50. தூண்டு சுடர்மேனி - பாடல் 2

இந்த பாடல் பெருமானின் திருவடிச்

பாதம் தரிப்பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழுருவப்
                        பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர் ஏழுலகுமாய் நின்ற ஏக
                    பாதர்
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டேறி ஒத்து உலகமெல்லாம்
                    ஒடுங்கிய பின்
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய
                விகிர்தனாரே



விளக்கம்

இந்த பாடல் பெருமானின் திருவடிச் சிறப்பினை எடுத்துரைக்கும் பாடலாகும். சிவபெருமானின் திருவருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், நாம் அவனது திருவடிகளை கெட்டியாக பற்றிக் கொள்ள வேண்டும். இதனை நமக்கு உணர்த்தும் விதமாக அப்பர் பிரான் அனைத்துப் பாடல்களிலும் திருவடி பற்றிய குறிப்பு வருமாறு நான்கு பதிகங்கள் அருளியுள்ளார். இந்த பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. அரவணையான் சிந்தித்து என்று தொடங்கும் திருத்தாண்டகம், அனைத்து வரிகளிலும் அடி என்று திருவடிகளை குறிப்பிட்டு, திருவடிச் சிறப்பினை உணர்த்துவதால் திருவடித் தாண்டகம் என்று அழைக்கப்படுகின்றது. திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தில் இரண்டு பாடல்களே நமக்கு கிடைத்துள்ளன. அந்த இரண்டு பாடல்களும் இறைவனின் திருவடி பற்றிய குறிப்பைக் கொண்டுள்ளன.

    பதிக     எண்    தலம்        தொடக்கச்சொற்கள்
    4.92         ஐயாறு             சிந்திப்ப அரியன சிந்திப்பவர்க்கு
    4,100        இன்னம்பர்            மன்னு மலைமகள் கையால்
    4.108        திருமாற்பேறு        மாணிக்கு உயிர் பெறக்
    6.06        திருவதிகை        அரவணையான் சிந்தித்து

இந்த பாடலில் ஏகபாதர் என்று இறைவனின் இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களில் ஒன்று குறிப்பிடப்படுகின்றது. இந்த மூர்த்தங்கள் இறைவனின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை என்று கூறுவார்கள். சோமாஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர். தத்புருட முகத்திலிருந்து தோன்றியவை, பிக்ஷாடனர், காமாரி (காமனை அழித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), ஜலந்தராரி (ஜலந்தரனை அழித்தவர்), திரிபுராரி (திருபுரங்களை அழித்தவர்) ஆகும். சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றியவை, இலிங்கோத்பவர், சுகாசனர், உமாமகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), மற்றும் அர்த்த நாரீஸ்வரர் ஆகும். அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (பாசுபத மூர்த்தி) மற்றும் நீலகண்டர். வாமதேவ முகத்திலிருந்து தோன்றியவை, கங்காளர், சக்ரதானர், கஜமுகானுக்ரகர் (ஐராவதத்திற்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் ஆகும்,

முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில், மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் பிரிவது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம். பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் உள்ளது. ஏகபாத திரிமூர்த்தியை பற்றிய குறிப்பு, அப்பர் பிரான் அருளிய திருவடித் திருத்தாண்டகத்து பாடல் ஒன்றில் (6.6.5) காணப்படுகின்றது.

ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி ஊழி தோறூழி உயர்ந்த அடி
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ்
                தகைய வல்ல அடி
இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ
                    ஏறும் அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம்
                    செல்வன் அடி

ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களும் பெருமானின் உடலில் ஒடுங்கிய பின்னர் இறைவன் மீண்டும் உலகத்தினை படைப்பதற்கு திருவுள்ளம் கொண்டு வீணை வாசிப்பதை தமது கடமையாக கருதுகின்றார் என்று அப்பர் பிரான் ஒரு பாடலில் கூறுகின்றார். அனைத்து உயிர்களும் தன்னுடன் இணைந்து பேரானந்தத்துடன் முக்தி உலகில் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே இறைவனின் ஆசை. உயிர்கள் தங்களைப் பற்றியுள்ள வினைத் தொகைகளை கழித்துக்கொண்டால்தான் அந்த நிலையினை அடையமுடியும். எனவே அதற்காக உயிர்களுக்கு மறுபடியும் தங்களது வினைத் தொகைகளை கழித்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிப்பதை தனது கடைமையாக இறைவன் கருதுகின்றார்.

பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
வரும் கடன் மீள நின்று எம்மிறை நல்வீணை வாசிக்குமே

கடல்கள் அனைத்தும் பொங்கி உலகங்களை மூடும் காலத்தில், பிரமன் வாழும் சத்திய லோகமும் கடலினால் முழுவதும் மூடப்பட பிரமனும் அப்போது அழிவான். அவ்வாறு இறந்த பிரமனது உடலினையும், அதே சமயத்தில் இறக்கும், கடல் வண்ணனாகிய திருமாலின் உடலையும், தான் சுமந்துகொண்டு கங்காள வேடத்தில் சிவபெருமான் காட்சி அளிப்பார். ஒடுங்கிய உலகத்தினை மறுபடியும் தோற்றுவித்து, உயிர்கள் தங்களது வினைத் தொகுதிகளைக் கழித்துக்கொள்வதற்கு ஏதுவாக, ஒடுங்கிய உலகினை மறுபடியும் தோற்றுவிக்கும் எண்ணத்துடன், சிவபெருமான் வீணை வாசித்தவாறு இருப்பார் என்பதே இந்த பாடலின் கருத்தாகும். வீணையிலிருந்து பிறக்கும் நாதம் தான் ஆகாயத்தின் பண்பாகும். ஆகாயத்திலிருந்து மற்ற பூதங்களும், பின்னர் ஐந்து பூதங்களின் கலவையாகிய உலகமும். உலகப் பொருட்களும். உயிர்கள் சென்றடையும் உடல்களும் உண்டாகின்றன.

தரித்தல் = மனதினில் நினைத்தல். ஏதம் = துன்பம். ஓதம் = கடலலைகள் எழுப்பும் ஒலி. ஊர் உண்டு = பல ஊர்கள் அடங்கிய உலகத்தினை விழுங்கி. உலகமும் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கிய பின்னரும் தான் ஒடுங்காது இருக்கும் இறைவனின் தன்மை, மற்றவரிடமிருந்து மாறுபட்டது என்பதால், மிகவும் பொருத்தமாக விகிர்தனார் என்று இறைவன் அழைக்கப்படுகின்றார்.

பொழிப்புரை

தனது திருவடிகளை மனதினில் நிலைநிறுத்தும் அடியார்களுக்கு, திருவடி தீட்சை தந்து உய்விக்கும் பாதங்கள் பெருமானின் பாதங்கள். இந்த பாதங்களின் அடியினை எவரும் அறிய முடியாதபடி ஏழு பாதாளங்களையும் கடந்து ஊடுருவிச் செல்லும் பாதங்கள்; யார்க்கும் தீங்கு ஏற்படாவண்ணம் உள்ள இந்த பாதங்கள், ஏழ் உலகங்களாகவும் இருக்கும் இந்த பாதங்கள், ஏகபாத திரிமூர்த்தியாக விளங்கும் பெருமானின் பாதங்களாகும். கடலிலிருந்து பொங்கி வரும் ஊழி வெள்ளத்தின் ஒலி அனைத்து உலகங்களையும் மூழ்குவித்த பின்னர் அடங்குகின்றது, அந்த சமயத்தில், வேதங்களில் உள்ள சொற்களை வீணையில் இசைத்து அந்த நாதத்தை கேட்டு மகிழ்பவர் பெருமானவார். இவ்வாறு இருக்கும் தன்மையால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு விகிர்தராய் காணப்படும் பெருமான் திருவெண்காடு தலத்தில் பொருந்தி விளங்குகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com