55. பட்ட நெற்றியர் பாய்புலி - பாடல் 7

வானில் உலவும் அழகிய சந்திரனை

சுண்ணத்தார் சுடுநீறு உகந்து ஆடலார்
விண்ணத்த மதி சூடிய வேதியர்
மண்ணத்தம் முழவார் மணஞ்சேரியார்
வண்ணத்தம் முலையாள் உமை வண்ணரே
 

விளக்கம்    

மண்ணத்தம் = உறுமல் ஒலியினை எழுப்பும். சுண்ணம் = திருநீறு. சுடுநீறு = சாம்பல். சாம்பலை உகந்து தனது நீராட்டத்திற்கு ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு உஜ்ஜயினி நகரத்தில் உள்ள ஜ்யோதிர் இலிங்கத்தில் ஒன்றான மகா காளேஸ்வரரை நினைவூட்டுகின்றது. இந்த தலத்தில் உள்ள இறைவனுக்கு, தினமும் நள்ளிரவில், சுடுகாட்டு சாம்பலை அபிஷேகத்திற்கு பயன்படுத்துகின்றார்கள். இந்த தலம் உஞ்சேனை மாகாளம் என்று வைப்புத் தலமாக அப்பர் பிரானாலும் சம்பந்தப் பெருமானாலும் க்ஷேத்திரக் கோவைப் பதிகத்தில் குறிப்பிடப்படுகின்றது. குறும்பலா = குற்றாலம். நெற்குன்றம், நெடுவாயில், நற்குன்றம், உஞ்சேனை மாகாளம் என்பன வைப்புத் தலங்கள். கற்குன்றம் என்று கோவர்த்தன மலையை, கண்ணன் தனது கையில் ஏந்தி, ஆய்ப்பாடி மக்களை காத்த நிகழ்ச்சி இந்த சம்பந்தர் பதிகத்தில் (2.39) குறிப்பிடப்பட்டுள்ளது.

நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல் நெடுவாயில்
                     குறும்பலா நீடுதிரு
 நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுர நளிர்சோலை
            உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
 கற்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல் வண்ணனும்
            மாமலரோனும் காணாச்
 சொற்கு என்றும் தொலைவிலாதான் உறையும் குடமூக்கு
                என்று சொல்லிக் குலாவுமினே

அப்பர் பிரான், உஞ்சேனை மாகாளத்தை குறிப்பிடும் பாடல் (6.70) க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டக பதிகத்தில் உள்ளது. ஊறல் = தக்கோலம் என்று அழைக்கப்படும் தலம். உஞ்சேனை மாகாளம், உருத்திர கோடி, பொதிகை மலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம், வேதீச்சரம், வீவீச்சரம், வெற்றியூர், கஞ்சாறு, பஞ்சாக்கை என்பன வைப்புத் தலங்கள்.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி
            மறைக்காட்டுள்ளும்
மஞ்சார்    பொதியின் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம்
                       மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மேயச்சூர் வைகா வேதீச்சரம் வீவிச்சரம்
                வெற்றியூரும்    
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாய நாதனையே
                காணலாமே

பொழிப்புரை

திருநீற்றினைக் குழைத்துத் தனது உடலெங்கும் பூசியவரும், சாம்பலை உகந்து தான் நீராடுவதற்கு ஏற்றுக் கொள்பவரும், வானில் உலவும் அழகிய சந்திரனைத் தனது சடையில் சூடிய வேதியரும், ஆகிய பெருமான் உறுமல் ஒலியினை எழுப்பும் முழவம் எனப்படும் இசைக் கருவிகள் ஒலித்து இசைக்கும் மணஞ்சேரி தலத்தில் உறைகின்றார். அவர் அழகிய வண்ணத்தினை உடைய மார்பகங்களைக் கொண்ட உமையம்மையை, தனது உடலில் உடையவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com