56. நோதங்கம் இல்லாதார் - பாடல் 1

துருத்தி தலம் சென்ற அப்பர் பிரான்

(பந்தணைநல்லூர் – திருத்தாண்டகம்)

முன்னுரை

அப்பர் பிரான் பந்தணைநல்லூர் சென்ற குறிப்பு பெரிய புராணத்தில் காணப்படவில்லை. எனவே துருத்தி தலம் சென்ற அப்பர் பிரான் அங்கிருந்து (இந்நாளில் குத்தாலம் என்று அழைக்கப்படும் தலம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது) அருகாமை காரணமாக திருமணஞ்சேரி, பந்தணைநல்லூர் ஆகிய தலங்களும் சென்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. இந்த தலம் மயிலாடுதுறை திருப்பனந்தாள் பாதையில் அமைந்துள்ள தலம்.

பாடல் 1

நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல்
             மேலோர் ஆமை பூண்டார்
பேய் தங்கு நீள்காட்டில் நட்டமாடிப் பிறை சூடும் சடை
            மேலோர் புனலும் சூடி
ஆதங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல்
    கொண்டார் அந்திவாய் வண்ணம் கொண்டார்
பாதங்க நீறு ஏற்றார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
            பந்தணைநல்லூராரே

விளக்கம்

நோதங்கம் = நோவது அங்கம் என்பதன் திரிபு. நோய் நொடிகளால் வருத்தமுறும் உடல். நோய்கள் நம்மை வந்து அடைவதற்கும் நமது பழவினைகளே காரணம். இயல்பாகவே மலங்களிலிருந்தும், அதன் மூலம் ஏற்படும் வினைகளிலிருந்தும் நீங்கிய பெருமான் என்று இதன் மூலம் இங்கே உணர்த்தப்படுகின்றது. ஆமை என்று ஆமையின் ஓடு இங்கே உணர்த்தப்படுகின்றது. ஆதங்கு = வளர்கின்ற. ஆதங்கு என்ற சொல்லுக்கு ஆ தங்கிய என்று பிரித்து, பசு தங்கிய தலம் என்றும் பொருள் கொள்ளலாம். பாதங்கம் = பாதம் முதல் அனைத்து அங்கங்களிலும்.

அம்பிகை பசு வடிவத்துடன் இங்கே தங்கி இறைவனை நோக்கி தவம் செய்ததாக தலபுராணம் கூறுகின்றது. பசுவாக இறைவனை வழிபட்ட அம்பிகையை மணந்ததால் பசுபதிநாதர் என்று பெயர் வந்ததாக கூறுவார்கள். இந்த தலத்தில் கல்யாண சுந்தரர் சன்னதி தனியாக உள்ளது. ஒரு சமயம் உமையம்மை பந்து விளையாட விருப்பம் கொண்டபோது, இறைவன், நான்கு வேதங்களை பந்துகளாக மாற்றி அம்மையிடம் விளையாட கொடுத்தார். உமையம்மையுடன், இலக்குமியும் கலைவாணியும் விளையாட்டில் கலந்துகொண்டார்கள். மூவரும் மும்மரமாக விளையாடியதில், மாலை நேரம் முடிந்ததை எவரும் உணரவில்லை. தேவிகள் மூவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற விளையாட்டினை நிறுத்துவதற்கு மனம் வராத சூரியன், தான் மறையும் நேரம் வந்தபின்னரும் மறையாமல் இருந்தான். இதனால் பகல் நேரம் அதிகரித்து, வெப்பத்தினால் உயிர்கள் பலவும் வருந்தின. கோபம் கொண்ட பெருமான், தேவிகள் விளையாடிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்து பந்தினை தனது காலினால் உதைத்தார். அந்த பந்து விழுந்த இடம் தான் பந்தணைநல்லூர் (பந்து அணை நல்லூர்) என்று அழைக்கப்பட்டது. இந்த பெயர் இப்போது பந்தநல்லூர் என்று மருவிவிட்டது.

பந்தினைக் காணாத உமையம்மை இறைவனிடம் வந்து முறையிட்டார். கோபத்தில் இருந்த பெருமான் பசுவாக மாறுமாறு பார்வதி தேவிக்கு சாபம் கொடுத்தார். முருகனை கன்றாக மாற்றிக்கொண்டு, அம்பிகை இந்த தலம் வந்து சேர்ந்தார். பெருமாளும் இடையனாக மாறி அவர்களுடன் வந்தார். அனைவரும் இங்கே தவம் செய்து கொண்டிருந்த கண்வ முனிவரின் குடில் வந்து அடைந்தார்கள். கொன்றை மரத்தின் அடியில் பந்து விழுந்த இடத்தில் ஒரு சுயம்பு இலிங்கம் தோன்றியது. பசுவாக மாறிய பார்வதி அன்னை தினமும் அந்த இலிங்கத்தின் மீது பால் பொழிந்து வழிபாடு செய்து வந்தார். தினமும் இவ்வாறு பாலால் நீராட்டப்பட்ட இலிங்கம் வெண்மை நிறத்தில் இருப்பதை நாம் இன்றும் காணலாம். இவ்வாறு தினமும் பால் பொழிந்து வந்தபோது ஒருநாள், பசுவின் குளம்பு இலிங்கத்தின் மீது படவே,

இலிங்கத்திலிருந்து பெருமான் வெளிப்பட்டு அன்னைக்கு சாப விமோசனம் அளித்தார், இதுதான் பசுவாக இருந்த பார்வதி தேவியை பதியாக வந்து பெருமான் ஆட்கொண்ட வரலாறு.

சம்பந்தப் பெருமானும், இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.121) முதல் பாடலில் காதலித்து உறைதரு கோயில் என்று இந்த தலத்தை குறிப்பிடுகின்றார். சம்பந்தப் பெருமானுக்கு இறைவன் தனது காலால் உதைத்து பந்தினை, இங்கே விழச்செய்து அங்கே சுயம்புவாக தோன்றியது நினைவுக்கு வந்ததுபோலும். அந்த திருவடி செய்த ஒரு வீரச் செயலுடன், கூற்றுவனை உதைத்த செயலுடன் பதிகத்தை தொடங்குகின்றார். கடறு = காடு. கொடிறனார் = உறுதியானவர். படிறனார் = வஞ்சகர்.

இடறினார் கூற்றைப் பொடி செய்தார் மதிலை இவை சொல்லி
                உலகு எழுந்து ஏத்தக்
கடறினார் ஆவர் காற்றுளார் ஆவர் காதலித்து உறைதரு
                    கோயில்
கொடிறனார் யாதும் குறைவிலார் தாம் போய்க் கோவணம்
            கொண்டு கூத்தாடும்
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

பாதங்க நீறு ஏற்றார் = பாதம் தொடங்கி அனைத்து அங்கங்களிலும் திருநீறு பூசியவர். இறைவனது திருக்கோலத்தை வர்ணிக்கும்போது, பாதம் தொடங்கி திருமுடி வரை வர்ணனை செய்வதும் (பாதாதி கேச வர்ணனை) இறைவியின் திருக்கோலத்தை வர்ணிக்கும்போது திருமுடியிலிருந்து பாதம் வரை வர்ணனை செய்வதும் (கேசாதி பாத வர்ணனை) மரபு. அந்த மரபிலிருந்து வழுவாமல், பாதம் முதல் அனைத்து அங்கங்களும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பாளையுடை கமுகு என்று தொடங்கும் பதிகத்தில் (4.80) பாதம் தொடங்கி நடராஜப் பெருமானின் ஆடலின் அழகினை ஒவ்வொரு அங்கமாக அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முதல் பாடலில் நடராஜப் பெருமானின் ஆடலை குறிப்பிடும் அப்பர் பிரான், இரண்டாவது பாடலில் திருவடியையும், அடுத்து வரும் பாடல்களில் துகில், கச்சு, கை, மார்பில் அணிந்துள்ள பன்றியின் பல், திருமுகம், நெற்றிக்கண், சடை என்று பல அங்கங்களைக் குறிப்பிட்டு கடைப் பாடலில் நாம் பற்றிக்கொள்ள வேண்டிய திருவடியை மறுபடியும் சுட்டிக் காட்டுகின்றார்.

திருமாளிகைக் தேவர் அருளிய உயர்கொடி ஆடை என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகமும் (ஒன்பதாம் திருமுறை) பாதாதி கேச வர்ணனை முறையில் அமைந்துள்ள பதிகம் ஆகும். இறைவனின் திருவடிகளைப் பற்றிய குறிப்புடன் தொடங்கும் முதல் பாடலை தொடர்ந்து வரும் பாடல்களில், காற்சிலம்பு, கணுக்கால், தொடை, இடையில் அணிந்துள்ள கச்சு, வயிற்றின் கொப்பூழ், உருத்திராக்க மாலை, பவளவாய் முறுவல், திருமுகம், மற்றும் சடை என்று பெருமானின் அங்கங்களின் அழகு உணர்த்தப்படுகின்றன. வாலியமுதனார் அருளிய திருவிசைப்பா பாடலும் (மையல் மாதொரு என்று தொடங்கும் ஒன்பதாம் திருமுறை பாடல்) இதே போன்று பாதாதி கேச வர்ணனையாக அமைந்துள்ளது. இந்த பதிகத்தில், திருவடி, சிலம்பு, தொடை, கச்சு, தொப்புள் சுழி, வயிறு, கழுத்து, காத்து, நெற்றி, சென்னி என பல அங்கங்கள் குறிப்பிடப்படுகின்றன.

பொழிப்புரை

நோய் நொடிகள் மற்றும் மூப்பினால் அவதியுறாத, மலங்களின் பிணிப்பு நீங்கிய, உடலினை உடையவர் சிவபெருமான். அவர் தனது உடலினில் பாம்பினை அணிகலனாக அணிந்துள்ளார். மார்பினில் பூணூலோடு ஆமை ஓட்டினையும் பூண்டவராக பெருமான் காணப்படுகின்றார். பேய்கள் தங்கும் சுடுகாட்டினில் நடனம் ஆடும் பெருமான், தனது சடையில் பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும் சூடியுள்ளார். இந்த தலத்தில் உறையும் பெருமான், பசுவாக இங்கே தன்னை நோக்கித் தவம் செய்த உமையம்மையை, தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவராவார். கையினில் தீயேந்தி நடமாடும் பெருமான், அந்தி வானத்து வண்ணத்தில் சிவந்த திருமேனியை உடையவர் ஆவார். .தனது பாதம் முதல் அனைத்து அங்கங்களிலும் திருநீறு பூசியவராய் காணப்படும்; பெருமான், பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்றவராய், பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். அவர்தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com