65. சங்குலா முன்கைத் தையல் - பாடல் 5

கோடிகா தலத்தில் உள்ள இறைவனே

வீறு தான் பெறுவார் சிலராகிலும்
நாறு பூங்கொன்றை தான் மிக நல்கானேல்
கூறுவேன் கோடிகா உளாய் என்று மால்
ஏறுவேன் நும்மால் ஏசப் படுவேனோ

விளக்கம்

வீறு = பெருமிதம், இறுமாப்பு. இந்த பாடல் அகத்துறை பாடல் வகையில் அமைந்தது; எனினும் இறைவனின் அருள் பெற்ற அடியார்கள் இன்பமாக, இறுமாந்து இருப்பதைக் காணும், ஒரு அடியாரின் கூற்று போன்று இருப்பதை நாம் காணலாம். இறைவனின் திருநாமத்தை மறுபடியும் மறுபடியும் கூறி உய்வினை அடைந்த ஆன்மாக்களைக் கண்ட மற்றொரு ஆன்மா, தானும் அது போன்று கோடிகா தலத்தில் உள்ள இறைவனே என்று மறுபடியும் மறுபடியும் கூறுவேன் என்று முடிவு செய்ததை கூறும் வண்ணம் அமைந்த பாடல். 

அங்கமாலை பதிகத்தில் (4.09), தனது தலை, கண்கள், செவிகள், மூக்கு, வாய், நெஞ்சம், கைகள், உடல், கால்கள் என்று பல அங்கங்களுக்கு ஒவ்வொரு செயலை ஒப்படைத்த அப்பர் பிரான், அந்தகைய பணிகளால் விளையும் பயனை நினைத்துப் பார்க்கின்றார். இறைவனுடன் தொடர்பு கொண்ட பல பணிகளைச் செய்யும் அந்த அங்கங்களின் உதவியால், தனது ஆன்மா பெருமானது திருவடிகளைச் சென்று சேர்ந்து இருக்கும் நிலையினை கற்பனை செய்யும் அப்பர் பிரான், தான் அந்த நிலையில் இறுமாந்து இருப்பேன் என்று கூறுகின்றார். இறைவனின் அருள் பெற்றவர்கள் அத்தகைய இறுமாப்பினை அடைவார்கள் என்று இந்த பதிகத்தின் பாடலில் உணர்த்துகின்றார்.

இறுமாந்து இருப்பன் கொலோ ஈசன் பல்கணத்து                                         எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ் சென்றங்கு இறுமாந்து                                     இருப்பன் கொலோ

இறைவன் தனது அருளினை தனக்கு தாராவிடின், தான் மறுபடியும் மறுபடியும் அவனது நாமத்தை கூறுவேன் என்ற அப்பர் நாயகியின் முடிவு, நமக்கு மணிவாசகரின் கோயில் திருப்பதிகத்தின் கடைப் பாடலை நினைவூட்டுகின்றது. சிவபெருமான் நமக்கு என்றேனும் ஒரு நாள் அருள்வான் என்ற நம்பிக்கையுடன் நாம் சிவபிரானின் திருநாமத்தை இடைவிடாது பிதற்றிக்கொண்டு, கண்களிலிருந்து நீர் பொழியுமாறு, அவனை வாயால் வாழ்த்தி, மனத்தினால் நினைத்து, பல காலமும் அவனது உருவத்தைத் தியானிக்க வேண்டும் என்று கூறும் மணிவாசகரின் பாடல் நமக்கு நினைவுக்கு வருகின்றது 

நல்காது ஒழியான் நமக்கு என்று நாமம் பிதற்றி நயன நீர்
மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து
                உருகி
பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை
                         உடையானே

மேலும் இந்த பாடலில், இறைவன் மீது அளவில்லாத காதல் கொண்டு எப்போதும் அவனது பெயரினை சொல்லியவாறு இருக்கும் தனது நிலையினை புரிந்துகொண்ட இறைவன் தன்னை ஏசாமல் இருப்பான் என்ற நம்பிக்கை அப்பர் நாயகிக்கு இருப்பதை நாம் உணரலாம். அப்படி ஏசினாலும் அதற்காக தனது போக்கினை மாற்றிக்கொள்ளாமல் இருக்கும் உறுதி அப்பர் நாயகியின் ஏசப் படுவேனோ என்று கேள்வி தொடுக்கும் பாணியில் தென்படுகின்றது. இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு மணிவாசகரின் திருச்சதகம் பதிகத்தில் ஆனந்த பரவசம் என்ற தலைப்பின் கீழ் இருக்கும் பாடலை நினைவூட்டுகின்றது. பாண்டிய நாட்டின் முதல் அமைச்சராக இருந்த ஒருவர், தனது பதவியை விட்டு விலகி, ஆண்டிக்கோலம் ஏற்றதை கேலியாக பேசி பலர் ஏசினாலும், அந்த கேலிப் பேச்சுகளை பொருட்படுத்தாமல், உலக வாழ்க்கையில் தான் அடையும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று வீடுபேறு பெறுவதற்கு ஆசை கொண்டமையால் பெருமானது அடியானாக மாறியதாக மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். பூதலர் = நிலவுலகத்து மக்கள்.

பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே
பூசப்பட்டேன் பூதலரால் உன் அடியான் என்று
ஏசப்பட்டேன் இனிப் படுகின்றது அமையாதால்
ஆசைப் பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே

இறைவனை நோக்கி, நும்மால் ஏசப்படுவேனோ என்று தனது ஐயத்தை உணர்த்தும் விதமாக அப்பர் நாயகி இந்த பாடலில் கூறுவது போன்று, புதியவளாக தன்னிடம் வந்து சேரும் இந்த அடியவளின் சேர்க்கையை இறைவன் இகழாமல் இருப்பானோ என்று தனது தலைவி தனது ஐயத்தைத் தெரிவிக்கும் பாடல், பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.12.1) முதல் பாடலாகும். 

சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான்
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கு முடிச் சென்னிப்
பொன்மாலை மார்பன் என் புதுநலம் உண்டு இகழ்வானோ 

இந்த பாடலின் திரண்ட கருத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சொல் வரிசையை தவறாமல் கூவும் குயில் இனங்களே, வரிசை வரிசையாக கோடுகள் பொருந்திய வண்டுகள் பண் பாடும் பழன நகரில் உறையும் சிவபெருமான், மாலைப் பகுதியின் முற்பகுதியில் ஒளி வீசும் பிறைச் சந்திரனைத் தனது சடை முடியில் தாங்கியவனும், பொன் போன்ற கொன்றை மாலையை மார்பில் சூடியவனும் ஆவான். சிவபெருமான், இப்போது நான் அவனிடம் காதல் கொண்டுள்ள எனது அன்பினை உணர்ந்தாலும் பழ அடியார்கள் பலர் இருப்பதால் புதியவளாகிய எனது அன்பினை பொருட்படுத்தாது அலட்சியம் செய்வானோ? குயிலே நீ தான் எனது அன்பின் ஆழத்தை அவனுக்கு உணர்த்தி அவன் என்னை புறக்கணிக்காதவாறு, எனது நிலையை அவனுக்கு எடுத்துரைக்க வேண்டும் 

பொழிப்புரை

கோடிகா தலத்தில் உள்ள இறைவனே, என்னைப் போன்று உன் மீது காதல் கொண்டுள்ள சிலர், உனது அருளினை பெற்றதால், உனது தலையில் இருந்த கொன்றை மலர் கிடைக்கப் பெற்று இறுமாப்புடன் இருக்கின்றார்கள். நானும் அத்தகைய விருப்பத்தைக் கொண்டுள்ளேன். உனது சடைமுடியில் இருக்கும் நறுமணம் மிகுந்த கொன்றை பூன்கொத்தினை எனக்கு நீ அருளும் வரையில், நான் கோடிகா தலத்து இறைவனே, கோடிகாவா என்று உனது திருநாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பேன். இவ்வாறு உன் மீது நான் கொண்டுள்ள காதலின் காரணமாக உனது நாமத்தை பிதற்றுவதை, நீ ஏசமாட்டாய், இகழ மாட்டாய் என்று நினைக்கின்றேன். இறைவனே எனக்கு உனது சடையில் உள்ள கொன்றை மலரை அளித்து, எனது காதலை நீ அங்கீகாரம் செய்ததை உணர்த்துவாயாக. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com