64. நெற்றி மேல் கண்ணினானே - பாடல் 9

கங்கை நதியினை நிலவுலகுக்கு

ஏற்ற நீர் கங்கையானே இருநிலம் தாவினானும்
நாற்றம் மலர் மேல் ஏறு நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கல் உற்றார்க்கு அழலுரு ஆயினானே 
கூற்றுக்கும் கூற்றது ஆனாய் கோடிகா உடைய கோவே

விளக்கம்

ஏற்ற நீர் கங்கை என்று கங்கை நதி, அதனில் குளிப்போரின் பாவங்களைத் தீர்த்து அவர்களை உயர்ந்தோர்களாக மாற்றும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. பிரமனிடம் தான் பெற்ற வரத்தினால், தேவருலகில் இருந்த கங்கை நதியினை நிலவுலகுக்குக் கொண்டுவர பகீரதன் முயற்சி செய்த போதிலும், நிலவுலகம் வருவதற்கு விருப்பம் இல்லாத கங்கை நதி, உலகத்தையே தனது வேகத்தினால் புரட்டிக்கொண்டு பாதாளம் இழுத்துக்கொண்டு செல்லும் நோக்கத்துடன் மிகவும் வேகமாக கீழே இறங்கினாள். அதன் வேகத்தை இறைவன் தடுத்துத் தனது சடையில் அடக்கிக்கொண்டு சிறிய நீரோடையாக வெளியிட்டதன் பயனாக இன்றும் கங்கை நதி ஓடிக்கொண்டு இருக்கின்றது, அந்த நதியில் குளிப்பவர்களும் இதனால் பயனடைவதாக நம்பப் படுகின்றது. இவ்வாறு கங்கை நீர் ஏற்றம் பெறுவதற்கு காரணமாக இறைவன் இருந்த நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு அவரது சோற்றுத்துறை பதிகத்தின் ஒரு பாடலை (4.41.6) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், மிகவும் ஆரவாரத்துடன் வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் ஏற்று பின்னர் அதனை விடுவித்த தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கங்கை நதி அவ்வாறு விடுபட்டதால்தானே, புண்ணிய தீர்த்தமாக உலகோர் கருதப்படும் நிலைக்கு உயர்ந்தது. கங்கையில் நீராடுவோர் தங்களது பாவங்கள் தீர்க்கப்பெற்றாலும், அவர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு கங்கை நதி எவ்வகையிலும் உதவிசெய்ய முடியாது. பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து எவரேனும் விடுதலை பெற வேண்டும் என்றால், பெருமானின் திருநாமங்களை பிதற்ற வேண்டும் என்ற செய்தியையும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். 

பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் தன் திறமே
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறையனாரே 

பொருள் இல்லாதவர்களுக்கு பொருள் உள்ளவர்கள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு ஈந்து உதவுவார்களை உலகம் புகழ்கின்றது. அவர்களின் மனதினில், அடுத்தவர்க்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை உருவாக்குபவர் இறைவன் என்று அப்பர் பிரான் ஐயாற்றின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (4.38.10) குறிப்பிடுகின்றார். தங்களிடம் பொருள் இருந்தும், இரப்பவர்களுக்கு உதவாதவர்களை உலகம் உலோபி என்று இகழ்கின்றது. அவ்வாறு இருத்தல் கொடிய செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், காமம் முதலான ஆறு குற்றங்களில் ஒன்றாக உலோபம் கருதப்படுகின்றது. இந்த குற்றத்தை இறைவன் பொறுக்கமாட்டார் என்றும் அதற்கு உரிய தண்டனை அளிப்பார் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அடுத்தவர்க்கு கொடுத்து உதவுவோர்க்கு இறைவனின் அருள் உண்டு என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இறைவன், கரப்பவர்க்கு தண்டனை அளிப்பார் என்பதை உணர்த்தும் விதமாக கங்கையைத் தனது சடையில் மறைத்த நிகழ்ச்சி இங்கே நயமாக குறிப்பிடப் படுகின்றது. 

கபில முனிவரை, தங்களது தந்தை சகரன் செய்யவிருந்த அசுவமேத யாகத்து குதிரையைத் திருடியவன் என்று தவறாக கருதி, அவர் மீது பாய்ந்த சகரனின் புத்திரர்கள் அனைவரும் தியானத்திலிருந்து விழித்த கபிலரின் கண் பார்வையால் சாம்பலாக எரிந்தனர். தனது நீரினில் அந்த சாம்பலைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதி வழங்கும் தன்மை கங்கை நதிக்கு இருந்ததால் தான், பகீரதன் கங்கை நதியை பூவுலகத்திற்கு, தவம் செய்து வரவழைக்க முயற்சி செய்தான். ஆனால் அவ்வாறு உதவ மறுத்த கங்கை நதிக்கு பாடம் கற்பிக்கும் வகையில், வேகமாக இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் இறைவன் சிறை வைத்த நிகழ்ச்சி இங்கே நயமாக உணர்த்தப்படுகின்றது. 

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் 
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்த
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே 

பொழிப்புரை

ஏற்றம் உடைய கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றவனே, மூன்று உலகங்களையும் தாவி அளந்த திருமாலும், நறுமணம் மிகுந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் ஒன்று கூடி, நீண்ட அழலாக அவர்களின் முன்னே தோன்றிய உனது அடியையும் முடியையும் கண்டு விடுவோம் என்று தங்களது ஆற்றல் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உனது அடிமுடியினைத் தேட முயற்சி செய்தனர். தங்கள் ஆற்றல் மீதுள்ள செருக்கினால் உன்னைக் கண்டுவிடுவோம் என்ற அவர்கள் காணாத வண்ணம் நீண்ட பெருமான் நீயே. சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த இயமனை உதைத்து, கூற்றுவனுக்கும் கூற்றுவனாக விளங்கிய நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com