56. நோதங்கம் இல்லாதார் - பாடல் 6

மான்தோலை தோளில் அணிந்துள்ள

கட மன்னு களியானை உரிவை போர்த்தார் கானப்பேர்
                      காதலார் காதல் செய்து
மட மன்னும் அடியார் தம் மனத்தின் உள்ளார் மானுரி
            தோல் மிசைத் தோளார் மங்கை காண
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான் மறையோடு
                    ஆறங்கம் நவின்ற நாவார்
பட மன்னு திருமுடியார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
                        பந்தணைநல்லூராரே
 

விளக்கம்

கடம் மன்னு = மதம் நிறைந்து காணப்படும். களி = மயக்கம். உரிவை = தோல். ஆறங்கம் = சிக்ஷை, வியாகரணம், சந்தம், நிருக்தம், சோதிடம் மற்றும் கல்பம். இந்த அங்கங்கள்தாம் வேதங்களுக்கு அரண்போல் நின்று, வேத மந்திரங்களை நாம் பிழையின்றி சொல்ல உதவுகின்றன. மட மன்னும் = அறியாமை நிறைந்திருந்த மனதினை உடைய அடியார்கள். கானப்பேர் எனப்படும் தலம் இன்று காளையார் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. இந்த தலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. நடம் மன்னி ஆடுவார் = நிலையாக நடனம் ஆடுவார். இடைவிடாது பெருமான் நடனம் ஆடுவதால்தான் உலகம் சரிவர இயங்குவதாக பெரியோர்கள் கூறுவார்கள். இந்த நடனத்தை பெருமான் எப்போது ஆரம்பித்தார் என்பதும் எவருக்கும் தெரியாது, நடனம் முடியும் நேரத்தையும் நாம் எவரும் அறியமுடியாது. அதனால்தான் இந்த நடனத்தை ஆதி அந்தம் இல்லாத நடனம் என்று சேக்கிழார் (திருநீலகண்ட குயவனார் புராணம்) பெரிய புராணத்தில் கூறுகின்றார். வேள் என்றால் மண் என்று பொருள். வேட்கோவர் = குயவர்.

வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்தாடும்
நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார்

பொழிப்புரை

மதம் மிகுந்திருந்த காரணத்தால் மயக்கம் கொண்டு பெருமானைத் தாக்கவந்த யானையின் தோலை உரித்து, அதனைத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்துகொண்டவர் சிவபெருமான். கானப்பேர் தலத்தை, மிகவும் விருப்பத்துடன் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள பெருமான், தனது அடியார்களின் மனதினில் உள்ள அறியாமையை நீக்கி அங்கும் குடிகொண்டு உறைகின்றார். மான்தோலைத் தனது தோளில் அணிந்துள்ள பெருமான், உமையம்மை காணுமாறு இடைவிடாது நடனம் ஆடிக்கொண்டு இருக்கின்றார். நாகத்தினை அணிகலனாகக் கொண்டுள்ள பெருமான், நான் மறைகளையும் அதன் அரணாக விளங்கும் ஆறு அங்கங்களையும் மொழிந்தவர் ஆவார். தனது திருமுடியிலும் நாகத்தைச் சூடிய பெருமான், பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்றவராய், பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். இவர்தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com