65. சங்குலா முன்கைத் தையல் - பாடல் 1

கோடிகா தலத்து இறைவனை

(கோடிகா    - குறுந்தொகை)
முன்னுரை

கோடிகா தலத்து இறைவனைத் தொழுதால் நாம் அடையும் பயன்களை, நெற்றி மேல் கண்ணினானே என்ற நேரிசைப் பதிகத்தில் கூறிய அப்பர் பிரான், இந்த குறுந்தொகைப் பதிகத்தில் அவனைத் தொழுவதால் நாம் அடையும் பயன்களையும் அவனைத் தொழாமல் இருந்தால் என்ன நடக்கும் என்றும் கூறுகின்றார். கும்பகோணம் கதிராமங்கலம் பாதையில் உள்ள இந்த தலம், தற்போது கோடிக்காவல் என்று அழைக்கப்படுகின்றது.

இந்த பதிகம் சங்குலா முன்கைத் தையல் என்று உமை அம்மையைப் பற்றிய குறிப்புடன் தொடங்குகின்றது. இவ்வாறு அம்பிகையைக் குறிப்பிட்டுத் தொடங்கும் அப்பர் பிரானின் தேவாரப் பதிகங்கள் மிகவும் அபூர்வமானவை. அத்தகைய பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. ஞான சம்பந்தர் சுமார் நாற்பது பதிகங்களில், அம்பிகைப் பற்றிய குறிப்புகளுடன் பதிகத்தின் முதல் பாடலினைத் தொடங்குகின்றார். சுந்தரர் நான்கு பதிகங்களை அம்பிகை பற்றிய குறிப்புடன் தொடங்குகின்றார். 

எண்     தலம்            தொடக்கச் சொற்கள்
4.30    கழிப்பாலை         நங்கையை பாகம்
4.63    ஆரூர்            குழல்வலம் கொண்ட சொல்லாள்
4.73    திருச்சேறை        பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி
4.100    இன்னம்பர்            மன்னு மலைமகள் கையால்
4.103    நாகைக் காரோணம்    வடிவுடை மாமலை மங்கை
5.10    மறைக்காடு        பண்ணின் நேர் மொழியாள்
5.56    கோளிலி            மைக்கொள் கண் உமை
5.78    கோடிகா            சங்குலா முன்கைத் தையல்
5.85    சிராப்பள்ளி            மட்டுவார் குழலாள்
6.26    ஆரூர்            பாதித் தன் திருவுருவில் பெண்
6.61    கன்றாப்பூர்            மாதினை ஓர் கூறுகந்தாய்
6.93     பொதுப்பதிகம்        நேர்ந்து ஒருத்தி ஒரு பாகம்

பாடல் 1

சங்குலா முன்கைத் தையலோர் பாகத்தன்
வெங்குலா மத வேழம் வெகுண்டவன்
கொங்குலாம் பொழில் கோடிகாவா என
எங்கு இலாததோர் இன்பம் வந்து எய்துமே

விளக்கம்

சங்கு = சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள். உலாம் = இங்கும் அங்கும் உலாவுகின்ற, அசைகின்ற. வெங்குலாம் = கோபத்துடன் எதிர்த்து ஓடி வந்த. வெம்மை = சினம். இறைவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தது பெருமானின் கருணைச் செயல். கருணையின் வடிவமாக இருப்பதை அனைவர்க்கும் உணர்த்தும் முகமாக, மாதொரு பாகனாக காட்சி தரும் பெருமான், கோபம் கொண்டால் என்ன ஏற்படும் என்பதையும் இங்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். தன்னை எதிர்த்து வந்த மதயானையைக் கொன்றதுடன், அதன் தோலினைத் தனது உடலின் மீது போர்த்தி, தான் கோபம் கொள்ளாதவாறு அனைவரும் நடக்க வேண்டும் என்ற எச்சரிக்கை விடுத்த வண்ணம் காட்சி அளிக்கின்றார் என்பதை உணர்த்தும் பாடல். நாம் பெருமான் விரும்பும் வண்ணம் செயல்களைச் செய்து வந்தால் பெருமானுக்கு ஏன் கோபம் வரப் போகின்றது. 
எங்கும் இலாத இன்பம் வந்து எய்தும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுவது நமக்கு, திருவெம்பாவை பதிகத்தின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. கொங்குண் கருங்குழலி என்று தனது தோழியை விளித்துப் பாடும் பாடல் என்பதால், கொங்குண் கருங்குழலி என்ற தொடரை முதலில் வைத்து பொருள் கொள்ளவேண்டும். போகத்தை அனுபவிப்பதற்காக தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கும், நம் போன்ற மனிதர்களுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசம் உள்ளது. தங்களுக்கு துன்பம் வரும் நேரத்தில் மட்டும்தான் தேவர்களுக்கு இறைவனைப் பற்றிய சிந்தனை தோன்றும். அவ்வாறு இல்லாமல் தங்களுக்குத் துன்பம் வந்த நேரத்திலும், மற்ற நேரங்களிலும் இறைவனை நினைக்கும் மண்ணுலக மாந்தர்கள் பால் இறைவனுக்கு சற்று அதிகமான விருப்பம் ஏற்படுவது இயற்கைதானே. அதைத்தான், இங்கே மணிவாசகர் கூறுகின்றார் தேவர்கள் பால் இல்லாத கருணையினை மண்ணுலக மாந்தர்கள் பால் காட்டும் இறைவன், நமது குற்றங்களை நீக்கி (கோதாட்டி) நமது இல்லங்கள் எழுந்தருளும் பெருமான், தனது சேவடிகளை, நாம் பற்றிக்கொள்ளும் வண்ணம் நமக்குக் காட்டுகின்றான் என்றும் கூறுகின்றார், தேவர்களுக்கும், பிரமன் நான்முகனுக்கும் கிடைக்காத இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்தால், நாம் பெறுகின்ற இன்பம் வேறு எங்கும் இல்லாத இன்பம் தானே. எனவே நாம் எல்லோரும் இறைவனின் புகழினைப் பாடுவோம் என்று நீராடச் செல்லும் தோழிகள் ஒருவருக்கு ஒருவர் பாடி உணர்த்தியது போன்று நாமும் இறைவனின் புகழினை பாடி அடுத்தவருக்கு உணர்த்தவேண்டும் என்பதே பாட்டின் கருத்து. கொங்கு = தேன், இங்கே தேனை சேகரிப்பதற்காக புதிய மலர்களை நாடிச் செல்லும் வண்டுகளை குறிக்கும். தேனினை சேகரிக்க புதிய மலர்களை நாடிச் செல்லும் வண்டுகளை ஈர்க்கும் நறுமணம் மிகுந்த மலர்கள் பொருந்திய கருங்கூந்தலை உடைய பெண் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். 

செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நம் தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

பொழிப்புரை

இங்கும் அங்கும் அசைகின்ற சங்கு வளையல்களைத் தனது முன்கையினில் கொண்ட உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்த சிவபெருமான், மிகுந்த கோபத்துடன் தன்னை எதிர் நோக்கி வந்த மத யானையை கோபித்து, அதனின் உடலை உரித்து அதன் தோலினைத் தனது உடல் மீது போர்த்தவன் ஆவான். தனது மணத்தினால் வண்டுகளை ஈர்க்கும் நறுமணம் உடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிகா நகரத்தில் உறையும் இறைவனை, கோடிகாவா என்று வாய் விட்டு அழைத்தால், வேறு எங்கும் கிடைக்காத இன்பம் நமக்கு கிடைக்கும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com