62. தங்கலப்பிய தக்கன் - பாடல் 3

வினைப்பயனை நுகர்வதை தடுக்கும்

மங்கலக்குடி ஈசனை மாகாளி
வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணும் நேர்
சங்கு சக்கரதாரி சதுர்முகன்
அங்கு அகத்தியனும் அருச்சித்தார் அன்றே
 

விளக்கம்    

மாகாளி = பெருமைக்கு உரிய காளி தேவி. வெங்கதிர்ச் செல்வன் = சூரியன். விண்ணொடு மண்ணும் = விண்ணுலகத்தில் உள்ளவர்களும் மண்ணுலகத்தில் உள்ளவர்களும். நேர் = நேர்ந்து கொண்டு.

இந்த பாடலில் சூரியன் வழிபடுவதாக அப்பர் பிரான் கூறுவது ஒரு முக்கியமான செய்தியை நமக்கு உணர்த்துகின்றது. திருமங்கலக்குடி தலத்திற்கு மிகவும் அருகில் (இரண்டு கி.மீ. தூரத்தில்) அமைந்துள்ள தலம் சூரியனார் கோயில் எனப்படும் தலம். நவகிரக தலங்களில் சூரியனுக்கு உரிய தலமாக கருதப்படும் இங்கே, மற்ற கிரகங்களுக்கும் தனித் தனியாக சன்னதிகள் உள்ளன. முன்னொரு காலத்தில் வாழ்ந்துவந்த காலவ முனிவர் என்பவர், தனது ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பினை ஆராய்ந்து, தனக்கு தொழு நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து கொண்டார். அவர் ஒன்பது கோள்களையும் நோக்கி தவம் இருந்தார். அவரது தவத்தினால் மகிழ்ந்த கோள்கள், தங்களது சேர்க்கையால் அவருக்கு எந்த கெடுதியும் ஏற்பாடாது என்று உறுதி அளித்தனர். முனிவரும் மனம் மகிழ்ந்தார். ஆனால் முனிவருக்கு வரம் அளித்த கோள்களை அழைத்த பிரமன், கோள்களை கடிந்தார். உயிர்கள் ஈட்டிய வினைகளின் பயனாக உள்ள ஜாதக அமைப்பின் வழியே, அந்த அமைப்புக்கு உரிய பலன்களை அளிப்பதுதான் கோள்களின் கடமை என்றும், தங்கள் விருப்பப்படி அந்த அமைப்பினை மாற்றி அமைத்து உயிர்கள் வினைப்பயனை நுகர்வதை தடுக்கும் வல்லமை கோள்களுக்கு இல்லை என்றும் எடுத்துரைத்த அவர், முனிவருக்கு விலக்கு அளித்த தொழு நோயினால் கோள்கள் அவதியுற வேண்டும் என்ற சாபத்தை அளித்தார். மேலும் வினைகளின் பயனை உயிர்கள் நுகராமல் தடுக்கும் வல்லமை பெருமான் ஒருவனுக்கே உண்டு என்பதையும் பிரமன் உணர்த்தினார். தங்களது கடமையை சரியாக புரிந்துகொள்ளாமல், தங்களது வரம்பினை மீறி தாங்கள் முனிவருக்கு அளித்த வரம் அளித்த செய்கைக்கு மனம் வருந்திய கோள்கள், சூரியனார் கோயிலில் தங்கி சிவபெருமானை வழிபட்டார்கள். தினமும் நண்பகலில், அருகில் இருக்கும் திருமங்கலக்குடி திருக்கோயிலில் இருக்கும் இறைவனுக்கு நிவேதனமாக படைக்கப்பட்ட தயிர் சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து உண்டார்கள். இவ்வாறு ஒரு மண்டலம் (நாற்பத்தெட்டு நாட்கள்) மங்கலக்குடி இறைவனை வழிபட்ட பின்னர், தங்களை வருத்திய தொழுநோயிலிருந்து விடுபட்டார்கள். இந்த தகவல் சூரியனார் கோயிலில் உள்ள அறிவிப்பு பலகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலக்குடி கோயிலின் நவக்ரக சன்னதியாக சூரியனார் கோயில் கருதப்படுவதால் தனியாக நவகிரக சன்னதி திருமங்கலக்குடி கோயிலில் இல்லை. அதனால் திருமங்கலக்குடி இறைவனை வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் செல்ல வேண்டும் என்றும் பெரியோர்கள் கூறுவார்கள். சூரியன் என்று குறிப்பிட்டு சூரியன் உள்ளிட்ட ஒன்பது கிரகங்களும் வழிபட்ட செய்தியை அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் நமக்கு தெரிவிக்கின்றார். 

சூரியன் வழிபட்ட பெருமையினை உடைய தலங்களை பாஸ்கர க்ஷேத்திரங்கள் என்று கூறுவார்கள். அவையாவன - திருமங்கலக்குடி, நன்னிலம் அருகில் உள்ள சிறுகுடி, நீடாமங்கலம் அருகில் உள்ள பரிதி நியமம், சென்னை செங்குன்றம் அருகில் உள்ள தலை ஞாயிறு, நீடாமங்கலம் அருகில் உள்ள பரிதி நியமம்.

பொழிப்புரை

மங்கலக்குடி தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை, பெருமைக்குரிய காளியும், வெப்பத்தை உண்டாக்கும் கதிர்களை உடைய சூரியன் முதலாய ஒன்பது கோள்களும், விண்ணுலகம் மற்றும் உள்ள மண்ணுலகத்தில் உள்ள அனைவரும் வணங்குகின்றனர். சங்கு சக்கரத்தினைத் தாங்கியுள்ள திருமாலும், பிரமனும், முனிவர் அகத்தியரும், நேர்ந்துகொண்டு, இறைவனை பூக்கள் தூவி அர்ச்சனை செய்து வழிபட்டார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com