55. பட்ட நெற்றியர் பாய்புலி - பாடல் 10

மணஞ்சேரி மணாளனை வாழ்த்துவோம்

கடுத்த மேனி அரக்கன் கயிலையை
எடுத்தவன் நெடு நீள்முடி பத்திறப்
படுத்தலும் மணஞ்சேரி அருள் எனக்
கொடுத்தனன் கொற்ற வாளொடு நாமமே
 

விளக்கம்

கடுத்த மேனி = வெறுக்கத்தக்க உடலினை உடையவன். இந்த பாடலில், இராவணன் என்ற பெயரினை அளித்தது சிவபெருமான் என்ற தகவலை அப்பர் பிரான் நமக்கு அளிக்கின்றார். இராவணன் என்றால் உலகெங்கும் தனது குரல் கேட்குமாறு உரத்த குரலில் அழுதவன் என்று பொருள். கயிலை மலையின் கீழ் நசுக்குண்டு, வேதனை தாங்காமல் தசக்ரீவன் (அவனது இயற்பெயர்) கதறியது உலகெங்கும் கேட்டதாக இராமயண காவியத்தில் சொல்லப் படுகின்றது. பின்னர் சாமகானம் பாடி இறைவனை மகிழ்வித்து, அவரிடம் பல அருட்கள் பெற்றபோது இறைவன் இராவணன் என்ற பெயரை அவனுக்கு சூட்டினார். இறைவனால் பெயர் சூட்டப்பட்ட மற்ற அடியார்கள், சண்டீசர் (இயற்பெயர் - விசாரசருமன்), கண்ணப்பர் (திண்ணன்), திருநாவுக்கரசர் (மருள்நீக்கியார்), மாணிக்கவாசகர் (வாதவூரர்), வன்தொண்டர் (சுந்தரர்).

இந்த பாடலில், கடுத்த மேனி அரக்கன் என்று குறிப்பிட்டு, பலரும் வெறுக்கத்தக்க மேனியை உடையவன் அரக்கன் இராவணன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தனது உடல் வலிமையில் மிகுந்த கர்வம் கொண்டிருந்தமையால். கயிலாய மலையின் பெருமையை உணராமல் அந்த மலையினை பேர்த்தெடுக்க துணிந்ததால், அந்த வலிமையான உடலினை வெறுக்கத் தக்கது என்று கூறுகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

பொழிப்புரை

வெறுக்கத் தக்க உடலினைக் கொண்டிருந்த அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தபோது, அவனது நீண்ட முடிகள் பத்தும் நொறுங்குமாறு, தனது கால் விரலால் கயிலை மலையினை பெருமான் அழுத்தினார். அந்த அழுத்தத்தால் விளைந்த உடல் வருத்தத்தைத் தாங்கமுடியாமல், மணஞ்சேரி பெருமானே அருளாய் என்று அரக்கன் கதறியதும், அவனது கதறலுக்கு இரங்கி அவனுக்கு மூன்று கோடி வாழ்நாள், சந்திரகாசம் என்ற வாள், இராவணன் என்ற நாமம் ஆகியவற்றை பெருமான் அவனுக்கு அளித்து அருள்புரிந்தார்.

முடிவுரை

மணஞ்சேரி மணாளனை வாழ்த்துவோம் என்று முதல் பாடலில், மற்றவர்களையும் தன்னுடன் பெருமானை வாழ்த்துமாறு அழைக்கும் அப்பர் பிரான், பெருமானை வாழ்த்துவதால் கிடைக்கும் பயன்களை அடுத்து வரும் பாடல்களில் கூறுகின்றார். இவ்வாறு பெருமானை வாழ்த்தும் நெஞ்சங்களின் வினைகள் முற்றிலும் அழிந்துவிடும்; தன்னைப் பற்றும் அடியார்களுக்கு சிறந்த பற்றுக்கோடாக அவர் செயல்படுவார்; அத்தகைய அடியார்களை இறைவன் விரும்புவார்; என்று பதிகத்தின் இரண்டாவது, மூன்றாவது நான்காவது பாடல்களில் கூறும் அப்பர் பிரான், பெருமானின் திருவடிகளை வாழ்த்தி வாழும் வாழ்க்கையே வாழ்வாகும் என்று ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். பதிகத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில் அவரது தன்மையை கூறும் அப்பர் பிரான், பதிகத்தின் எட்டாவது பாடலில், அவரது திருவடிகளைத் தொழும் அடியார்கள் வேண்டுவன வாய்க்கப் பெறுவார்கள் என்றும், அவரது அடியார்களுக்கு துன்பம் ஏற்படாது என்றும் கூறுகின்றார். பதிகத்தின் பத்தாவது பாடலில், கதறி அழுத அரக்கனுக்கு அருள்புரிந்த செய்கையை குறிப்பிட்டு, நாமும் கதறி அழுதால் அவனது அருளினைப் பெறலாம் என்பதை உணர்த்துகின்றார். அப்பர் பிரான் காட்டிய வழியில் நாமும், இறைவனைத் தொழுது, பொருள் பொருந்திய வாழ்க்கை வாழ்ந்து, வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com