61. கடலகம் ஏழினோடும் - பாடல் 10

பண்ணுடன் இசைந்த சாம கானத்தைப் பாட

திண்திறல் அரக்கன் ஓடிச் சீ கயிலாயம் தன்னை
எண்திறல் இலனுமாகி எடுத்தலும் ஏழை அஞ்ச
விண்திறல் நெரிய ஊன்றி மிகக் கடுத்து அலறி
                                வீழப்
பண்திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே
 

விளக்கம்

திண்திறல் = உறுதியான வலிமை. சீ = ஸ்ரீ என்ற வடமொழிச் சொல் தமிழாக்கப்பட்டுள்ளது. திரு என்ற பொருளில் வந்தது. எண்திறல் = பெருமையை எண்ணி அறியும் திறமை. விண்டுதல் = நீங்குதல். விண்திறல் = வலிமை விட்டு நீங்கும் வண்ணம்.

பொழிப்புரை

மிகுந்த வலிமை உடைய அரக்கன் இராவணன், திருக் கயிலாய மலையின் சிறந்த பெருமையினை எண்ணி அறிந்து உணரும் திறன் இல்லாதவனாக, அந்த மலை தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி, அதனை எடுக்க முயற்சி செய்த அளவில், மலையின் மேல் அமர்ந்திருந்த அன்னை பார்வதி தேவி மலை ஆடியதால் அச்சம் உற்றாள். அதனைக் கண்ணுற்ற பெருமான், அரக்கனது உடல் வலிமை அவனை விட்டு நீங்குமாறு, தனது கால் பெருவிரலை மலையின் மீது அழுத்தி, மலையின் கீழே அரக்கனது உடல் நசுங்கி வருத்தமுறச் செய்தார். இதனால் மிகுந்த சினம் கொண்ட அரக்கன், தான் ஏதும் செய்ய இயலாத நிலையில், தனது உடல் வருத்தத்தைத் தாங்க முடியாமல், செய்வதறியாது கதறினான், தனது நிலை குலைந்து கீழே வீழ்ந்தான். பின்னர் பண்ணுடன் இசைந்த சாம கானத்தைப் பாட, அதனைக் கேட்டு மகிழ்ந்த பரமன், அரக்கனை வருத்தத்திலிருந்து விடுவித்து மேலும் பல வரங்களையும் அரக்கனுக்கு அருளினார். இவ்வாறு பாடல் உகந்த நாதராகத் திகழும் இறைவன் ஆப்பாடி தலத்தில் உறைகின்றார்.

முடிவுரை

தலத்து இறைவனின் பெயர் பாலுகந்த நாதர் என்பதாகும். சண்டீசர் மாடுகளை மேய்த்த இடம் என்பதால், சண்டீசர் அபிடேகம் செய்த பாலினை மிகவும் மகிழ்ந்து ஏற்றதால் இந்த பெயர் வந்தது என்று கொள்வதும் பொருத்தமே. திருக்கோயிலின் வடபுறத்தில், சண்டீசர் இலிங்கம் அமைத்து வழிபட நிழல் கொடுத்த ஆத்தி மரம் தலமரமாக உள்ளது. இந்த பெயர் வந்ததற்கு வேறொரு கர்ண பரம்பரைக் கதையும் சொல்லப் படுகின்றது. இடையன் ஒருவன் தினமும், தான் கறந்த பாலினை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் இந்த இடத்தில் இடறி கீழே விழ, பால் சிந்துவதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நிலத்தினை கொடுவாளால் நிலத்தினை நோண்ட, அங்கே குருதி கொப்பளித்தது. உடனே ஆங்கே இறைவன் இருப்பதை உணர்ந்த இடையன், பாலுக்கு உகந்த நாதரோ என்று கதறி தொழுதமையால் பாலுகந்த நாதர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள்.

ஆனால் அப்பர் பிரானின் இந்த பதிகத்தின் குறிப்புகள் நம்மை வேறுவிதமாக நினைக்கத் தூண்டுகின்றன. பதிகத்தின் மூன்றாவது பாடலில், பண்ணொடு பாடல் தன்னை பரவுவார் பாங்கர் (பண்ணுடன் பாடல்களை இசைத்துப் பாடும் அடியார்களுக்கு நெருக்கமாக உள்ளவர்) என்றும், ஆறாவது பாடலில் இன்னிசைத் தொண்டர் பாட இருந்த ஆப்பாடியார் என்றும், ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரமனும் காணா வகை நின்ற சிறப்பினைப் புகழ்ந்து பாடி வணங்கும் தொண்டர்களுக்கு பேரருள் செய்பவர் என்றும் பத்தாவது பாடலில் பண் திறல் கேட்டு உகந்த பரமர் என்று குறிப்பிடுவதை நோக்குகையில், பாடல் உகந்த நாதர் என்பது தான் இங்குள்ள இறைவனின் திருப்பெயரோ என்றும் அந்த பெயர் தான் பாலுகந்த நாதர் என்று நாளடைவில் மருவி விட்டதோ என்று நமக்குத் தோன்றுகின்றது. எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டுமே, நாம் பாலினை இறைவனின் திருமேனியில் ஊற்றி அபிடேகம் செய்தும், அவரது சிறப்புகளை இசை கலந்த பாடலாக பாடியும் அவரது உடலையும் உள்ளத்தையும் குளிரவைத்து அவரது அருளினைப் பெறலாமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com