50. தூண்டு சுடர்மேனி - பாடல் 3

எனது அருகே வருவார்போல் தோன்றிய

நென்னலை ஓர் ஓடேந்திப் பிச்சைக்கு என்று வந்தார்க்கு
        வந்தேன் என்று இல்லே புக்கேன்    
அந்நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் அருகே வருவார்
                போல் நோக்குகின்றார்
நும் நிலைமை ஏதோ நும் ஊர் தான் ஏதோ என்றேனுக்கு
            ஒன்றாக சொல்லமாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய
                    விகிர்தனாரே
 

விளக்கம்

இந்த பாடல் அகத்துறை அமைப்பில் அமைந்த பாடல். சிவபிரானின் மீது தீராத காதல் கொண்டவளாகத் திகழ்ந்த அப்பர் நாயகி, பெருமான் தனது இல்லத்திற்கு பலி ஏற்க வந்ததாக கற்பனை செய்யும் பாடல். பெருமானுக்கு பலி எடுத்துவரும் பொருட்டு இல்லத்தின் உள்ளே சென்ற அப்பர் நாயகி, பெருமான் தன்னைப் பார்க்கின்றாரா அல்லையா என்பதை கவனித்தவாறே உள்ளே சென்றாள் போலும். அதனால் தான் பெருமான் தன்னை நோக்கியதை அவளால் உணரமுடிகின்றது. இந்த குறிப்பிலிருந்து தன்னால் காதலிக்கப்படும் பெருமானும் தன் மேல் விருப்பம் கொண்டவராக இருக்க வேண்டுமே என்ற அவளது ஏக்கம் இந்த பாடலில் வெளிப்படுவதை நாம் உணரலாம். எனவேதான் பெருமானும், தனது அருகில் வருவதற்கு முயற்சி செய்தததாக கற்பனை செய்து மகிழ்கின்றாள். நென்னல் = நேற்று. ஐயம் = பிச்சை. பெருமான் ஓடேந்தி பல இல்லங்கள் செல்வது, உயிர்களின் பால் அவர் கொண்டுள்ள கருணையால் நிகழும் நிகழ்ச்சி என்று சான்றோர்கள் விளக்கம் கூறுவார்கள். உயிர்கள் தங்களிடம் உள்ள ஆணவம், கன்மம் மாயை ஆகிய மலங்களை பெருமானின் ஓட்டில் இட்டு அவைகளை அறவே விடுத்து, பந்த பாசங்களிலிருந்து விடுபடவேண்டும் என்பதே இறைவன் ஆசை. அப்போதுதானே, தங்களது வினைத் தொகைகளைக் முற்றிலும் கழித்துக்கொண்டு, உயிர்கள் சிவபெருமானைச் சென்று சேர முடியும்.

பொழிப்புரை

நேற்று ஓர் ஓட்டினை ஏந்தியவாறு பிச்சை கேட்டு எனது இல்லத்திற்கு பெருமான் வந்தபோது, நான் உமக்கு பிச்சை கொண்டு வருகின்றேன் என்று சொல்லியவாறு எனது இல்லத்தின் உள்ளே புகுந்தேன். தான் கொண்டுவந்த பிச்சையினையும் ஏற்காமல், எனது அருகே வருவார்போல் தோன்றிய பெருமானிடம் நான், ஐயனே உமது ஊர்தான் யாது, உமது தன்மைதான் என்னே, என்று அவரிடம் வினவினேன். எனது வினாக்கள் எவற்றுக்கும் விடை கூறாது இருந்த பெருமான், எனது இல்லத்திலிருந்து வெளியேறி, மென்மையான மார்பகங்களை உடைய அழகிய பெண்மணிகள் ஒன்றாக கூடி விருப்பத்துடன் விளையாடும் வெண்காடு தலத்தில் பொருந்தி உறைகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com