61. கடலகம் ஏழினோடும் - பாடல் 4

இந்த பாடலில் சண்டீசரின் வரலாறு

அண்டமார் அமரர் கோமான் ஆதி எம் அண்ணல் பாதம்
கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தைக்
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எரியக் கண்டு
தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே
 

விளக்கம்

இந்த பாடலில் சண்டீசரின் வரலாறு எடுத்துரைக்கப்படுகின்றது. மாடுகள் சரிவர மேய்க்கப்படாமல் துன்புறுவதைக் கண்டு மனம் இரங்கிய, விசாரசருமர் (சண்டீசரின் இயற்பெயர்), அந்த ஊரில் உள்ள மாடுகளை மேய்க்கும் பொறுப்பினைத் தானே மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார். மிகுந்த அன்புடன் அவர் மாடுகளை மேய்த்து வந்ததால் மகிழ்ந்த மாடுகள் விசாரசருமர் பால் தாம் கொண்டிருந்த அன்பினை, அவரது அருகே சென்று தாமே பாலைப் பொழிந்து வெளிப்படுத்தின. இதனை உணர்த்தும் பெரியபுராணப் பாடல், இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. பொதுவாக தனது கன்று அருகில் இருந்தால் தான் மாடுகள், எவரும் பால் கறவாது இருக்கும் நிலையிலும் பால் பொழியும். தங்களது கன்றினை விடவும் அதிகமான அன்பினை விசாரசருமர் பால் கொண்டிருந்தமையால், தங்களது கன்றுகள் அருகில் இல்லாதபோதும், மாடுகள் பாலினைப் பொழிந்தன என்று சேக்கிழார் இங்கே கூறுகின்றார். தனது கன்றுகளில் ஒன்றாக, மறை உணர்ந்த சிறுவனையும் மாடுகள் கருதின என்பதை உணர்த்தும் வண்ணம், சிறுவன் விசாரசருமனை மறைக்கன்று என்று சேக்கிழார் மிகவும் நயமாக அழைக்கின்றார்.

அனைத்துத் திறத்தும் ஆனினங்கள் அணைந்த மகிழ்ச்சி
                அளவின்றி
மனைக் கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய
                                மறைக் கன்று
தனைக் கண்டு அருகு சார்ந்து உருகித் தாயாம் தன்மை
                               நிலையினவாய்க்
கனைத்துச் சுரந்து முளைக் கண்கள் கறவாமே பால்
                           பொழிந்தனவால்    

இவ்வாறு மாடுகள் பால் பொழிந்ததைக் கண்ணுற்ற விசாரசருமர், மாடுகள் பொழியும் பால் பெருமானை நீராட்டுவதற்கு பயன்படும் என்று எண்ணினார். உடனே மணல் குவிந்திருந்த ஓர் இடத்தில் ஆத்தி மரத்தின் கீழே மணலால் இலிங்கம் செய்து இறைவனை வழிபடத் தொடங்கினார். இதனை சேக்கிழார் வாய்மொழியில் நாம் இங்கே காண்போம். புளினக்குறை என்றால் மணல் குவியல், திட்டு என்று பொருள்.

அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி
                       விளையாட்டாப்
பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளினக் குறையில்
                         ஆத்தியின் கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச்
                            சிவாலயமும்
துங்க நீடு கோபுரமும் சுற்றாலயமும் வகுத்து அமைத்தார்

இவ்வாறு மணலைக் குவித்து, அந்த மணற்குவியலை இலிங்கமாக பாவித்து விசாரசருமர் வழிபாடு செய்ததை அப்பர் பிரான் இங்கே, குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தை என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். தாபரம் = இலிங்க வடிவினில் குவிக்கப்பட்ட மணல். தண்டியார் = தனது தந்தையின் காலை வெட்டித் தண்டித்த விசாரசருமன். தந்தை என்றும் பாராமல் சிவவழிபாட்டிற்கு இடையூறு செய்ததற்கு தண்டனை வழங்கிய செயலை பாராட்டி, தண்டியார் என்று ஆர் விகுதி கொடுத்து சிறுவன் விசாரசருமனை சிறப்பித்ததை நாம் உணரலாம். அண்டம் ஆர் = அண்டங்களில் பொருந்துகின்ற.

சண்டீசர் மற்றும் கண்ணப்பர் ஆகிய இருவரும் நால்வரின் பதிகங்களில்  இடம்பெறும் பெரும் சிறப்பினை உடையவர்கள் ஆவார்கள். சண்டீசரைச் சிறப்பித்து நால்வர் பெருமானர்கள் பாடிய சில பாடல்களை நாம் இங்கே காண்போம். கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.62.4) பாடல் ஒன்றினில் சம்பந்தர் சண்டீசருக்கு இறைவன் அருளியதை குறிப்பிடுகின்றார். இறைவன் அளித்த பெயர் சண்டீசர் என்பதை சம்பந்தர் உணர்த்துவதை நாம் இந்த பாடலில் காணலாம். கொந்தணவு = பூங்கொத்தாக உள்ள மலர்கள், கொன்றை மலர். கருமம் தேர்ந்து = செயலினை அறிந்து. விசாரசருமன், மாடுகள் பொழியும் பாலினைக் கொண்டு இறைவனை .நீராட்டுவதை அறிந்த சேய்ஞலூர் அந்தணர்கள், விசாரசருமானின் தந்தை எச்சதத்தனிடம் முறையிட, எச்சதத்தன் தனது மகனின் செய்கையைக் கண்காணிக்க ஒருநாள் மகன் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இடத்திற்கு செல்கின்றான். ஆங்கே மறைந்திருந்து பார்த்தபோது, மாடுகள் தாமே வந்து நின்று குடங்களில் பால் பொழிவதையும், அந்த பாலினைக் கொண்டு விசாரசருமன் இறைவனை நீராட்டுவதையும் காண்கின்றான். இவ்வாறு அவன் மறைந்து இருந்து கண்டதை, கருமம் தேர்ந்து என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிதைப்பான் = தனது மகன் செய்து வந்த செயலைத் தடுக்கும் வண்ணம் பால் குடத்தினை இடறிய செயல் இங்கே குறிப்பிடப்படுகின்றது. பால் குடத்தினை இடறிய கால்கள் துண்டுபட்ட நிகழ்ச்சி, இறைவனின் பூசனைக்கு இடையூறு செய்யும் அங்கங்கள் தண்டனை பெறும் என்ற நியதியை நமக்கு உணர்த்தும் சரித்திரம் சண்டீசரின் சரித்திரம் ஆகும்.

வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பாலாட்டும்
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான்
                                       வரும் அத்
தந்தை தனைச் சாடுதலும் சண்டீசன் என்று அருளிக்
கொந்தணவு மலர் கொடுத்தான் கோளிலி எம் பெருமானே.

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் பாடலில் (4.62.6) சண்டீசர் செய்த வழிபாட்டினையும், அதனை மறைந்துக் கண்ணுற்ற அவனது தந்தை மகனது செயலினை, பொறாது இடையூறு செய்ததையும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆ மலி பாலும் நெய்யும் = மாடுகளை மேய்த்து கொண்டு இருக்கையில் ஆங்கே எளிதாக கிடைத்த பாலும் நெய்யும்; காட்டில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த விசாரசருமன் அங்கே கிடைத்த பொருட்களைக் கொண்டு சிவ வழிபாடு செய்தார். அவரது வழிபாட்டினைக் கண்ட பசுக்கள் தாமே சென்று அவர் மணலால் பிடித்து வழிபட்ட இலிங்கத்தின் மேல் பால் பொழிந்தன. பசுக்கள் விரும்பி பொழிந்த பால் மிகவும் அடர்த்தியாக காணப்பட்டதால், வெண்ணெய் மிதந்து அந்த பாலில் இருந்தன என்பதை உணர்த்தும் வண்ணம், ஆமலி பாலும் நெய்யும் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

ஆமலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாத தன் தாதை தாளைக்
கூர் மழு ஒன்றால் ஓச்சக் குளிர் சடைக் கொன்றை மாலைத்
தாமம் நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே

கலயநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.16.3) பாடல் ஒன்றினில், சுந்தரர் இந்த நிகழ்ச்சியை கூறுகின்றார். விடங்கன் = அழகன், தானே தோன்றியவன். இனத்து ஆ = பசுக்களின் கூட்டம். விசாரசருமர் மேய்த்த அனைத்த மாடுகளும், அவர் பால் அன்பு கொண்டு பாலினைத் தாமாகவே பொழிந்தன என்பதை உணர்த்தும் வண்ணம், இனத்து ஆ என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார். இண்டை = ஒரு வகையான முள்ளில் வளரும் பூ. காட்டில் உள்ள மேய்ச்சல் நிலத்திற்கு பசுக்களை அழைத்துச்சென்ற விசாரசருமர், அங்கே கிடைத்த பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தார் என்ற செய்தி இண்டை மலர் கொண்டு என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. இயற்றுதல் = அமைத்தல். சண்டீசன் என்ற பெயரினை அளித்த இறைவன், தேவர்கள் அனைவரும் அவரைத் தொழுது துதிக்குமாறு அண்டர் நாயகன் என்ற பதவியும் அளித்தார் என்ற செய்தியும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. சூளிகை = மாளிகைகளின் மேல் உள்ள மாடங்கள். மறுகு = தெருக்கள்.

இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கமது இயற்றி இனத்து
          ஆவின் பாலாட்ட இடறிய தாதையைத் தாள்
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்தத் தொடர்ந்து
       அவனைப் பணிக் கொண்ட விடங்கனது ஊர் வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும்
            விழவொலியும் மறுகு நிறைவெய்திக்
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரீகப் பொய்கைக்
    காரிகையார் குடைந்தாடும் கலயநல்லூர் காணே

திருவாசகம் தோள்நோக்கம் பதிகத்தில், ஈசனின் அருளால் சண்டீசர் தேவர்கள் தொழும் நிலைக்கு உயர்ந்தார் என்றும், தந்தையின் கால்களை வெட்டியது பாதகமான செயலாக கருதப்பட்டாலும் சிவவழிபாட்டிற்கு நேரவிருந்த இடையூற்றினை அகற்றியது என்பதால், அந்த செயலுக்கு பரிசாக முக்தி நிலை கிடைத்தது என்றும் மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். சோறு = முக்தி நிலை.

தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதை தனைத் தாள் இரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்

இந்த பாடலில் அப்பர் பிரான் அருள்கள் செய்த என்று பன்மைச் சொல்லினை பயன்படுத்தி உள்ளார். சண்டீசர் என்ற பெயர் அளித்தது, என் பொருட்டு தந்தையை இழந்த உனக்கு இனிமேல் நானே தந்தையாக இருப்பேன் என்று சொல்லி, இறைவன் சண்டீசரை உச்சி முகர்ந்தது, தனது தலையிலிருந்த கொன்றை மாலையை எடுத்து சண்டீசரின் தலையில் சூடியது, தனது கணங்களின் நாயகனாக நியமித்தது, ஆகியவை இறைவனின் அருட்செயல்கள் ஆகும். இதனை உணர்த்தும் பெரிய புராணப் பாடல்களை நாம் இங்கே காணலாம்.

தொடுத்த இதழி சூழ் சடையர் துணைத் தாள் நிழல் கீழ்
                விழுந்தவரை
எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ
                                     எறிந்தாய்
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள் செய்து
அணைத்து அருளி     மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து
                                 மகிழ்ந்து அருள
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி
                                     அனைத்து நாம்
உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவன அனவும்
                                       உனக்காகச்
சண்டீசனுமாம் பதம் தந்தோம் என்று அங்கு அவர்
                               பொன் தடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கி
                                        சூட்டினார்

நாம் உண்ட கலமும், உடுப்பனவும், சூடுவன அனைத்தும் உனக்காக என்று இறைவன் கூறியதால்தான், இன்றும் நாம் அனைத்து சிவாலயங்களிலும் பெருமானுக்கு இடது புறத்தில் சண்டீசரின் சன்னதி இருப்பதை காணலாம். தான் பெரும் ஆடைகள், அணிகள், நிவேதனப் பொருட்கள் அனைத்தையும், தனது வலது கையால் இறைவன் சண்டீசர் இருக்கும் இடத்திற்கு தள்ளுவதற்கு ஏதுவாக இந்த அமைப்பு உள்ளது.

பொழிப்புரை

பல அண்டங்களில் பொருந்துகின்ற தேவர்களுக்கு தலைவனாக விளங்குகின்ற பெருமானின் திருவடிகளைத் தனது மனதில் கொண்டு, குவிக்கப்பட்ட மணலினை இலிங்கமாக பாவித்து வழிபட்ட சிறுவன் விசாரசருமனின் செயலைக் கண்டு மனம் பொறாத அவனது தந்தை, சிறுவன் செய்த பூசையினை தடுக்கும் பொருட்டு பாய்ந்து குடங்களில் நிரம்பியிருந்த பாலினை இடறி கீழே கொட்ட,, அதற்கு தண்டனையாக தனது தந்தை என்றும் பாராமல் அவரது கால்களை வெட்டிய செயலைக் கண்டு, தந்தையைத் தண்டித்த சிறுவனுக்கு பலவிதங்களிலும் அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியில் உறைகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com