68.மஞ்சனே மணியும் ஆனாய் - பாடல் 7

ஏற்படும் மெய்ஞானம்
68.மஞ்சனே மணியும் ஆனாய் - பாடல் 7

செறிவிலேன் சிந்தையுள்ளே சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணம் ஒன்றில்லேன் கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதி ஒன்றில்லேன் நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடுதுறை உளானே

விளக்கம்:
செறிவு = நிறைந்த அறிவினால் ஏற்படும் மெய்ஞானம். குறி = குறிக்கோள். அயர்த்துப் போதல் = வருத்தத்தால் இளைத்துப் போதல். உடல் இளைத்தலை அன்றி மனது இளைத்து வருந்துவது இங்கே குறிப்பிடப்படுகின்றது. 

தனக்கு நிறைந்த அறிவு இல்லாததால் சிவபிரானை நினைக்காது இருந்தேன் என்று அப்பர் பிரான் கூறுவது, நமக்கு மணிவாசகரின் ஆனந்த மாலை பதிகத்தின் ஒரு பாடலை நினைவூட்டும். தோலின் பாவைக் கூத்தாட்டம் = பொம்மலாட்டம். பொம்மலாட்டக்காரன் கைவிட்டால், திரைக்கு முன்னே ஆடிக்கொண்டிருந்த பொம்மைகள், செயலற்று கீழே விழுந்து கிடப்பதைப் போன்று, இறைவன் தன்னை கைவிட்டமையால், இறைபணி ஒழுக்கம், இறைவனைக் குறித்து தவம், இறைவனைப் பற்றிய அறிவு, அத்தகைய அறிவால் விளையும் மெய்ஞானம் ஏதும் இன்றித் தான் உலக மாயையில் விழுந்து கிடந்ததாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். அவ்வாறு இழிந்த நிலையில் கிடந்த தன்னை, நல்வழிப்படுத்தியது பெருந்துறை இறைவன் என்று கூறும் மணிவாசகர் தான் அவனைச் சென்று அடையும் நாள் எதுவோ என்று ஏங்குவதை இந்த பாடலில் நாம் உணரலாம். 
    
சீலமின்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றி
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்
கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே

பொன்னும் மெய்ப்பொருளும் என்று தொடங்கும் திருவாரூர்ப் பதிகத்தின் (7.59) ஐந்தாவது பாடலில் சுந்தரர், நிறைந்த கல்வியால் உண்டாகும் மெய்ஞ்ஞானமும் அதனால் ஏற்படும் தெளிவான அறிவும் இறையுணர்வும் இருந்தால், நாம் திருவாரூர் இறைவனை மறக்காமல் இருப்போம் என்றும், இறைவனின் கருணையால் இறப்பு, மறுபிறப்பு, வாழ்நாளில் ஏற்படும் தீங்குகள் இவற்றையெல்லாம் வெல்லலாம் என்று இந்த பாடலில் கூறுகின்றார், சிக்கன = கெட்டியாக பற்றும் பற்று. மறிவு = இறப்பு. 

பொழிப்புரை:
ஆவடுதுறைப் பெருமானே, நிறைந்த அறிவால் ஏற்படும் மெய்ஞ்ஞானம் இல்லாததால் சிவபெருமானின் திருவடிகளை நான் நினைக்காமல் இருக்கின்றேன். மெய்ப்பொருளாகிய சிவபெருமானை உணர்ந்து வாழ்க்கையில் உய்ய வேண்டும் என்ற குறிக்கோள் ஏதும் இல்லாமல் இருக்கும் நான், ஆன்றோர்கள் சொல்லும் நல்ல வழியினைப் பின்பற்றி இறைவனின் புகழினைப் பாடாது இருக்கின்றேன். நல்ல வழியில் செல்லும் அறிவு இல்லாததால், உன்னை எவ்வாறு நினைக்க வேண்டுமோ அவ்வாறு நினையாமல் இருக்கும் நான், புல்லறிவினால் மயங்கி, மிகவும் மனம் வருந்தி உள்ளேன். ஆவடுதுறையானே, நீ தான் எனது நிலையை நல்ல வழியில் செல்லுமாறு மாற்றி, எனது வருத்தத்தை நீக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com