55. பட்ட நெற்றியர் பாய்புலி - பாடல் 5

துள்ளுகின்ற மான்குட்டியையும்

துள்ளும் மான்மறி தூ மழுவாளினர்
வெள்ள நீர் சடை மேலவர்
அள்ளலார் வயல் சூழ் மணஞ்சேரி எம்
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே


விளக்கம்

இந்த பாடலில் பெருமானின் பெருமானின் திருவடிகளை வாழ்த்தும் வாழ்க்கையே வாழ்க்கை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு சம்பந்தப் பெருமானின் ஆமாத்தூர் பதிகத்தின் பாடலை (2.44.9) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் திருஞானசம்பந்தர், ஆமாத்தூர் அடிகளின் திருப்பாதங்களை வணங்காதவர்களின் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையோ என்ற கேள்வியை எழுப்பி, அவர்களது வாழ்க்கை வாழ்க்கையாக மதிக்கப்படாது என்று உணர்த்துகின்றார். கருடனை ஊர்தியாகக் கொண்ட திருமாலும், தாமரையை ஆசனமாகக் கொண்ட பிரமனும் தங்களது மனதினில் தியானிக்கும் பெருமானது தன்மையை அளவிட முடியாது என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். அள்ளல் = சேறு. தலத்தின் நீர்வளமும் நிலவளமும் குறிப்பிடப்படுகின்றன.

புள்ளும் கமலமும் கைக் கொண்டார் தாமிருவர்
உள்ளும் அவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் என்
வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே

சுந்தரரும் வன்பார்த்தான் பனங்ககாட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில், பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்றும், உணராதவர்களின் உணர்வு உணர்வாக கருதப்படாது என்றும், பேசாதவர்களின் பேச்சு பேச்சாக கருதப்படாது என்றும், துதிக்காதவர்களின் துதி துதியாக கருதப்படாது என்றும், பெருமானை குறித்த செய்திகளை கல்லாதவர்களின் கல்வி கல்வியல்ல என்றும், பெருமானை நினையாதவர்களின் நினைவு நினைவல்ல என்றும், பெருமானை நினைத்து மனம் நெகிழாதவர்களின் உருக்கம் உருக்கமல்ல என்றும் கூறுகின்றார். இந்த பதிகத்தின் (7.86) ஒரு பாடலை நாம் இங்கே காண்போம். படிறன் = வஞ்சகன், கள்வன்.

மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்
கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் பனங்காட்டூர்
ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே

இந்த பாடலில் அப்பர் பிரான் தூமழு என்று குறிப்பிட்டு தூய்மையான மழ என்று உணர்த்துகின்றார். பல தேவாரப் பாடல்களில் வெண்மழு என்றும் தூமழு என்று கூறப் படுகின்றது. மழு ஆயுதத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் சிவபிரானுக்கு ஏற்படாத காரணத்தால், இரத்தக் கரை படாமல் தூய்மையான வெண்மை நிறத்துடன் காணப்படுவதாக பல தேவாரப் பதிகங்களில் வெண்மழு என்று குறிக்கப்படுகின்றது. முடையார் = முடை நாற்றம் உடையவர், பல் விளக்காமல் இருத்தல் மற்றும் நீராடாமல் இருத்தல் ஆகிய வழக்கங்களால் முடை நாற்றத்துடன் திரிந்த சமணர்கள். கடையர் = கீழோர். முண்டித்தல் = தலையில் உள்ள முடிகளை நீக்குதல். மொட்டர் = மொட்டைத் தலை உடையவர்கள். கடிந்தார் = அழித்தார். இந்த பாடல் பழையாறை வடதளி தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் (5.58) பாடலாகும்.

முடையரைத் தலை முண்டிக்கும் மொட்டரைக்
கடையரைக் கடிந்தார் கனல் வெண்மழு
படையரைப் பழையாறை வடதளி
உடையரைக் குளிர்ந்து உள்கும் என்னுள்ளமே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகம் ஒன்றினில் (5.41), சூலம் மற்றும் மழுவாள் ஆகிய இரண்டு ஆயுதங்களை ஏந்தியவராக சிவபெருமானை சித்தரிக்கும் அப்பர் பிரான், இரண்டு ஆயுதங்களின் இடையே உள்ள வேற்றுமையையும் உணர்த்துகின்றார். விழுது சூலத்தன் என்று உடலில் உள்ள தசைக் கொழுப்பு படித்த சூலம் என்றும், வெண் மழுவாள் என்று கரை ஏதும் படியாத மழுவாள் என்றும் வேற்றுமையினை நமக்கு உணர்த்தும் பாடல். விழுது = நெய், இங்கே உடலின் கொழுப்பு. கழுது = பேய்.

விழுது சூலத்தன் வெண் மழுவாள் படைக்
கழுது துஞ்சும் காட்டகத்து ஆடலான்
பழுது ஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம் வினை தூளியே

இந்த பாடலில் துள்ளும் மான்மறி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மான் குட்டியை முரட்டு குணம் கொண்டதாக மாற்றி, தாருகவனத்து முனிவர்கள் சிவபெருமான் மீது ஏவ, பெருமான் அந்த மான்குட்டியின் குணத்தை மாற்றி, தனது இயல்பான குணத்துடன் சாதுவாக, துள்ளி ஓடும் குட்டியாக மாற்றி, தனது கையில் ஏற்றுக்கொண்டார். மானும் அவரிடம் அடங்கி, தனது இயல்பான குணத்துடன், துள்ளி ஓட முனைப்படுகின்றது. இவ்வாறு மானைத் தனது கையில் ஏற்றுக்கொண்டதை குறிப்பிடும் வகையில் துள்ளு மான்மறி என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை

துள்ளுகின்ற மான்குட்டியையும், தூய்மையான மழுவாளையும் தனது கையினில் ஏந்தியவராக விளங்கும் பெருமான், பெரிய வெள்ளமாக பாய்ந்து வந்த கங்கை நதியைத் தனது சடையில் அடக்கியவர். சேறு நிறைந்த வயல்களால் சூழப்பட்ட மணஞ்சேரி வள்ளலின் திருப்பாதங்களை போற்றி வணங்கும் வாழ்க்கை தான், உண்மையான பொருள் பொதிந்த வாழ்க்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com