61. கடலகம் ஏழினோடும் - பாடல் 2

சண்டீசர் மிகவும் விரும்பிய ஆய்ப்பாடியில்

ஆதியும் அறிவுமாகி அறிவினுள் செறிவுமாகிச்
சோதியுள் சுடருமாகித் தூநெறிக்கு ஒருவனாகிப்
பாதியில் பெண்ணுமாகிப் பரவுவார் பாங்கராகி
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே
 

விளக்கம்

பாங்கர் = பக்கத்தில் உள்ளவர். சேய்ஞல் = சேய்ஞலூர் தலத்தைச் சார்ந்த சண்டீசர். சேய்ஞலூர், ஆப்பாடிக்கு மிகவும் அருகில் உள்ள தலமாகும். சண்டீசர் சேய்ஞலூரில் பிறந்தவர். அவர் மாடுகளை மேய்த்த இடம் ஆப்பாடி என்று அழைக்கப்பட்டது. மாடுகள் மேயத் தக்க புல்வெளிகள் நிறைந்த இடம் என்பதால் சண்டீசர் இந்த இடத்தை மிகவும் விரும்பினார். இந்த செய்தியை உணர்த்தும் வண்ணம், சேய்ஞல் விரும்பும் ஆப்பாடி என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அறிவினுள் செறிவு = சிவஞான யோகம்.

பொழிப்புரை

அனைத்து உயிர்களுக்கும், அனைத்து உலகப் பொருட்களுக்கும் ஆதியாகவும், உயிர்களின் அறிவாகவும், அந்த அறிவினுள் செறிந்து நிற்கும் சிவஞான யோகமாகவும், சோதி வடிவாகவும், சோதிக்குள் ஒளிரும் ஞானச் சுடராகவும், அனைத்து உயிர்களையும் தூய நெறிக்குச் செலுத்தும் ஒப்பற்ற ஒருவனாகவும், தனது உருவத்தில் பாதியை பெண் உருவமாகக் கொண்டவரும், தன்னை வழிபடும் அடியார்களுக்கு அருகில் இருக்கும் துணைவராகவும் விளங்கும் பெருமான், சண்டீசர் மிகவும் விரும்பிய ஆய்ப்பாடியில் கோயில் கொண்டுள்ள இறைவனாவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com