62. தங்கலப்பிய தக்கன் - பாடல் 1

திருமங்கலக்குடி தலத்தில் எழுந்தருளி

(திருமங்கலக்குடி – குறுந்தொகை)

முன்னுரை
கும்பகோணம் மயிலாடுதுறை பாதையில் கதிராமங்கலம் தலத்திற்கு அருகில் உள்ள தலம். நவகிரகத் தலங்களின் வரிசையில் முதலாவதாக கருதப்படும் சூரியனார் கோயில் தலத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. சம்பந்தர் மற்றும் அப்பர் பிரான் அருளிய பதிகங்கள் (மொத்தம் இரண்டு) நமக்கு கிடைத்துள்ளன. அப்பர் பிரான் இந்த தலம் சென்றதாக பெரிய புராணக் குறிப்புகள் இல்லை; எனினும் செம்பொனார்கோயில், துருத்தி (இன்று குத்தாலம் என்று அழைக்கப்படும் தலம்) ஆகிய தலங்கள் சென்றபோது இங்கும் சென்றிருக்க வேண்டும் என்று பெரிய புராண உரை ஆசிரியர்கள் கருதுகின்றனர். இந்த கோயிலில் உள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் நண்பகலில் அபிஷேகம் செய்யப்படுகின்றது.

பாடல் 1

தங்கலப்பிய தக்கன் பெரு வேள்வி
அங்கு அலக்கழித்து ஆரருள் செய்தவன்
கொங்கலர்க் குழல் கொம்பனையாளொடு 
மங்கலக்குடி மேய மணாளனே
 



விளக்கம்

தங்கலப்பிய = தம்+கலப்பிய, உறவினால் தன்னுள் கலந்த. தக்கன் தனக்கு மாமன் என்பதால், பெருமான் தக்கன் செய்த தவற்றினை கண்டிக்கத் தவறவில்லை. இதனை உணர்த்தும் முகமாகவே அப்பர் பிரான், இந்த பாடலில் தக்கனை பெருமானுக்கு உறவினன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானை புறக்கணித்து தக்கன் யாகம் செய்யத் துணிந்ததற்கு காரணம் மிகவும் விளக்கமாக கந்த புராணத்தில் சொல்லப்படுகின்றது. ஒருமுறை தனது மகளையும் மாப்பிள்ளையாகிய பெருமானையும் காண்பதற்காக தக்கன் கயிலாயம் சென்றபோது, வாயில் காப்பாளராக இருந்த நந்தி தேவர், பெருமானின் அனுமதி பெற்ற பின்னர் உள்ளே செல்லலாம் என்று கூறியதை தனக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாக தக்கன் கருதினான். இந்த நிகழ்ச்சிக்கு சில நாட்கள் கழித்து, பிரமதேவன் தொடங்கிய யாகத்திற்கு, பெருமானின் பிரதிநிதியாக நந்திதேவர் வந்திருந்தார். யாகத்திற்கு வந்த நந்திதேவரை முறைப்படி வரவேற்று உபசரித்த பிரமன், அவருக்கு மிகவும் உயர்ந்த ஆசனத்தை அளித்து கௌரவித்தார். இதனைக் கண்டு கோபம் கொண்ட தக்கன், தன்னை அவமதித்த பெருமானுக்கு அவிர்ப்பாகம் கொடுக்கக் கூடாது என்று வற்புறுத்தினான். பெருமானுக்கு அவிர்ப்பாகம் கொடுக்காமல் நடத்தப்படும் யாகம் அழிக்கப்படும் என்று நந்திதேவர் கூறவே, தக்கனுக்கும் நந்திதேவருக்கும் பயந்த பிரமன், யாகத்தை பாதியில் நிறுத்திவிட்டார். இதே பயத்தின் காரணமாக, எவரும் சில காலம் வேள்விகள் செய்யாமல் இருந்து வந்தனர். பெருமானை புறக்கணித்து யாகம் செய்து உலகிற்கு முன்மாதிரியாக இருக்க நினைத்த தக்கன் வேள்வி செய்ய தீர்மானித்தான். பெருமானுக்கும் தனது மகள் தாட்சாயணிக்கும் அழைப்பு விடுக்காமல், தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் தக்கன் தான் நடத்தவிருந்த யாகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தான். நாரதர், அகத்தியர், சனகாதி முனிவர்கள் நால்வர், வசிட்டர், அத்ரி, பிருகு, பராசரர், துர்வாசர் உள்ளிட்ட பல முனிவர்கள் தக்கனின் அழைப்பினைப் புறக்கணித்து யாகத்திற்கு வராமல் இருந்தார்கள். ததீசி முனிவர், யாகம் நடைபெறும் இடத்திற்கு வந்து தக்கனுக்கு அறிவுரை கூறி, பெருமானை யாகத்திற்கு வரவழைக்க முயற்சி செய்தார், மேலும் பெருமானை புறக்கணித்து செய்யப்படும் யாகம் பலன் அளிக்காது என்றும், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு விரோதமானது என்றும், அவ்வாறு செய்யப்படும் யாகம் பல தீங்குகளை விளைவிக்கும் என்று எடுத்துக் கூறினார். ஆனால் பிடிவாதமாக இருந்த தக்கன் அவரது அறிவுரையை ஏற்க மறுத்து யாகத்தைத் தொடங்கவே, ததீசி முனிவரும் யாகத்தினைப் புறக்கணித்து சென்று விட்டார். எனவே தவறான முன்மாதிரியாக விளங்கவிருந்த இந்த யாகத்தை அழிப்பது, வேதங்களின் நாயகனான பெருமானின் கடமையாக மாறிவிடுகின்றது. 

அலக்கழித்து = சின்னா பின்னம் செய்து, வேள்வி தொடர்ந்து நடைபெறாத வகையில், வேள்விக்கு சேமிக்க வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வேள்விச்சாலை எங்கும் சிதறின. தக்கன், வேள்வித் தலைவன், அக்னி, சூரியன், சந்திரன் உட்பட பல தேவர்கள், யாகத்தில் பங்கு பெற்றதற்காக தண்டனை அடைந்தனர். ஆனால் வீரபத்திரர் எவரையும் கொல்லவில்லை. இவ்வாறு எவரது உயிரினையும் அழிக்காமல் தண்டனை மட்டும் அளித்ததை, இறைவன் செய்த அருள் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தக்கன் தனது தலையை இழந்தபோதிலும், ஒரு ஆட்டின் தலை அவனுக்கு பொருத்தப்பட்டு, அவன் உயிருடன் வாழ வகை செய்யப்படுகின்றது. தக்கனும் தனது தவறினை உணர்ந்து சிவபெருமானை புகழ்ந்து பாடுகின்றான். யசுர் வேதத்தின் ஒரு பகுதியான ஸ்ரீருத்ரத்தின் ஒரு பகுதி தக்கன் பெருமானைப் புகழ்ந்து கூறிய சொற்களாக கருதப் படுகின்றன. இந்த பகுதியில் அனைத்துச் சொற்களும் மே என்று ஆடு கத்துவது போன்று முடிவதை நாம் உணரலாம். ஆட்டின் தலை தக்கனுக்கு பொருத்தப்படுவதை, மணிவாசகர் திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தில் கூறுகின்றார். நாம் பிறக்கும்பொழுதே நமது எதிர்காலம், நமது தலையில் பிரமன் எழுதப்படும் எழுத்தினால் தீர்மானிக்கப்படுவதால், பிரமனுக்கு விதி என்ற பெயர் உள்ளது. பிரமனின் மகனாகிய தக்கன் அதே பெயருடன் இங்கே அழைக்கப்படுகின்றான். தன்னை அனைவரின் முன்னிலையிலும் வெகுவாக அவமதித்தவனை, தனது மனைவியை ஏசியவனை, அவன் தலையினை இழந்த பின்னரும் அவன் உயிருடன் வாழும் வண்ணம் ஆட்டின் தலையைப் பொருத்தி வாழ வகை செய்தது தலை சிறந்த கருணைச் செயல் அல்லவா. அத்தகைய நல்ல நெஞ்சினை உடையவராக இருந்த பெருமான், பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று பாரதி பாடுவதற்கு காரணமாக இருந்தாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. நாம் சற்று சிந்தித்தால் இறைவனுக்கு பகைவர் என்றும் உற்றார் என்றும் எவரும் இல்லை என்பது நமக்கு விளங்கும். 

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாக
கூட்டியவா பாடி உந்தீ பற
கொங்கை குலுங்க நின்று உந்தீ பற 

கொங்கு = தேன். அலர் = மலர். குழல் = கூந்தல். கொம்பு அனையாள் = பூங்கொம்பு போன்ற மென்மையான உடலை உடைய உமை அம்மை.

பொழிப்புரை

உறவினனாக தன்னுடன் கலந்த தக்கன் என்பதையும் கருதாமல், அவன் தவறான முறையில் வேள்வி செய்ய முற்பட்டபோது, அந்த வேள்வியை அழித்து தடை செய்தவன் பெருமான். சிவபெருமானை புறக்கணித்து தான் செய்யும் வேள்வி சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கருதிய தக்கன், மிகவும் பிரம்மாண்டமான அளவில் யாகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து, பலத்த பாதுகாப்பையும் செய்யப்பட்டிருந்த பெரு வேள்வியாக அந்த வேள்வி இருந்தபோதிலும் அதனை அழித்த பெருமான், வேள்வியில் பங்கேற்ற எவரையும் கொல்லாமல் அருள் செய்தான். அவன்தான், தேன் நிறைந்ததும் நறுமணம் மிகுந்ததும் ஆகிய மலர்களை அணிந்த கூந்தலை உடையவளும், பூங்கொம்பு போன்று மென்மையான உடலினை உடையவளும் ஆகிய உமையம்மையுடன் திருமங்கலக்குடி தலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் ஆவான். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com