64. நெற்றி மேல் கண்ணினானே - பாடல் 10

பெருமானின் சிறப்பான குணங்களை

பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா
மழகளி யானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த 
அழகனே அரக்கன் திண் தோள் அருவரை நெரிய ஊன்றும்
குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே

விளக்கம்

குழகன் = அழகன், இளைஞன். பசுபதி = ஆன்மாக்களின் தலைவன். உதிரம் சொட்டும் நிலையில் உள்ள யானையின் ஈரத் தோல், அதனை உடலில் போர்த்துக்கொள்வோரின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது சீவக சிந்தாமணியில் கூறப்படும் செய்தி. எனவே தான், உமை அம்மை யானையின் தோலை உரித்த இறைவன் அந்த தோலினைத் தனது உடல் மீது போர்த்ததைக் கண்டு அச்சம் அடைகின்றாள். இந்த தகவல் பல தேவாரப் பாடல்களில் கூறப்படுகின்றது. 

பொழிப்புரை

ஆன்மாக்களின் தலைவனாக விளங்கும் இறைவனே, பாவங்களைப் போக்குபவனே, உனக்கு அடிமைத் தொண்டு புரிவதற்கு நான் என்னை பழக்கப்படுத்திக்கொண்டு தொடர்ந்து உனக்கு பலவிதமான பணிவிடைகள் செய்தவாறு இருப்பேன். இறைவனே நீ என்னை உனது அடிமையாக ஏற்றுக்கொள்வாயாக. இளமையானதும் மதமயக்கம் உடையதும் ஆகிய யானையினை அதன் தோலை உரித்துக் கொன்ற பின்னர், அந்த ஈரப்பசை உடைய தோல் உனது உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும் பொருட்படுத்தாமல், யானையின் தோலினைப் போர்த்தவனே, கரிய நிறத்தை உடைய தோலினைப் போர்த்த பின்னரும் அழகான தோற்றத்துடன் என்றும் இளமையுடன் காட்சி அளிப்பவனே, அரக்கன் இராவணனின் வலிமையான தோள்கள் நொறுங்குமாறு, உனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றி, அரக்கனை மலையின் கீழ அடர்த்த குழகனே, பன்றிக் கொம்பு பூண்டு அழகுடன் விளங்கும் மார்பினை உடையவனே நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய்.

முடிவுரை

பெருமானின் சிறப்பான குணங்களை ஒவ்வொரு பாடலிலும் பட்டியல் இட்டு, பெருமானை நாம் எவ்வாறு அழைத்து, அவனை புகழ்ந்து பாட வேண்டும் என்று நமக்கு அப்பர் பிரான் கற்றுக் கொடுக்கும் பாடல்கள் நிறைந்த பதிகம். குற்றமில் குணத்தவனாக உள்ள பெருமான் என்று முதல் பாடலில் கூறும் அப்பர் பிரான், அந்த பெருமான் நமக்கு அருள் புரியும் வகைகளையும் அடுத்து வரும் பாடல்களில் எடுத்துக் கூறுகின்றார். தனது திருவடிகளைப் நாளும் பணியும் அடியார்களுக்கு அருள் புரியும் இறைவன் என்று பதிகத்தின் இரண்டாவது பாடலிலும், நால் வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவன் என்று மூன்றாவது பாடலிலும், தனது அடியார்க்காக, தனது கடமையைப் புரியும் காலனையும் கோபித்துக் கொண்டு அவனை வெற்றி கொள்ளும் கருணை உள்ளம் படைத்தவன் என்று நான்காவது மற்றும் ஒன்பதாவது பாடல்களிலும், நமது மலங்களை அவனது பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்று நோக்கத்துடன் ஊர் ஊராக திரிந்து பிச்சை ஏற்கும் பெருமான் என்று ஐந்தாவது மற்றும் ஏழாவது பாடல்களிலும், இல்வாழ்க்கையின் மூலமாக நிலையிலாத சிற்றின்பத்தில் ஆழ்ந்து இறைவனை மறக்கும் மாந்தர்களுக்கு, இறையுணர்வினை ஊட்டி அருள்புரியும் பெருமான் என்று ஆறாவது பாடலிலும், நாம் செய்யும் பெரிய குற்றங்களையும் பொறுத்துக் கொண்டு அருள் செய்யும் கருணையாளன் என்று எட்டாவது பாடலிலும், அடிமைத் தொண்டு செய்ய நினைக்கும் அடியார்களைத் தனது அடிமையாக ஏற்றுக் கொள்பவன் என்று பதிகத்தின் பத்தாவது பாடலிலும், நமக்கு உணர்த்தும் அப்பர் பிரான், நாம் அனைவரும் இறைவனைத் தொழுது உய்வினை அடைய வேண்டும் என்பதில் எத்துணை ஆர்வமாக உள்ளார் என்பதை இந்த பதிகம் வெளிப்படுத்துகின்றது. நாம் அனைவரும் அப்பர் பிரான் காட்டிய வழியில் சென்று அவரது விருப்பத்தை நிறைவேற்றுவோமாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com