65. சங்குலா முன்கைத் தையல் - பாடல் 4

இசை பாட வேண்டிய வாயால்


நாவளம் பெறுமாறும் அந்நன்னுதல்
ஆமளம் சொல்லி அன்பு செயின் அலால்
கோமளம் சடைக் கோடிகாவா என
ஏவள் என்று எனை ஏசும் அவ்வேழையே 

விளக்கம்

இந்த பாடல், அகத்துறை பாடலாக, தாய்க் கூற்றாக அமைக்கப்பட்டு இருப்பதை காணலாம். இந்த பாடல் தனது நெஞ்சினை நோக்கி அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல் என்றும் கூறுவர். தன்னால் இயன்றவரைக்கும் சிவபிரானின் நாமத்தைச் சொல்லி, நாவினை வளம் பெறுமாறு செய்து அவனிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று கூறினால் அதனை புரிந்து கொள்ளாமல், தலைவி தன்னை ஏசுகின்றாள் என்று தாய் வருத்தப்படுவதை இந்த பாடலில் நாம் உணரலாம். இசை பாட வேண்டிய வாயால் வசை பாடினால், வருத்தம் வருவது இயற்கை தானே. அளவும் என்ற சொல், எதுகை கருதி இடை குறைபட்டிருக்கின்றது. ஏவள் = எவள் என்றார் சொல் எதுகை கருதி ஏவள் என திரிந்தது. கோமளம் சடை = அழகிய சடை. ஆமளவும் (ஆம்+அளவும்) என்ற தொடர் ஆமளம் என்று எதுகை கருதி திரிந்தது. ஏழை = உடல் வலிமையில், ஆண்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தவர்கள் என்பதால். பெண்களை ஏழை என்று பொதுவாக அழைப்பதுண்டு. காதல் வயப்பட்ட பெண்கள், தங்களது காதல் கைகூட வேண்டும் என்ற கவலையில் எப்போதும் இருப்பதால், அடுத்தவர்கள் அவர்களது நன்மைக்காக சொல்லும் ஆலோசனைகளை அவர்கள் பொருட்படுத்தாமல் அவர்களை, தங்களது காதலுக்கு எதிரிகளாக கருதுவதை நாம் வாழ்க்கையில் காண்கின்றோம். அத்தகைய சூழ்நிலைதான் அப்பர் பெருமானால் இங்கே சித்தரிக்கப்படுகின்றது. 

நம்மால் இயன்ற அளவு பெருமானின் திருநாமங்களைச் சொன்னால் நாவளம் பெருகும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் திருநாமத்தைச் சொல்லும் நா எத்தைகைய ஏற்றம் உடையது என்பதை நாம் கீழ்க்கண்ட அப்பர் பிரானின் பாடலிலிருந்து (4.94.6) தெரிந்துகொள்ளலாம். தனது நாவினுக்கு, திரு என்ற அடைமொழி கொடுத்து அப்பர் பிரான் சிறப்பிப்பதை நாம் இந்த பாடலில் உணரலாம். அந்த சிறப்பு, பெருமானின் நாமங்களைப் பயின்றதால் அந்த நாவினுக்கு ஏற்பட்டது என்று கூறியதன் மூலம், பெருமானின் திருநாமம் எத்தகைய சிறப்பினை அளிக்கும் என்பதை நாம் உணரலாம்.

கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் 
உருவாய்த் தெரிந்து உன்றன் நாமம் பயின்றேன் உனது                                         அருளால்
திருவாய் பொலிய சிவாய நம என்று நீறு அணிந்தேன்
தருவாய் சிவகதி பாதிரிப் புலியூர் அரனே

இந்த பாடலை, ஆன்மாவுக்கு உணர்த்தும் பாடலாக கருதி, இறைவனின் திருநாமத்தை ஓதாமல் அடுத்தவரை ஏசுவது தவறான செயல் என்றும், அது எந்த பலனையும் அளிக்காது என்பதையும் உணர்த்தும் உட்கருத்தினைக் கொண்ட பாடல் என்றும் கருதலாம். 

பொழிப்புரை

அழகிய நெற்றியினை உடைய எனது மகளிடம், பெருமான் பால் ஆராத காதல் கொண்டுள்ள எனது மகளிடம், நான் உன்னால் இயன்றவரை பெருமானின் திருநாமங்களை, உனது நாக்கு வளம் பெறும் வண்ணம் சொல்வாயாக என்று கூறினால், அவள் அதனை ஏற்காமல், எனது ஆலோசனையை புரிந்து கொள்ளாமல் என்னை ஏசுகின்றாள். அழகிய சடையினை உடைய கோடிகாவா என்று அன்புடன் அழைத்தால் தானே, அவனும் இவளது காதலினை ஏற்று இவளுக்கு வசப்படுவான். இதனைப் புரிந்துகொள்ளாமல், பெருமானின் திருநாமங்களை இசையாக பாட வேண்டிய நாவினால் என்னை வசை படுகின்றாளே, இந்த நிலைக்கு நான் என் செய்கேன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com