் ஓயும் என்று சம்பந்தர் கூறும் பாடலை நினைவூட்டுகின்றது. மந்திரம் மறையவை என்று தொடங்கும் பதிகத்தின் (3.15) கடைப் பாடலில் வெண்காட்டுப் பெருமானைக் குறித்து சம்பந்தர் பாடிய பதிகத்தினை பாடுபவரின் துன்பங்களும் வினைகளும் அறுவது ஆணை என்று கூறுகின்றார்.

நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன் எம் சிவன் உறை திருவெண்காட்டின் மேல்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே

அப்பர் பிரான் காட்டிய வழியில் நாம் சென்று, திருவெண்காட்டு இறைவனை வணங்கி, நமது பழவினைகளை முற்றிலும் தீர்த்துக்கொண்டு, வாழ்வினில் உய்வினை அடைந்து, அதாவது பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, சிவபெருமானுடன் கலந்து என்றும் இன்பத்துடன் இருப்போமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com