56. நோதங்கம் இல்லாதார் - பாடல் 4

கங்கை உலாவும் சடைமுடியின்

நீருலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார்
            அங்கையில் நிறையும் ஏற்றார்
ஊரெலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல் வாய்
            நஞ்சம் மிடற்றில் ஏற்றார்
வாருலா முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார்
        மான்மறி ஓர் கையில் ஏற்றார்
பாருலாம் புகழ் ஏற்றார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
              பந்தணைநல்லூராரே
 

விளக்கம்

அங்கையில் என்ற சொல்லை, நெருப்பு ஏற்றார் என்ற தொடருடன் இணைத்து பொருள் கொள்ள வேண்டும். பெருமான் ஊரெலாம் திரிந்து பலி ஏற்றார் என்று பாடல் தோறும் சொல்லும் அப்பர் பிரானுக்கு, தாருகவனத்து மகளிரின் நிலை நினைவுக்கு வந்தது போலும். நிறையும் ஏற்றார் ஊரெலாம் பலி ஏற்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பிச்சைப் பெருமானாக, பெருமான் தாருகவனம் சென்றபோது அவரது அழகில் மயங்கிய, முனிவர்களின் மனைவியர், தாங்கள் ஈடுபட்டிருந்த செயலையும் மறந்து, தங்களது ஆடைகள் நழுவுவதையும் அறியாமல் பெருமானைப் பின்தொடர்ந்து சென்றனர். பண்டைய நாட்களில், திருமணம் ஆன பெண்கள் தங்கள் கணவரை விடுத்து வேறு ஒரு ஆடவரை மனதினில் நினைத்தலே அவரது கற்பு குலைந்த நிலையாக கருதப்பட்டதால், இந்த பெண்மணிகள் கற்பினை இழந்தவர்களாக கருதப்பட்டார்கள். இந்த செய்திதான் இங்கே நிறையும் ஏற்றார் என்று பெருமானின் மேல் ஏற்றிக் கூறப்படுகின்றது.

பொழிப்புரை

கங்கை உலாவும் சடைமுடியின் மேலே பிறைச் சந்திரனை ஏற்ற சிவபெருமான், தனது அழகான உள்ளங்கையினில் நெருப்பினை ஏந்தியவாறு நடனம் ஆடுகின்றார். பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்ற பெருமான், தனது அழகினில் மயங்கித் தன்னைப் பின்தொடர்ந்த பெண்களின் கற்பினை கவர்ந்தவராவார். பாம்பினைத் தனது ஆபரணமாக ஏற்ற அந்த பெருமான், இடைவிடாது ஒலி எழுப்பும் கடலிலிருந்து எழுந்த நஞ்சினைத் தனது கழுத்தினில் ஏற்று, பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சின் கொடுமையிலிருந்து அனைவரையும் காப்பாற்றினார். மார்பினில் கச்சணிந்த இளம்பெண்ணாகிய பார்வதி தேவியைத் தனது உடலில் ஏற்றுள்ள பெருமான், தனது கையினில் மழு ஆயுதத்தையும் மான் கன்றினையும் ஏந்தியவராக காணப்படுகின்றார். இவ்வாறு காட்சி தரும் பெருமானை உலகங்கள் அனைத்தும் போற்ற, பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்றவராய், பெருமான் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். இவர்தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com