68.மஞ்சனே மணியும் ஆனாய் - பாடல் 8

என்ன தவம் செய்தாய்
68.மஞ்சனே மணியும் ஆனாய் - பாடல் 8

    கோலமா மங்கை தன்னைக் கொண்டு ஒரு கோலமாய
    சீலமே அறிய மாட்டேன் செய்வினை மூடி நின்று
    ஞாலமாம் இதளுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
    ஆலமா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே

விளக்கம்:
கோலமா மங்கை = அழகுடைய பார்வதி தேவி. சீலம் = தன்மை. நைவித்தல் = வருத்துதல். செய்வினை = முன் பிறவிகளில் செய்த செயல்களால் விளைந்த வினைகள். முந்தைய பிறவியில் செய்த புண்ணியங்களின் பயன்கள் தான் இந்த பிறவியில் இறைவனை நாம் அன்புடன் வழிபட முடிகின்றது என்ற கருத்தினை அடக்கிய பாடல் ஒன்றினை சம்பந்தரின் தேவாரப் பதிகத்தில் காணலாம். வலஞ்சுழி தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்தின் (2.106) முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 
    
    என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
    முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
    மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்
    பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே


சிவபெருமான் எளிதில் திருப்தி அடைபவனாக உள்ளான். பூவையும் நீரையும் இட்டு எளிமையான முறையில் வழிபடும் அன்பர்களுக்கு சிவபெருமான், அவர்கள் செய்யும் வழிபாட்டால் மகிழ்ந்து அருள்புரிகின்றான். ஆனால் நல்வினை இல்லாத காரணத்தால், இத்தைகைய எளிமையான பூஜையையும் இறைவனுக்கு செய்யமுடியாமல், பலர் தங்கள் காலத்தை வீணே கழிக்கின்றார்கள் என்று கூறும் திருமந்திரப் பாடல் இங்கே ஒப்புநோக்கத்தக்கது.
    
    புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
    அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்
    எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
    நண்ணறியாமல் நழுவுகின்றார்களே


அப்பர் பெருமானும் மயிலாடுதுறைப் பதிகத்தின் ஒரு பாடலில் தனது நெஞ்சத்தை நோக்கி, நெஞ்சமே நீ என்ன தவம் செய்தாய், சிவபிரான் எனது தலையிலும் நெஞ்சினுள்ளும் தங்குவதற்கு என்று கூறுவதும் இந்த கருத்தினை பிரதிபலிக்கின்றது,
    
    நிலையை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்
    கலைகள் ஆய வல்லான் கயிலாய நன்
    மலையன் மா மயிலாடுதுறையன் நம்
    தலையின் மேலும் மனத்துளும் தங்கவே 

பொழிப்புரை:
ஆலகால நஞ்சினை உண்ட ஆவடுதுறைப் பெருமானே, அழகிய பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டுள்ள அழகிய பெருமானே, உனது தன்மையை நான் உணராத வண்ணம் எனது வினைகள், என்னை இந்த உலகத்துப் பொருட்களின் மீது பாசம் கொள்ளவைத்து என்னை வருத்துகின்றன. இந்த நிலையிலிருந்து என்னை விடுவித்து நீதான் என்னைக் காக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com