65. சங்குலா முன்கைத் தையல் - பாடல் 2

இல்லறத்தில் இருந்தவாறே

வாடி வாழ்வது என்னாவது மாதர் பால்
ஓடி வாழ்வினை உள்கி நீர் நாடொறும்
கோடிகாவனைக் கூறீரேல் கூறினேன்
பாடி காவலிற் பட்டுக் கழிதிரே    

விளக்கம்

பாடி காவல் = நீதியிலிருந்து வழுவியோரை அரசன் முன்னர் விசாரணைக்கு நிறுத்துதல். இறைவனின் திருநாமத்தைச் சொல்லாது நமது வாழ்நாள் கழியுமாயின், நாம் இறந்த பின்னர், நரகத்தின் அரசனான இயமனின் முன்னர் நிறுத்தப்பட்டு, இறைவனின் திருநாமத்தை சொல்லாத குற்றத்திற்காக விசாரணைக்கு நிறுத்தப்படுவோம் என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது. இல்வாழ்க்கையில் ஈடுபட்டு, அந்த வாழ்க்கை தரும் சிற்றின்பத்தில் மயங்கி, இறைவனை நாம் மறந்து விடுவதையும், இல்வாழ்க்கையில் ஈடுபடுவதால் பல வகையிலும் வருந்துவதையும் இங்கே உணர்த்தும் அப்பர் பிரான், இல்லறத்தில் இருந்தவாறே நாம் இறைவனையும் நினைக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பாடல். வாழ்வில் அடையும் துன்பம் என்று பிறவித் துன்பம் இங்கே உணர்த்தப்படுகின்றது. 

பொழிப்புரை

உலகத்தில் பலவாறாக அலைந்தும் திரிந்தும், இல்லற வாழ்க்கை அளிக்கும் சிற்றின்பத்தில் மயங்கி கிடந்தும், அந்த வாழ்க்கையினால் ஏற்படும் பல வகையான துன்பங்களில் ஆழ்ந்து வாழ்வது செம்மையான வாழ்க்கை அல்ல; அத்தகைய வாழ்வினால் நமது உயிருக்கு பயன் ஏதும் விளையாது. உயிருக்கு நிலையான நன்மை ஏற்பட வேண்டும் என்றால் நான் சொல்வதை நீங்கள் கேட்பீர்களாக; தினமும் இறைவனின் திருநாமத்தை சொல்லி, உங்களது பிறவிப் பிணியினை விலக்கிக் கொண்டு உங்களது உயிர்க்கு நன்மை தரும் செயலைச் செய்வீர்களாக. தினந்தோறும் இறைவனின் திருநாமங்களைச் சொல்லி உங்களது வாழ்க்கையை கழிக்காவிடில், பின்னர் நீங்கள் அவ்வாறு செய்யத் தவறிய குற்றத்திற்காக, இயமனின் முன்னர் காவலுக்கு வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுவீர்கள் என்பதை அறிந்து கொண்டு, இனியாவது அவனது திருநாமத்தை தினமும் சொல்லத் தொடங்குவீராக. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com