63. மூவிலை நற்சூலம் வலன் - பாடல் 5

பஞ்சவடி மார்பினன் என்று அப்பர் பிரான்

உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை
        நித்திலத்தை ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பினானைப் பகலிரவாய் நீர்
            வெளியாய் பரந்து நின்ற
நெருப்பதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு
    அணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்
        கண்ணாரக் கண்டு உய்ந்தேனே
 

விளக்கம்

உருத்திரன் என்ற சொல்லுக்கு துன்பத்தை ஓட்டுபவன் என்று பொருள். நமது உடலால் உயிர் பலவகையான துன்பங்களை அடைகின்றது. உயிர் உடலினை விட்டு பிரியும்போது அந்நாள் வரை, ஐம்பொறிகளின் ஆதிக்கத்தால் அடைந்த துன்பங்களிலிருந்து உயிர் விடுதலை அடைவதால், உயிர்களின் துன்பத்தை ஓட்டுபவனாக உருத்திரன் கருதப்படுகின்றான். ஆனால் இந்த விடுதலை மிகவும் தற்காலிகமானதுதான். தங்களது வினைகளின் ஒரு பகுதியை, உயிர் தனது சூஷ்ம உடலுடன் அனுபவித்துக் கழித்த பின்னர், எஞ்சிய வினைகளைக் கழிப்பதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு, வினைகளுக்கு ஏற்ப தகுந்த உடலுடன் பொருத்தப் படுகின்றது. 

இந்த பாடலில் பஞ்சவடி மார்பினன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பஞ்சவடி என்பது மயிர்கற்றைகளால் திரிக்கப்பட்ட பூணூல். இதனை மாவிரத சமயத்தினர் அணிவார்கள். பெருமானையும் பஞ்சவடி மார்பினன் என்று தேவாரப் பதிகங்கள் குறிப்பிடுகின்றன. மறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.71.4) சுந்தரர் இறைவனை பஞ்சவடி மார்பன் என்று அழைக்கின்றார்.

நரை விரவிய மயிர் தன்னோடு பஞ்சவ்வடி மார்பன்
உரை விரவிய உத்தமன் இடம் உணரல் உறு மனமே
குரை விரவிய குலசேகரக் கொண்டல் தலை விண்ட
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே

கடவூர் மயானத்தின் மீது அருளிய பதிகத்திலும் ஒரு பாடலில் சுந்தரர் (7.53.6) இறைவனை பஞ்சவடி அணிந்த மார்பினனாக காண்கின்றார். கடவூர் மயானம் சென்ற சுந்தரருக்கு முற்றூழி காலத்தில் இறைவன் இருக்கும் வேடம் நினைவுக்கு வந்தது போலும். பணி = பாம்பு. திணிவார் குழை = திண்ணென அமைந்த நீண்ட குழை ஆபரணம். பிணிவார் சடை = சேர்த்து கட்டப்பட்ட நீண்ட சடை.

துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலைப் பொடி
                அணிந்து 
பணி மேலிட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர்த்
திணி வார் குழையார் புரம் மூன்றும் தீ வாய்ப்படுத்த
                சேவகனார்
பிணி வார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே

முற்றூழிக் காலத்தில் இறைவன் இருக்கும் கோலத்தை விளக்கும் திருவீழிமிழலை பதிகத்தின் ஒரு பாடலில் (6.50.2) அப்பர் பிரான் தனது தோள்களில் உயிரற்ற உடல்களைத் தாங்கி நிற்கும் பெருமான், சாம்பல், இறந்தவர்களின் தலைகளைக் கோத்த மாலை, மயிர்க்கயிறு ஆகியவற்றை தரித்த கோலத்துடன் இருப்பதாக கூறுகின்றார். பஞ்சவடி என்ற வடமொழிச் சொல்லினை மயிர்க்கயிறு என்று மிகவும் அழகாக தமிழ்ப்படுத்திய அப்பர் பிரானின் புலமை ரசிக்கத்தக்கது. பவம் = பிறவி. இவ்வாறு இறந்தவர்களின் உடலத் தாங்கியும், அவர்களது எலும்பு தலை ஆகியவற்றை மாலைகளாக அணிந்தும், உடல் எரிந்த சாம்பலைப் பூசிக் கொண்டும், தலைமயிர்க் கற்றையினை பூணூலாக அணிந்தும், இறைவன், தான் ஒருவனே என்றும் நிலையானவன் என்றும் தன்னைத் தவிர அனைத்து உயிர்களும் ஒரு நாள் அழியக்கூடியவை என்றும் உலகுக்கும் உணர்த்துகின்றார். சைவத்தின் ஒரு பிரிவான பாசுபத சமயத்தைச் சார்ந்தவர்கள், மேற்கண்ட கோலம் தாங்கி இறைவனை வழிபடுவார்கள். அவ்வாறு இருத்தல், தங்களைப் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. 

சவம் தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு தலையோடு
        மயிர்க்கயிறு தரித்தான் தன்னை 
பவம் தாங்கு பாசுபத வேடத்தானைப் பண்டு அமரர் 
        கொண்டுகந்த வேள்வி எல்லாம்
கவர்ந்தானைக் கச்சி ஏகம்பன் தன்னைக் கழல் அடைந்தான்
            மேல் கறுத்த காலன் வீழச்
சிவந்தானைத் திருவீழி மிழலையானைச் சேராதார் தீநெறிக்கே
                செர்கின்றாரே

மானகஞ்சாற நாயனாரின் மகளின் திருமணத்திற்கு மாவிரத கோலம் தாங்கி சென்ற சிவபெருமானைக் கண்ட மணமகளின் பெற்றோர்கள் மாவிரதியரை வணங்கினார்கள். பெற்றோர்கள் வணங்கி முடிந்த பின்னர், மணமகளும் மாவிரிதியரை வணங்கினாள். தன்னை வணங்கி எழுந்த மணமகளின் நீண்ட கூந்தலைக் கண்ட மாவிரதியார், அணங்கின் தலைமுடி தனக்கு பஞ்சவடியாக பயன்படும் என்று கூறியதை உணர்த்தும் பெரிய புராணப் பாடல் இன்கே கொடுக்கப்பட்டுள்ளது. மேகம் தழைத்து வளர்ந்தது போன்று அடர்ந்த கூந்தல் என்று சேக்கிழார் கூறுகின்றார். 

தம் சரணத்து இடைப் பணிந்து தாழ்ந்து எழுந்த மடக்கொடி
                    தன்
மஞ்சு தழைத்தது என வளர்ந்த மலர்க் கூந்தல் புறம் நோக்கி
அஞ்சலி மெய்த்தொண்டரைப் பார்த்து அணங்கு இவள் தன்
                மயிர் நமக்குப் 
பஞ்சவடிக்கு ஆம் என்றார் பரவ அடித்தலம் கொடுப்பார்

பெண்ணின் திருமணம் நடக்கவிருந்த சமயத்தில், அவளது கூந்தல் தனக்கு பஞ்சவடியாக பயன்படும் என்று சொல்லி கேட்பது எத்தகைய பெரிய சோதனை.. ஆனால் செயற்கரிய செயல்களைப் புரிந்தவர்கள் தானே நமது நாயன்மார்கள். திருமணத்திற்கு வந்திருந்த மாவிரதியார் இவ்வாறு சொன்ன அளவில், மணமகளின் தந்தையாகிய மானக் கஞ்சாறர் தனது உடைவாளை உருவி, நான் இன்று கிடைத்தற்கு அரிய பேற்றினைப் பெற்றேன் என்ற எண்ணத்துடன், மகளின் கருங்கூந்தலை, அதன் அடிபாகத்திலிருந்து அரிந்து, மாவிரதியாரின் கைகளில் வைத்தார். அடற்சுரிகை = வலிமை மிகுந்த நீண்ட வாள். இரும் செய்த = இருளினைப் போன்று கரிய நிறமுடைய. பிறப்புச் சுழற்சியினை அறுக்கும் வல்லமை வாய்ந்த சிவபெருமானின் மலர்க் கைகளில், தான் அரிந்த கூந்தலை நாயனார் சமர்ப்பித்தார் என்று மிகவும் நயமாக சேக்கிழார் கூறுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். 

அருள் செய்த மொழி கேளா அடற்சுரிகை தனை உருவிப்
பொருள் செய்தாம் எனப் பெற்றேன் எனக்கொண்டு 
                                பூங்கொடி தன்
இரும் செய்த கருங்கூந்தல் அடியில் அரித்து எதிர் நின்ற
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர்க் கரத்தினிடை நீட்ட 

நாயனாரின் பக்தியை உலகுக்கு எடுத்துக்காட்டியதுடன் தனது பணி முடிந்துவிட்டது என்று கருதிய மாவிரத வேடத்தில் வந்த சிவபெருமான் மறைந்து, வானில் இடப வாகனராக உமை அம்மையுடன் எழுந்தருளி அனைவருக்கு காட்சி தர, வந்த மாவிரதியார் இறைவனார் என்று அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர், மணமகளின் கூந்தல் முன் போன்று தழைத்து நின்றது இந்த நிகழ்சிகள் நடந்து முடிந்த பின்னர், திருமணம் நடைபெறவிருந்த இடத்திற்கு வந்த, மணமகனாகிய ஏயர்கோன் கலிக்காம நாயனார், தனது மனைவியின் கூந்தலை அரிந்து, மாவிரதியரிடம் ஒப்படைக்கும் பேறு தனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்று மனம் வருந்தியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். 

நித்திலம் = முத்து. நித்திலத் தொத்து = முத்துக்களின் குவியல். பகலாகவும் இரவாகவும் என்று சூரியன் மற்றும் சந்திரனாக விளங்கும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. இரவு பகல் எனப்படும் காலங்களாக விளங்குபவன் என்று விளக்கம் கூறுவதும் பொருத்தமே.

பொழிப்புரை

உருத்திரனாக, உயிர்களுக்கு நன்மை செய்யும் வண்ணம், உயிருக்கு இடர்கள் விளைவித்த ஐம்பொறிகள் அடங்கிய உடலினை உயிரிலிருந்து பிரிப்பவனும், உமையம்மைக்குத் தலைவனாக இருப்பவனும், உலகத்தை ஆள்பவனும், அனைவர்க்கும் மேலானவனும், முத்து போன்று அரியவனாக இருப்பவனும், ஒப்பற்ற ஒருவனாகத் திகழ்பவனும், பருப்பத மலையாக விளங்குபவனும், பஞ்சவடி அணிந்த மார்பினனும், சூரியன் சந்திரன் நீர் ஆகாயம் தீ ஆகிய எட்டு மூர்த்தங்களாக பரந்து எங்கும் இருப்பவனும், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு மற்றும் முத்துக் குவியல்களின் நிறத்தை ஒத்தவனும், திருநீற்றினை உடலெங்கும் பூசியவனும், எப்போதும் தன்னை நினைக்கும் அடியார்களின் சிந்தையின் கருத்தாகத் திகழ்பவனும், கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன்., 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com